Advertisements

கொ(ட)லைநாடு! – ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி?

பகீர் பராக்…’’ கரகர குரல் வந்த திசையை நோக்கினால், முகம் நிறையப் பீதியுடன் நுழைந்து கொண்டிருந்தார் கழுகார்.

‘‘நீர், ‘பேட்ட’ படத்தைப் பார்த்துவிட்டது தெரிகிறது. ஆனால், ‘பகீர் பராக்’ என்கிற முன்னோட்டம்… கூடவே முகம் முழுக்கப் பீதி…’’ ஏன் என்று கேட்டோம்.

மேசையில் இருந்த ஒரு பாட்டில் தண்ணீரையும் ‘மொடக்… மொடக்’ என்று குடித்துமுடித்த கழுகார், ‘‘எல்லாம்தான் கேள்விப் பட்டிருப்பீரே. தெஹல்கா இணைய தளத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் பற்றவைத்திருக்கும் திரி, எடப்பாடியின்

தூக்கத்தைத் தொலைக்க வைத்துள்ளது. ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில், அவரது மறைவுக்குப் பின்னர் 2017 ஏப்ரல் 23-ல் கொலை நடந்தது. நேபாளத்தைச் சேர்ந்த ஓம் பகதூர் என்ற காவலாளி கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளி கடுமையாகத் தாக்கப் பட்டார். முக்கியமான ஆவணங்கள் சில திருடப் பட்டதாகவும் அப்போது திக்திக் செய்திகள் வந்தன.’’

‘‘அடுத்தடுத்துகூட…’’

‘‘பொறுமை… பொறுமை… அதைச் சொல்லத் தானே நான் இருக்கிறேன். அடுத்தடுத்த நாள்களிலேயே முதல் குற்றவாளியாகக் கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், ஏப்ரல் 28-ம் தேதி ஆத்தூர் அருகே கார் விபத்தில் பலியானார். சில மணி நேரத்திலேயே இரண்டாவதுக் குற்றவாளியான ஷயான் பயணம் செய்த கார், பாலக்காட்டில் விபத்தில் சிக்கியது. அதில் தன் மனைவி விஷ்ணுபிரியா, மகள் நீத்துவைப் பறிகொடுத்த அவர், பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். இப்போது இந்த ஷயான், மேத்யூவிடம் தஞ்சமடைந்துள்ளார். மேலும் அவர், எடப்பாடிக்கு எதிராகப் பேச ஆரம்பித்திருக்கிறார்.”

“ஓ…?”

“இதுதொடர்பாக, தான் கொடுத்திருக்கும் பேட்டியின் ஆரம்பத்திலேயே, ‘கொடநாடு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்பு உண்டு’ என்று அதிர வைத்துள்ளார் மேத்யூ. தான் ஆவணப்படுத்திய சாட்சிகளின் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். கொடநாடு பங்களாவில் ஆவணங்களைக் கொள்ளையடிக்கச் சென்றபோது, ‘எடப்பாடி பழனிசாமிக்காகத்தான் இக்காரியத்தைச் செய்கிறோம், எதற்கும் நாம் பயப்படத் தேவையில்லை’ என்று கனகராஜ் தன்னிடம் கூறியதாக வீடியோக்களில் ஷயான் கூறுகிறார். ‘ஜெயலலிதாவின் இரும்புக் கோட்டையாகக் கருதப்பட்ட அந்த எஸ்டேட். பலத்த பாதுகாப்பு வளையம் கொண்டது. அதையெல்லாம் மீறி எப்படி உள்ளே சென்றீர்கள்?’ என்ற கேள்விக்கும் தெளிவாகப் பதில் சொல்லியுள்ளார்.”

 

“அதென்ன பதில்?”

“கொடநாடு எஸ்டேட் மொத்தப் பரப்பளவு 900 ஏக்கர். இதன் மையப் பகுதியில் 99 அறைகளுடன் கூடிய பிரமாண்ட மாளிகைதான் ஜெயலலிதாவின் பங்களா. இதைச் சுற்றி 28 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ‘நாங்கள் சென்றபோது சி.சி.டி.வி கேமராக்கள் அனைத்து வைக்கப்பட்டிருந்தன’ என்று சொல்லியுள்ளார் ஷயான். ‘பங்களாவுக்குள் இருந்த ஆவணங்களை மட்டும் பையில் எடுத்துக்கொண்ட கனகராஜ், பணம் ஏதும் எடுக்காமல் திரும்பிவிட்டார்’ என்றும் கூறியுள்ளார். ‘ஆவணங்களை யாரிடம் அவர் கொடுத்தார் என்பது தெரியாது. ஆனால், இந்த வேலைக்காக 5 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டது. இதற்காக கேரளாவிலிருந்து 10 பேரை அழைத்து வந்திருந்தேன். ஆனால், பேசிய பணத்தைத் தரும் முன்பே கனகராஜ் இறந்துவிட்டார்’ என ஷயான் கூறுகிறார்.”

“இவர் மட்டும்தான் பேசியுள்ளாரா?”

“மூன்றாவதுக் குற்றவாளியான வாளையார் மனோஜும் பேசியுள்ளார். ‘கனகராஜ், ஷயான், ஜம்ஷீர் ஆகிய மூன்று பேருடன் நானும் பங்களா வுக்குள் நுழைந்தேன். 2,000 கோடி ரூபாய் அங்கு வைக்கப்பட்டிருப்பதாக நான் கேள்விப்பட்டது குறித்து கனகராஜிடம் கேட்டேன். ‘அத்தனையும் புது நோட்டுகள். ஆனால், அதில் நாம் கை வைக்க வேண்டாம்’ என்று அவர் சொன்னார். சசிகலாவின் அறை மற்றும் ஜெயலலிதாவின் அறையில் இருந்த டிராயர்களை ஒவ்வொன்றாகத் திறந்து ஆவணங்களைத் தேடினார். தேடியது கிடைத்ததும் எங்களை அழைத்துக்கொண்டு வெளியேறிவிட்டார் கனகராஜ்’ எனக் கூறியுள்ளார் மனோஜ்.”

“ஆவணங்களைக் குறிவைத்து மட்டும் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடக்க என்ன காரணம்?”

“ஜெயலலிதா, மருத்துவமனையில் இருந்த போதே திட்டம் தீட்டப்பட்டுள்ளது. முக்கியமான ஆவணங்கள் அனைத்தையும் கொடநாடு வீட்டில்தான் ஜெயலலிதா வைத்திருந்திருந்தாராம். குறிப்பாக 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, அவரால் கட்டம் கட்டப்பட்ட ஐவர் அணியில் இருந்தவர்கள் மீது ஏகத்துக்கும் குற்றச்சாட்டுகள் வந்தன. அவர்களைத் தனித்தனி யாக அழைத்துக் கடுமையாக விசாரித்தார் ஜெயலலிதா. வாங்கிக் குவித்த சொத்துகள், உளவுத்துறை கொடுத்த புகார் பட்டியல் எனப் பல ஆவணங்களை ஜெயலலிதா அப்போது கைவசம் வைத்திருந்தார். இவையெல்லாம் எப்போது வெளியானாலும் சிக்கலாகும் என்பதால், அங்கேயே பத்திரப்படுத்தினார். அமைச்சர்கள் சிலர் தொடர்புடைய சிக்கலான ஆவணங்களும் கொடநாட்டில்தான் வைக்கப் பட்டிருந்தனவாம்.” 

“ம்!”

“இந்த விவரங்கள் ஜெயலலிதா, சசிகலாவுக்கு மட்டும்தான் தெரியுமாம். ‘இத்தகையச் சூழலில், ஆவணங்களைத் தேடி ஒரு கும்பல் களத்தில் இறங்கியுள்ளதென்றால், அதற்குப் பின்னால் மிகப்பெரிய சக்தி ஒன்று செயல்பட்டிருக்கிறது’ என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள். குறிப்பாக, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற நேரத்தில், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தினகரன் சிறைக்குச் சென்ற இரண்டு நாள்களில் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்தேறியது. ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்த ஒருவர் மூலமாகத்தான் ஆவணங்கள் பற்றிய தகவல்கள் பெறப்பட்டு, கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன’ என்கிறார்கள்.”

“ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர் என்றால்?”

“ஜெயலலிதாவின் நிழலாக இருந்த ஒரு நபர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. ‘அவர்தான் எடப்பாடியிடம் ஆவணங்கள் பற்றிய தகவலைச் சொல்லியிருக்கக்கூடும் என்று வலுவான சந்தேகம் இருக்கிறது. இதையடுத்து, ஆவணங்களைக் கைப்பற்றுவதற்கு எடப்பாடி ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்திருக்கலாம் என்று அப்போதே அரசல்புரலாகப் பேசப்பட்டது. இப்போது ஷயான் பேட்டி மூலமாக அது உறுதியாகும் நேரம் நெருங்கிக்கொண்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்துக்கொண்டுதான், அ.தி.மு.க-வைக் கட்டுப்படுத்தப்பார்க்கிறார் எடப்பாடி’ என்றும் கூடுதல் தகவல்களைக் கசியவிடுகிறார்கள்.”

“எடப்பாடி ஸ்கெட்ச் போட்டாரா?”

“இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய கனகராஜை, ஜெயலலிதாவுக்கு டிரைவராகக் கொண்டுவந்தவர் எடப்பாடிதான். அதேபோல், கனகராஜ் விபத்தில் இறந்த இடம் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேதான். இது பழனிசாமிக்கு நெருக்கமான, சேலத்துப் பிரமுகரின் ஊர். அதேபோல், அம்மா வழியில் ஆட்சி நடத்துகிறோம் என்று வரிக்கு வரி வசனம் பேசும் எடப்பாடி அரசு, கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணையில் எந்த அளவுக்குத் தீவிரம் காட்டியது என்பதை உற்றுக் கவனிக்க வேண்டியுள்ளது. கிட்டத்தட்ட அந்த வழக்கையே ஒன்றுமில்லாமல் மழுங்கடிக்கச் செய்யும் வேலையைத்தான் அரசு தரப்பு கச்சிதமாகச் செய்து வந்துள்ளது என்று குற்றம் சாட்டுகிறார்கள், ஆரம்பத்திலிருந்தே இதைக் கவனித்துவரும் சிலர்.”

 

“குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்து விட்டார்களே?”

“2017 செப்டம்பரில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதுதான். ஆனால், ‘கைக் கடிகாரங்களும் கரடி பொம்மையும் மட்டுமே கொடநாடு பங்களாவிலிருந்து கொள்ளைப் போயுள்ளன’ என்றல்லவா போலீஸார் கூறியிருந்தனர். இப்போது, ‘ஆவணங்களைத் தவிர வேறு எதையும் நாங்கள் எடுக்கவில்லை’ என்று ஷயான் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். கொலைக்குற்றத்தில் தண்டனை பெற வேண்டிய ஒருவர், சுதந்திரமாகச் சுற்றித்திரிகிறார். சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் இருவர், மரணித்துள்ளார்கள். ஒருவர் மரணத்தின் விளிம்புவரை சென்று திரும்பியுள்ளார். இவை எல்லாமும் சேர்ந்து, எடப்பாடிக்கு எதிரான சந்தேகக் கணைகளாகத் தற்போது மாறியுள்ளன.”

“ஓஹோ!”

“இன்னொரு சம்பவத்தையும் இப்போது சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு சேலம், புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்தவர் சரவணன். எடப்பாடி மூலம்தான் இந்தப் பதவிக்கு வந்தார். ஒருகட்டத்தில் இருவருக்கும் பனிப்போர் முற்றவே, எடப்பாடி குறித்தப் புகார் பட்டியலை போயஸ் கார்டனுக்கு அனுப்பினார் சரவணன். இது, கோவையைக் கட்டி ஆண்ட சசிகலாவின் உறவு மூலமாக எடப்பாடி காதுக்கு எட்டியதும், சரவணன் மீது எரிச்சலானார். இந்நிலையில், மேட்டூர் அருகே நடந்த விபத்தில் சரவணன் பலியானார். இந்த விஷயத்திலும் எடப்பாடிமீது சந்தேகப் பார்வை அப்போது எழுந்தது. அனைத்தையும் தற்போது கூட்டிக்கழிக்க ஆரம்பித்துள்ளார்கள், கட்சிக்குள்ளேயே எடப்பாடிக்கு எதிராகத் திரண்டுகொண்டிருக்கும் ஒருதரப்பினர்.”

“இந்த ஆவணத் திருட்டு மற்றும் கொலையில் சசிகலா தரப்புக்குத் தொடர்பு இருக்கலாம் என்று பேச்சு வந்ததே?”

“சம்பவம் நடைபெற்றபோது சசிகலா, தினகரன் இருவருமே சிறையில் இருந்தனர். தொடர்ந்து அவர்களின் கட்டுப்பாட்டில்தான் பங்களா இருக்கிறது. அவர்கள் நினைத்திருந்தால், ஆவணங்களை எளிதாக அழிக்கவோ, ஒளிக்கவோ செய்திருக்க முடியுமே. ஆக, இந்த ஆவணங்களால் பலன் அல்லது பாதிப்படைய இருந்த வேறு நபர்கள்தான் செய்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள் சசிகலா மற்றும் தினகரனின் ஆதரவாளர்கள். அதோடு, ஆவணங்களெல்லாம் யாரிடம் இருக்கின்றன என்கிற கேள்வியும் தற்போது அலையடிக்கிறது.”

“எடப்பாடி தரப்பு என்ன நினைக்கிறது?”

“ஓராண்டு கடந்த நிலையில், விவகாரம் வீதிக்கு வந்திருப்பதில் எடப்பாடி தரப்பு அப்செட்தான். என்றாலும், அடுத்த நாளே செய்தியாளர்களைச் சந்தித்த பழனிசாமி, ‘அரசியல் காழ்ப்பு உணர்ச்சி யால் இப்படிச் செய்திகள் பரப்பப்படுகின்றன. அம்மா, மருத்துவமனையில் இருந்தபோதே கொள்ளைத் திட்டம் தீட்டப்பட்டது என்று சொல்லியுள்ளார்கள். அப்படியென்றால், இதன் பின்னணியில் யார் என்கிற கேள்விக்கு விசாரணையின் முடிவில்தான் பதில் கிடைக்கும்’ என்று சொல்லியுள்ளார். இந்த விவகாரத்தில், 22 முறை நீதிமன்ற படியேறியிருக்கிறார் ஷயான். அவர் எதற்காக இப்போது இந்தத் தகவலைப் பொது வெளியில் சொல்ல வேண்டும், இதற்குப் பின்னால் பி.ஜே.பி தரப்பு இருக்குமோ என்கிற சந்தேகமும் அ.தி.மு.க அமைச்சர்கள் பலருக்கு ஏற்பட்டுள்ளது.”

 

“பி.ஜே.பி தரப்புடன் எடப்பாடி இணக்கமாகத் தானே இருக்கிறார்?”

“அவர் இணக்கமாக இருக்கிறாரா என்கிற சந்தேகம் எப்போதுமே பி.ஜே.பி-க்கு இருக்கிறது என்பதுதான் பிரச்னை. காரணம், சசிகலாவுக்கே கடுக்காய் கொடுத்தவராயிற்றே. அதனால், அவர் மீதும் ஒரு கண் வைத்தபடி இருக்கிறது பி.ஜே.பி. அடிக்கடி அமைச்சர்கள் மீது ரெய்டு, மாநில அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை வைப்பது என்று பி.ஜே.பி மிரட்டிக்கொண்டுதானே இருக்கிறது. இத்தகைய சூழலில், ‘மேத்யூஸ் ஆறு மாதங்களாக இந்த ஆவணப்படத் தயாரிப்பில் இருப்பது மத்திய உளவுத்துறைக்குத் தெரிந்திருந்தும் பொறுமையாக வேடிக்கை பார்த்துள்ளனர். தக்க சமயத்தில் பயன்படும் என்று அமைதியாக இருந்துள்ளனர்’ என்கிற சந்தேகமும் அ.தி.மு.க தலைமைக்கு எழுந்துள்ளது.”

“இந்த விவகாரத்தை வைத்து தி.மு.க ஒரு ரவுண்டு வரும் போலிருக்கிறதே?”

“மு.க.ஸ்டாலின், ‘மர்மங்களை உடைக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது’ என்று கூறியுள்ளார். ‘தமிழக போலீஸார் இந்த வழக்கை விசாரிப்பது உகந்ததாக இருக்காது. இன்றைக்கு சி.பி.ஐ இருக்கும் நிலையில், அந்த அமைப்பின் விசாரணையும் சரிப்பட்டு வராது. எனவே, சிலைக்கடத்தல் வழக்கு போன்று, நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் சி.பி.ஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்’ என தி.மு.க தரப்பில் வழக்கு போடவுள்ளார்களாம்.”

“உச்ச நீதிமன்றத்தால் சி.பி.ஐ இயக்குநராக மீண்டும் நியமிக்கப்பட்டு, அடுத்த 24 மணி நேரத்துக்குள்ளாக மறுபடியும் தூக்கியடிக்கப்பட்ட அலோக் வர்மா, அதிரடியாக ராஜினாமா செய்து விட்டாரே?”

“எல்லாமே ஊரறிந்த விஷயங்கள்தான். ஆனால், ‘சி.பி.ஐ அமைப்பின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். வெளிப்புறக் குறுக்கீடு இல்லாமல் அது செயல்படவேண்டும்’ என்று சொல்லி அலோக் வர்மா விடை பெற்றிருப்பது, தேசத்தின் நிலை குறித்துப் பெரும் கவலையை ஏற்படுத்துவதாகப் பலரும் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்’’ என்ற கழுகார், ‘‘பொங்கல் வாழ்த்துகள்’’ என்றபடிப் பறந்தார்.

Advertisements
%d bloggers like this: