மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்!

ல வருடங்களுக்குமுன்பு, தொலைபேசியைப் பயன்படுத்தவே தடுமாறிய மக்களின் கைகளில், இன்று ஆண்ட்ராய்டு போன்கள் எப்படி வெகு சாதாரணமாகப் புழங்குகிறதோ, அதேபோன்று அன்று பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் போன்றவையெல்லாம் சூதாட்டம் என்றும், இது நமக்குச் சரிப்பட்டுவராது என்றும் ஒதுங்கியவர்கள், இன்று இந்த முதலீட்டுத் திட்டங்களின் பக்கமாக கவனத்தைத் திருப்பியிருக்கிறார்கள். இந்த முதலீட்டுத் திட்டங்களின் வெளிப்படைத்தன்மை அதன் லாபகரமான செயல்பாடுகள் மற்றும் அவை தரும் சிறந்த வருமானம் பற்றியும், அதன் பலன்கள் பற்றியும் பரவலாக அறிந்துகொண்டு, முதலீட்டை அதிகரிக்கும் மக்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துகொண்டே வருகிறது. இத்தகைய முதலீட்டின்போது, நம்மையறியாமல் நாம் சில தவறுகளைச் செய்துவிடுகிறோம். அந்தத் தவறுகள் என்னென்ன, அந்தத் தவறுகளைச் செய்யாமல் இருப்பது எப்படி என்பதை கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.

நாமினியைக் குறிப்பிடத் தவறுதல்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைப் புதிதாகத் தொடங்கும்போது, நமது பான் கார்டு எண்ணும் வங்கிக் கணக்கும் எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரு நாமினியை நியமனம் செய்ய வேண்டியதும். ஆனால், இன்றைக்கு சில முதலீட்டாளர்கள் இன்றுபோலவே நாளையும் இருக்கும் என்ற எண்ணத்தில், அதை ஒரு பெரிய விஷயமாகவே எடுத்துக்கொள்வதில்லை என்பது கவலைக்குரியதாகும். பொதுவாக முதலீடு என்பதே நீண்ட காலத்தில் ஒரு நல்ல வருமானம் பெறவேண்டும் என்பதற்காகச் செய்யப்படுவதுதான். முதலீட்டை மேற்கொள்ளும் நபருக்கு ஒருவேளை ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அவரது  முதலீட்டைக் கவனித்துக்கொள்ள அல்லது இன்னொருவர் பெயருக்கு எளிதாக மாற்றிக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாமினி ஒருவரை நியமித்திருப்பது அவசியம். நாமினியாக நீங்கள் பரிசீலிக்கும் நபர் உங்கள் துணை, குழந்தைகள் (மைனர் எனில், பாதுகாவலர் பெயர் தேவைப்படும்), மற்றொரு குடும்ப உறுப்பினர், நண்பர் அல்லது நீங்கள் நம்பும் வேறு எந்த நபராகவும் இருக்கலாம்.

தேவையெனில் எதிர்காலத்தில் உங்கள்   நாமினியை நீங்கள் மாற்றிக்கொள்ளவும், ரத்து செய்யவும் வழிகள் உண்டு. எனவே,  நீங்கள் அச்சப்படத் தேவையில்லை. இதுவரை மேற்கொண்ட திட்டங்களில் நாமினியைக் குறிப்பிடத் தவறியிருந்தால், இன்றே திருத்திக் கொள்ளுங்கள்.

 

அதிக திட்டங்களில் முதலீடு செய்தல்

சில முதலீட்டாளர்கள், பரவலாக்கம்தான் முதலீட்டைப் பெருக்க உதவும் எனும் கருத்தைத் தவறுதலாகப் புரிந்துகொண்டு, அதிகமான திட்டங்களில் முதலீடு செய்திருப்பார்கள். இது ஆரம்பத்தில் சுலபமாகவும், புத்திசாலித்தனமாகவும் தெரியக்கூடும்.

ஆனால், பின்னாளில் போர்ட்ஃபோலியோ வைக்   கண்காணிக்கும்போது (Review) சிரமமாகவும் மற்றும் பங்குச் சந்தையின் சரிவு போன்ற சமயங்களில் அல்லது நாம் முதலீடு செய்திருக்கும் திட்டத்தின் மதிப்பானது குறையும் காலங்களில், அவற்றைச் சராசரி (Average) செய்வதற்கு அல்லது மறுமுதலீடு (Reinvestment) செய்வதற்குப் பணம் தேவைப்படும்போது பெரும் நெருக்கடியையும் மன உளைச்சலையும் முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தும்.

எனவே, மூன்று திட்டங்களில் முதலீடு செய்தால் போதும். ஐந்து திட்டங்களைத் தேர்வு செய்து முதலீடு செய்வது ஓரளவு கையாளக் கூடியதாக இருக்கும். ஆனால், அதற்கும் அதிகமான நிதித் திட்டங்களில் முதலீடு செய்வது சரியான பரவலாக்கமாக இருக்காது.   
 
கடந்த கால வருமானத்தை எதிர்பார்த்து, முதலீட்டைத் தொடங்குதல்

ஒருசிலர், கடந்த காலத்தில் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டமானது, குறுகிய நாள்களில் நல்ல வருமானத்தைக் கொடுத்திருந்தால், உடனே  அதே அளவு வருமானத்தை, குறுகிய காலத்தில் எதிர்பார்த்து அந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய துணிவார்கள். ஆனால்,  அது தவறான முடிவாகும். 

கடந்த கால வருமானத்தை மட்டுமே, முக்கியக் காரணியாகக்கொண்டு முதலீடு செய்யும்போது,  நம் முந்தைய முதலீடே பாதிக்குமளவுக்கு, பல தவறுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. எப்படி யென்றால், அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு, நாம் ஏற்கெனவே முதலீடு செய்திருக்கும் பல நல்ல திட்டங்களைக்கூட விற்கத் தோன்றும்.

அதை  விற்றுவிட்டு வருமானம் அதிகம் தந்த திட்டங்கள் என்று அவ்வப்போது லைம் லைட்டில் (Lime light) வரும் பல்வேறு திட்டங்களைத் துரத்த ஆரம்பிப்போம். இப்படியே விற்று வாங்கி, வாங்கி விற்பது தொடர்ந்தால், நாளடைவில் நீண்டகால முதலீட்டின் பயனையும், கூட்டுவட்டியின் பலனையும் அடைய  முடியாமலே போய்விடும்.

இதனால் நாம் முதலீடு செய்த பணமும், காத்திருந்த காலமும்தான் விரயமாகும். ஆதலால்,  கடந்தகாலச் செயல்திறனை ஓர் அளவீடாக வைத்து முதலீட்டைத் தொடங்கலாமே தவிர, கடந்தகால வருமானத்தை எதிர்பார்த்து, முதலீட்டை ஆரம்பித்தல் என்பது சரியான முதலீட்டு அணுகுமுறை அல்ல. எனவே, முதலீட்டாளர்கள் எப்போதும்  தாங்கள் அடைய விரும்பும் இலக்குகளின் அடிப்படையில்தான் திட்டங்களைத் தேர்வுசெய்ய வேண்டும்.

 

குறுகியகால இலக்குகளுக்காக எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டைத் தொடங்குதல் 

சிலர், தங்கள் குறுகியகால இலக்கினை (ஒரு வருடம் முதல் இரண்டு வருடம் வரை) அடைவதற் காக மியூச்சுவல் ஃபண்ட்    ஈக்விட்டி திட்டங்களில்  எஸ்.ஐ.பி முறையில், முதலீட்டை, தொடங்கு வார்கள். அவர்கள், முதலில் தெரிந்துகொள்ள வேண்டிய எஸ்.ஐ.பி முதலீட்டைப் பற்றிய ரகசியம்  என்னவென்றால், சந்தையின் ஏற்ற இறக்கத்தின் அதிகபட்ச ஆதாயத்தை அடை வதற்கு, முறையான முதலீட்டுத் திட்டம் எனப்படும் எஸ்.ஐ.பி முறையிலான தொடர்ச்சியான முதலீட்டிற்கு நீண்ட கால அளவு தேவை என்பதே.
அதாவது, நீண்ட காலத்தில் அபாயங்களைக் குறைப்பதன் மூலம், அதிக வருமானத்தைச் சம்பாதிப்பதற்குப் பயன்படுத்தப் படும் ஒரு உத்திதான் எஸ்.ஐ.பி முறையிலான முதலீடு என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே,  இவை குறுகிய காலத்திலேயே நல்ல வருமானத்தை எட்டவேண்டும் என்ற வீண் எதிர்பார்ப்பு இல்லாமல் எஸ்.ஐ.பி முறையிலான முதலீட்டைத் தொடங்க வேண்டும். அப்படித் தொடங்கும் முதலீட்டை, நம் நீண்டகால இலக்கின் எல்லையை அடையும்வரை தொடர வேண்டும். அதுதான் வெற்றிகரமான முதலீடாகும். எந்த நேரத்திலும், குறுகிய காலத் தேவைகளை ஈடுசெய்ய ஈக்விட்டி திட்டங்கள் ஒருபோதும் உகந்ததல்ல என்பது  நீண்ட அனுபவமுள்ள ஃபண்ட் மேனேஜர்களின் ஒருமித்த கருத்தாகும். 

 

எல்லாத் திட்டங்களிலும் டிவிடெண்ட் ஆப்ஷன்

பல முதலீட்டாளர்கள், தாம் முதலீடு செய்யும், அனைத்து  ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வுசெய்யவே விரும்புகின்றனர். அதற்குக் காரணமாக அவர்கள் கூறுவதெல்லாம், இந்த வகை முதலீட்டின் மூலம் கிடைக்கும் டிவிடெண்ட் தொகையானது, தங்களின் செலவினங்களை நிர்வகிக்க உதவுகிறது என்பதுதான்.

பொதுவாக,  டிவிடெண்ட் ஆப்ஷனை விரும்பும் முதலீட்டாளர் கள், தாங்கள் பெறும், டிவிடெண்டானது அந்த முதலீட்டுத் திட்டங்கள் தரும் வெகுமதியோ, ஊக்கத்தொகையோ அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  பெறப்படும் டிவிடெண்ட் தொகையானது, தாங்கள் வைத்திருக்கும் யூனிட்கள் பெற்றுத்தந்த லாபத்திலிருந்து மட்டுமே கொடுக்கப்படுகிறது என்பதை அறியவேண்டும்.

அப்படி, அந்த யூனிட்டுகள் பெற்றுத்தரும் லாபத்தை, டிவிடெண்ட் எனும் பெயரில் எடுத்துக் கொண்டே வந்தால், நாம் வைத்திருக்கும் யூனிட்களின், நாளைய கூட்டு நன்மை (Compounding Benefits) இழக்கப்படுவதுடன், நம் முதலீடு  கூட்டு வட்டியை (Compound Interest) முற்றிலும் பெறவிடாமல்  நாமே தடுக்கிறோம் என்பதே உண்மை.

மேலும், நீங்கள் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில்,  டிவிடெண்ட்  ஆப்ஷனைத் தேர்வு செய்திருந்தால், நிச்சயமாகத் தேவையற்ற வரி களை, ஒவ்வொருமுறையும் அதிகம் செலுத்துவீர் கள் என்பதையும் நினைவில்கொள்ளுங்கள்.

ஆதலால், திட்டங்களைத் தேர்வு செய்யும் போது, அதைப்பற்றி தெளிந்து, அதன்பயன்களைத் தெரிந்து தேர்வுசெய்யப் பழகவேண்டும். எந்த ஒரு முதலீட்டு திட்டத்தையும் கண்மூடித்தனமாகத் தொடங்கவோ,  தொடரவோ கூடாது என்பதையும் மறக்கக்கூடாது.

%d bloggers like this: