Advertisements

திருவாரூர் தேர்தல் ரத்து… தி.மு.க-வில் நடந்த உள்குத்து!

ளைப்புடன் வந்த கழுகாரிடம், கருப்பட்டிக் காபியைக் கொடுத்துவிட்டு, “இடைத்தேர்தலை இடைமறித்துவிட்டதே தேர்தல் ஆணையம்?” என்றோம்.

‘‘கஜா புயலின் வடுவே ஆறாத நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அப்போதே அதற்கு, கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, ‘திருவாரூருக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவித்தது மத்திய, மாநில அரசுகளின் கூட்டுச்சதி’ என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கொந்தளித்துப் பேட்டி கொடுத்தார். இந்த தேர்தல் அறிவிப்பை பிஸியாக எதிர்கொண்ட ஒரே கட்சி தினகரனின் அ.ம.மு.க மட்டுமே. இந்நிலையில்தான், திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையை ஏற்றுத் தேர்தலை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். ஆனால், இதற்கு முன்பும் பின்புமாக நடந்த சில சம்பவங்களையும் பார்க்க வேண்டியுள்ளது.’’

‘‘எதைச் சொல்கிறீர் நீர்?’’

‘‘தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கடந்த டிசம்பர் 3-ம் தேதி அன்றே, தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதி, ‘வரும் ஏப்ரல்வரை இடைத்தேர்தல் நடத்த வேண்டாம். திருவாரூரில், இயல்பு நிலை திரும்ப மூன்று மாதங்கள் ஆகும். அதனால், திருப்பரங்குன்றம் தவிர மற்ற 19 தொகுதிகளுக்கும் ஏப்ரல்வரை தேர்தல் வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டதால்தான், தேர்தலைத் தள்ளி வைத்திருக்கிறார்களாம். இந்தத் தகவல் ஆளும் தரப்புக்கு ஏற்கெனவே தெரிந்துதான் வேட்பாளரை அறிவிக்காமல் இழுத்திருக்கிறார்கள்.’’

‘‘அ.தி.மு.க வேட்பாளர் தேர்வு தள்ளிப்போனதற்கு, இதுமட்டும்தான் காரணமா?’’

‘‘இதுமட்டுமல்ல… தேர்தல் ஆணையத்தின் கடிதம், கடந்த 6-ம் தேதியே ரெடியாகி விட்டது. அதை, ‘அ.தி.மு.க தரப்பு ஸ்மெல் செய்துவிட்டார்கள்’ என்கிறார்கள். இதுதெரிந்துதான் வேட்பாளர் அறிவிப்பைத் தாமதப்படுத்தியுள்ளனர்.’’

‘‘ஓஹோ…”

‘‘ஆமாம்… திருவாரூர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே அ.தி.மு.க தரப்பு தேர்தல் வேலைகளில் சுறுசுறுப்பு காட்டவில்லை. இதையெல்லாம் தி.மு.க தரப்பும், தினகரன் தரப்பும் கவனிக்கத் தவறவில்லை. அதேபோல், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதல்வரை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் சந்தித்துப் பேசினர். தேர்தலில் போட்டியிடுவது பற்றிக் கட்சித் தலைமை முடிவு செய்யும் என்று பி.ஜே.பி-யும் இழுத்தது. இதையெல்லாம் முன்வைத்துப் பேசுபவர்கள், ‘இடைத்தேர்தல் தள்ளிவைப்பு குறித்த தகவல் அ.தி.மு.க தரப்புக்கு முன்பே வந்துவிட்டது’ என்கிறார்கள். இறுதியில், அனைத்துக் கட்சியினரும் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்ததைக் காரணம் காட்டி, தேர்தலைத் தள்ளி வைத்துவிட்டது தேர்தல் ஆணையம்.’’

 

‘‘வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா?’’

‘‘கட்சிகளைவிட, மக்களும் தேர்தலை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை என்று உள்துறையின் அறிக்கையும் கூறியுள்ளது. இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.’’

‘‘ஸ்டாலின் சொல்வதைக் கவனித்தீரா… அவர் சொல்வதைப்போல மினி சட்டமன்றத் தேர்தல் நடக்குமா?’’

‘‘அது அவரது விருப்பம்… தேர்தல் தள்ளிவைப்பு அறிவிப்பு வந்ததும், உற்சாகமான தி.மு.க தலைவர் ஸ்டாலின், தேர்தல் தள்ளிவைப்பை வரவேற்றுவிட்டு, ‘வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலோடு 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தி, மினி சட்டமன்றத் தேர்தலாகத் தேர்தல் ஆணையம் நடத்தவேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். அது நடக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.’’

‘‘அது இருக்கட்டும், தி.மு.க முகாமில் திருவாரூர் தொகுதியில் உள்குத்து நடந்ததாமே?’’

‘‘பூண்டி கலைவாணனை வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பு, அவரிடம் தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர் தொடர்புகொண்டு, ‘தலைவர் குடும்பத்திலிருந்து இங்கு யாராவது நிற்கும் சூழ்நிலை இருப்பதால், நீங்கள் பணம் கட்ட வேண்டாம்’ என்று சொல்லியுள்ளார். அதற்கு அவர், ‘தலைவர் நின்றால் மட்டும் தொகுதியை விட்டுத்தருவேன். இல்லையென்றால் நான் போட்டியில் குதிப்பேன்’ என்றாராம் தடாலடியாக. விஷயம், ஸ்டாலின் கவனத்துக்குச் சென்று அதிர்ச்சியடைந்து விசாரித்தாராம். அப்போது திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க மூத்த தலைவர் ஒருவர், தன் வாரிசு அந்த மாவட்டத்தில் கோலோச்சுவதற்கு, கலைவாணன் போட்டியாக வந்துவிடக்கூடாது என்று இப்படி உள்குத்து வேலை செய்தது தெரியவந்துள்ளது. அதற்குப் பின்பு, கலைவாணனை வேட்பாளராக அறிவித்ததுடன், அந்த மூத்த நிர்வாகியை நேரடியாகக் கூப்பிட்டுக் கடுமையாகக் கண்டித்தாராம் ஸ்டாலின்.’’

‘‘தினகரன் தரப்பு மட்டும்தான், தேர்தல் தள்ளிவைப்பை எதிர்த்துள்ளதோ?’’

“ஆமாம்… அவர்கள்தான் ரொம்பவே அப்செட் ஆகியிருக்கிறார்கள். தேர்தல் வேலைகளைத் தீவிரமாகத் தொடங்கி, பூத் வாரியாக ஐம்பது ஓட்டுகளுக்கு ஒரு பொறுப்பாளர் என்று 333 பூத்களுக்கும் ஆட்களை நியமித்தார்கள். ஒரு லட்சம் வாக்காளர்களைக் கவர்வதற்குத் திட்டம் எல்லாம் தீட்டியிருந்தார்கள். அதுவுமில்லாமல் இப்போதே கணிசமாகச் செலவும் செய்துவிட்டார்கள். வேட்பாளர் காமராஜுவும் பெரிய தொகையைக் களத்தில் இறைத்துவிட்டாராம்.”

‘‘ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதே?’’

‘‘அதைத்தான் கவர் ஸ்டோரியாக உமது நிருபர் சொல்லியிருக்கிறாரே. கச்சிதமாக இருக்கிறது கட்டுரை. அதில் இன்னொரு தகவலை மட்டும் உமக்குச் சொல்கிறேன். ஐ.ஏ.எஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் மீது அமைச்சர் சண்முகம் பாய்வதன் பின்னணியில் மற்றொரு காரணமும் சொல்கிறார்கள். ‘சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் சண்முகத்தின் உறவினர் என்று சொல்லிச் சுகாதாரத்துறை அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியானது. இந்த விவகாரத்தில் வைத்தியநாதன் என்பவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவர் அமைச்சர் குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்பதால், அமைச்சர் தரப்பு இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது என்கிறார்கள். ஆனால், ராதாகிருஷ்ணன் தரப்பு சரியான ரெஸ்பான்ஸ் கொடுக்கவில்லையாம். அந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான், சண்முகத்தின் பாய்ச்சல் என்கிறார்கள். இந்த உள் விவகாரங்கள் தெரிந்துதான் ஐ.ஏ.எஸ் சங்கத்தின் தீர்மானம், ‘அமைச்சர்களைக் கட்டுப்படுத்துங்கள்’ என்று சொல்லியிருக்கிறது’’

‘‘அதற்கு, சி.வி.சண்முகம் தரப்பும் பதில் சொல்லியுள்ளதே?’’

‘‘தீர்மானம் பற்றித் தெரிந்ததும், மிகவும் கோபமான சி.வி.சண்முகம், ‘ஜனநாயக அமைப்பில் யாரையும் யாரும் கேள்வி கேட்கலாம். ஓர் அமைச்சர் கேள்வி கேட்டால், அதற்குப் பதில் சொல்வதுதான் அதிகாரியின் பொறுப்பு. மாறாக, அமைச்சர்களையே மிரட்டுவது சரியல்ல’ என்று பேட்டி கொடுத்தார் காட்டமாக.”

‘‘அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் பதவி பறிபோய்விடும் போலிருக்கிறதே?’’

‘‘நிறைய வாய்ப்பு இருக்கிறது. 1998-ல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடியது. அப்பாவி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கள்ளச் சாராயத்தைத் தடுக்கவேண்டிய போலீஸ் வேடிக்கை மட்டுமே பார்த்தது. அதனால், கொதித்துப்போன ஜீமங்கலம் கிராம மக்கள், பி.ஜே.பி பிரமுகர் கோவிந்தரெட்டி தலைமையில் திரண்டு, பாகலூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகை யிட்டனர். கலவரம் வெடித்து, போலீஸ் ஜீப் கொளுத்தப்பட்டது. அந்தச் சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது பாலகிருஷ்ண ரெட்டி, பி.ஜே.பி-யில் இருந்தார். போலீஸ் ஜீப்பை எரித்த வழக்கில், அவரும் சேர்க்கப் பட்டிருந்தார். அதற்குப் பின்புதான், அ.தி.மு.க-வில் இணைந்து, எம்.எல்.ஏ-வாகி, அமைச்சராகிவிட்டார். என்றைக்கோ செய்த போராட்டம், இன்றைக்கு வினையாகிவிட்டது. அவருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது சிறப்பு நீதிமன்றம். இரண்டு ஆண்டுகளுக்குமேல் தண்டனை பெற்றால் அமைச்சர் பதவியுடன், எம்.எல்.ஏ பதவியும் பறிபோய்விடும். எனவே அவர் 7-ம் தேதி இரவே ராஜினாமா செய்ததாகப் பரபரப்பு எழுந்தது.  ஆக, இடைத் தேர்தல் நடத்தவேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை 21-ஆக உயர்கிறது!’’ என்ற கழுகார், வேகமாகப் பறந்தார்.

Advertisements

One response

  1. சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க Absolute majority என்கிறார்களே அப்படின்னா என்ன இப்ப தமிழகத்தல் அது பொருந்துமா SARAVANAN B M

%d bloggers like this: