உடற்பயிற்சியின் போது செய்யும் இந்த தவறுகள் உங்களுக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா?

முறையாக தயாராவதில்லை

உடற்பயிற்சி செய்ய தொடங்கும் முன் நம் உடலை அதற்கேற்றாற்போல தயார்படுத்த வேண்டும். எடையை தூக்குவதற்கு முன் உங்கள் உடலை நன்கு வளைத்து தயார்படுத்துவது உங்கள் மூட்டுகளுக்கு வரும் இரத்த ஓட்டத்தின் அளவை அதிகரிக்கும். இது தசைப்பிடிப்பு ஏற்படுவதை தடுக்கும். எடை தூக்க தொடங்கும் முன் நீங்கள்10 நிமிடங்கள் நடப்பது, இடுப்பை வளைப்பது, தோள்பட்டைகளை தயார் செய்வது போன்றவற்றை செய்ய வேண்டும். இல்லையெனில் உங்கள் தசைகள் விரைவில் சோர்வடைந்து விடும்.

உதவி கேட்காமல் இருப்பது

தவறான முறையில் பளு தூக்குவது உங்களுக்கு உடற்பயிற்சியின் பலனை அளிக்காமல் இருப்பதோடு காயங்கள் ஏற்படவும் காரணமாகிறது. மற்ற உடற்பயிற்சிகளை காட்டிலும் எடை தூக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக உங்கள் உதவிக்கு பயிற்சியாளரோ அல்லது நண்பரோ உடனிருப்பது அவசியம். ஏனெனில் பளுதூக்கும் போது ஏற்படும் அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க உதவிக்கு ஒருவர் இருக்க வேண்டியது அவசியம்.

உடற்பயிற்சிகளை மாற்றுவதில்லை

தினமும் ஒரே பயிற்சியை செய்வது உங்களுக்கு உங்கள் உடலமைப்பில் பாதிப்பை ஏற்படுத்துவது, வலிமை ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துவது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். தினமும் எடை தூக்குவதையே செய்யாமல் உடலின் மற்ற தசைகளையும் வலுப்படுத்தும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் உடல் வலிமை சமநிலையில் இருக்கும்.

தோள்பட்டை மீது அக்கறை இல்லாமலிருத்தல்

உடற்பயிற்சியின் போது ஏற்படும் பெரும்பாலான காயங்கள் தலைக்கு மேல் எடையை தூக்கி செய்யும் போதுதான் ஏற்படுகிறது. தலைக்கு மேல் எடையை தூக்கும் போது அது உங்கள் தோள்பட்டை சுழற்சியின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் தசைப்பிடிப்பு முதல் எலும்பு முறிவு கூட ஏற்படலாம். தலைக்கு மேல் எடையை தூக்கும் முன் போதுமான முன் பயிற்சி எடுக்க வேண்டியது அவசியம்.

தவறான எடையை பயன்படுத்துதல்

தசைகளை வலிமைப்படுத்த முயலும்போது அதிக எடை தூக்கினால்தான் தசை வலிமையடையும் என்று எண்ணுவது முட்டாள்தனமானது. அதிக எடையை தூக்கும் போது நீங்கள் செய்யும் எண்ணிக்கையின் அளவு குறையும். எண்ணிக்கைதான் வலிமையை தீர்மானிக்கும். சக்திக்கு மீறி அதிக எடையை தூக்குவதை விட குறைவான எடையை அதிகமுறை தூக்குவது உங்களுக்கு அதிக பலனை அளிக்கும்.

மைய வலிமையை மறந்து விடுவது

உங்கள் உடலின் மையத்தை வலிமையாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். அடிவயிறு மற்றும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உடற்பயிற்சிகளை செய்யவும் ஆர்வம் காட்டுங்கள். அப்போதுதான் உங்களால் எடையை நன்கு தூக்க முடியும்.

பயிற்சியில் வேகமாக போவது

வேகமாக உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு கிடைக்கும் பலனை தடுக்கும் மேலும் காயங்களுக்கும் வழிவகுக்கும். பொறுமையும், கட்டுப்பாடுமே உங்களுக்கு நினைத்த பலனை அளிக்கும். உதாரணத்திற்கு டம்பெல்லை கொண்டு பின்பக்க தசைகளை வலுப்படுத்த முயற்சிக்கும் போது பொறுமையை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். வேகமாக செய்வது எபிகா பலனையும் அளிக்க போவதில்லை.

சோர்வாக இருக்கும் போது உடற்பயிற்சி செய்வது

சோர்வாக இருக்கும் போது உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு நீங்களே ஆபத்தை ஏற்படுத்தி கொள்வதாகும். ஏனெனில் சோர்வாக இருக்கும் போது உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு மோசமான காயங்களை உண்டாக்கும். ஜிம்மிற்குள் செல்லும்போதே சோர்வாக உணர்ந்தால் எடை தூக்குவதை தவிர்த்து விட்டு வேறு உடற்பயிற்சிகளை செய்வதில் கவனம் செலுத்துங்கள்.

உணவில் அக்கறையின்மை

வெறும் உடற்பயிற்சி மட்டும் உங்களுக்கு நீங்கள் விரும்பும் பலனை அளிக்காது. ஆரோக்கியமான உணவும் அதற்கு அவசியம். உடற்பயிற்சி செய்யும் காலகட்டத்தில் துரித உணவுகள் அதிகம் சாப்பிடுவது உங்களுக்கு எந்த பலனையும் அளிக்காது மேலும் பக்க விளைவுகளையே ஏற்படுத்தும். புரோட்டின், நார்ச்சத்துக்கள், இரும்புச்சத்து அதிகம் இருக்கும் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

%d bloggers like this: