அ.ம.மு.க.வைக் கட்டுப்படுத்தும் மூன்று சக்திகள்!"

தினகரனின் நம்பிக்கையைப் பெற்ற இம்மூவரும் கட்சியில் தீவிரமாகச் செயல்படுவது மற்ற சில நிர்வாகிகளின் கண்களை உறுத்துகிறது.”

செந்தில்பாலாஜியின் தி.மு.க. அட்டாக், பிணையப்படும் வழக்குகள், தெளிவாகாத கூட்டணி என்று அடுத்தடுத்த தாக்குதல்களால் நிலைகுலைந்து போயிருக்கிறார், அ.ம.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். இந்தப் பஞ்சாயத்துகள் போதாதென்று, உட்கட்சிக்குள்ளேயே மாவட்டச் செயலாளர்கள் மோதிக்கொள்வது அடுத்த தலைவலியை உருவாக்கியுள்ளது. இப்படியிருக்கும் நிலையில், அ.ம.மு.க-வை மூன்று சக்திகள் கட்டுப்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது.

சமீபத்தில், திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளராக இருந்த திருவேற்காடு சீனிவாசன் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, அமைப்புச் செயலாளராக ஆக்கப்பட்டார். மாவட்டச் செயலாளர் பொறுப்பு மதுரவாயல் பகுதிச் செயலாளர் லக்கி முருகனுக்கு வழங்கப்பட்டது. அமைச்சர் பெஞ்சமினின் இல்லத் திருமணத்துக்கு சீனிவாசன் சென்றது பிடிக்காமல்தான், தினகரன் அவர் பொறுப்பைப் பறித்ததாகக் கட்சிக்குள் பேசப்படுகிறது. “கல்யாணத்துக்குப் போனா கட்சிப் பதவியைப் பறிப்பீங்களா?” என்று சீனிவாசன் கொதிக்க, அவருக்கும் தினகரனுக்கும் இப்போது முட்டிக்கொண்டுவிட்டது.

“அண்ணன் சொல்லித் தாங்க, அமைச்சர் வீட்டு விசேஷத்துக்குப் போனேன்” என்று திருவேற்காடு சீனிவாசன் பேசியதாக, ஒரு ஆடியோ தினகரனிடம் போட்டுக் காண்பிக்கப்படவே, பதவி பறிக்கப்பட்டதாம். தமிழகமெங்கும் தங்களுக்கு வேண்டாத நபர்களை இப்படி தினகரனிடம் போட்டுக் கொடுத்து, கட்சியைத் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் மூவர் அணி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. தினகரனையே கட்டுப்படுத்தும் அந்த மூன்று சக்திகள் யார்? தினகரனின் அடையாறு வீட்டுக்கு மனு அளிக்க வந்த தென் மாவட்ட ஒன்றியச் செயலாளர் ஒருவரிடம் பேசினோம். “தென் மாவட்டங்களைப் பொறுத்தவரையில் அமைப்புச் செயலாளர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா வைப்பதுதான் சட்டம். விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளின் பொறுப்பாளராக அவர் இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தொகுதிக்கு ஏற்றாற்போல வியூகம் வகுப்பது, தேர்தல் வேலைகளைக் கண்காணிப்பதுதான் அவரது பணி. 

ஆனால், அந்தந்த மாவட்டச் செயலாளர்களையும் மீறி, தினகரனோடு தனக்குள்ள நெருக்கம் காரணமாக மாவட்டங்களுக்குள் நியமனங்கள், நீக்கங்களைச் செய்துவருகிறார். இதனால் தென் மாவட்டச் செயலாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். மாவட்டச் செயலாளர் பதவியை எடுத்துவிட்டு, அதிகாரத்தை மண்டலப் பொறுப்பாளரிடமே வழங்கிவிடலாம் என்கிற கொதிப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது” என்றார்.

சென்னை மாநகர முன்னாள் பகுதிச் செயலாளர் ஒருவர், “வெற்றிவேல் மீது தினகரனிடமும், அவரது மனைவி அனுராதாவிடமும் அளப்பரிய நம்பிக்கை உள்ளது. இதைப் பயன்படுத்தி, அமைச்சரின் வீட்டு விசேஷத்துக்குத் திருவேற்காடு சீனிவாசன் சென்றதைத் தினகரனிடம் போட்டுக் கொடுத்ததே வெற்றிவேல்தான். சீனிவாசனை நீக்கிவிட்டு தனது ஆதரவாளர் லக்கி முருகனை மாவட்டச் செயலாளராக்கிவிட்டார். 

கடந்த ஜனவரி 25-ம் தேதி தனது தொகுதியான பெரம்பூரில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தை வெற்றிவேல் நடத்தினார். நான்கு மாவட்டங்கள் இணைந்து நடத்திய கூட்டத்துக்கு, 700 பேர்கூட வரவில்லை. வழக்கம்போல, ஸ்டாலினைத் திட்டிவிட்டு கூட்டம் கலைந்தது. கூட்டத்தைத் திரட்ட முடியவில்லை என்றால் சகட்டுமேனிக்கு விளாசும் வெற்றிவேலிடம், இதைப் பற்றிக் கேட்கத்தான் ஆள் இல்லை. வெற்றிவேலின் ஆக்டோபஸ் கரங்கள் வட மாவட்டங்கள் மீதும் படரத் தொடங்கிவிட்டன. அதன் முதல் பலிதான் சீனிவாசன்” என்றார்.

கொங்கு மண்டல தளபதியாக இருந்த செந்தில்பாலாஜி தி.மு.க-வுக்கு அணி தாவிய பிறகு, மேற்கு மாவட்டங்களில் அ.ம.மு.க. ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது. செந்தில்பாலாஜியை நம்பி அ.ம.மு.க-வுக்கு வந்தவர்கள், தற்போது அ.தி.மு.க-வுக்கு அணி தாவத் தொடங்கிவிட்டனர். இப்போது, மேற்கு மண்டலத்தை சேலஞ்சர் துரைதான் கவனித்து வருகிறார். செந்தில்பாலாஜி கட்சி தாவியதற்கு சேலஞ்சர் துரை செய்த உள்ளடி அரசியலும் ஒருகாரணமாகக் கூறப்படுகிறது.

மாணிக்கராஜா, சேலஞ்சர் துரை, வெற்றிவேல் இம்மூவரின் செயல்பாட்டால் தங்க.தமிழ்ச்செல்வன், பாப்புலர் முத்தையா, ரங்கசாமி, மனோகரன் உள்ளிட்ட கட்சி சீனியர்களும் மனவருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சசிகலா விசுவாசிகள், தினகரனின் விசுவாசிகள் என்று கட்சியே இரண்டாகப் பிளவுப்பட்டு நிற்கிறதாம். சசிகலா ஆதரவாளர்கள் தாமாகவே கட்சியிலிருந்து ஓரங்கட்டிக் கொள்ளும் அளவுக்கு நெருக்கடியை, தினகரனின் விசுவாசிகள் செய்து வருகிறார்களாம். இதெல்லாம் தினகரனின் ஆசியோடுதான் நடைபெறுகிறதோ என்கிற எண்ணம் கட்சிக்குள் சந்தேக ரேகைகளைப் படரவிட்டுள்ளது.

இதுகுறித்து மூவரின் ஆதரவாளர்களிடமும் பேசினோம். “தினகரனின் நம்பிக்கையைப் பெற்ற இம்மூவரும் கட்சியில் தீவிரமாகச் செயல்படுவது மற்ற சில நிர்வாகிகளின் கண்களை உறுத்துகிறது. தவறான செய்தியைப் பரப்பி, தினகரனிடமிருந்து இவர்களைப் பிரிக்க திட்டம் தீட்டப்படுகிறது. தினகரன் ஒன்றும் குழந்தையல்ல, கட்சிக்குள் நடப்பது எல்லாம் அவருக்கும் தெரியும். கட்சியின் நிர்வாக நடவடிக்கைகளைத் தீவிரமாக ஆலோசித்துவிட்டே முடிவை எடுக்கிறார்” என்றனர்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அ.ம.மு.க-வோடு கூட்டணி அமைக்க எந்தக் கட்சியும் இந்நேரம் வரையில் முன்வரவில்லை. பா.ம.க., தே.மு.தி.க-வோடு கூட்டணி அமைக்கலாம் என்று கருதியிருந்தனர். அக்கட்சிகள் அ.தி.மு.க. – பி.ஜே.பி. கூட்டணியில் செல்லத் திட்டமிட்டுள்ளனவாம். நிலைமை உறுதியாகும்பட்சத்தில் தனித்தே நிற்க வேண்டிய நெருக்கடி தினகரனுக்கு ஏற்படும். 

அ.தி.மு.க. – பி.ஜே.பி. கூட்டணி இறுதியாகியுள்ள நிலையில், அதற்கான அறிவிப்பைப் பிரதமர் மோடியே விரைவில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. `அ.தி.மு.க-வுக்கு மோடி, தி.மு.க-வுக்கு ராகுல் காந்தி என்று பிரதமர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள், தினகரன் யாரைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த முடியும்? குக்கர் சின்னமும் இழுபறியாகியுள்ள நிலையில், பதிவு செய்யாத ஒரு கட்சிக்கு சுயேச்சை சின்னத்தை வைத்து எப்படி ஓட்டு வேட்டையாட முடியும்?’ என்று அ.ம.மு.க-வினரே சலித்துக்கொள்கிறார்கள். வலுவான கூட்டணி ஏற்படாத பட்சத்தில், கோடிகளைச் செலவழித்து டெபாசிட் தொகையோடு மட்டும் வீடு திரும்ப அ.ம.மு.க-வில் யாரும் தயாராக இல்லை. 

மற்ற கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கும் முன்னரே, “நாற்பது தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி” என்று தினகரன் அறிவித்துவிட்டார். வெற்றிபெற என்ன வியூகம் வகுத்திருக்கிறார் என்பது, பிரதமர் மோடி பிப்ரவரி 10-ம் தேதி திருப்பூருக்கு வந்து சென்ற பின்னர் தெரிந்துவிடும். 

%d bloggers like this: