பாஜ – அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு! திமுக – காங்., கூட்டணியை வீழ்த்த அதிரடி வியூகம்

லோக்சபா தேர்தலில் பா.ஜ., – அ.தி.மு.க., கூட்டணி உருவாவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், ‘தேசிய, மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சு துவங்கி விட்டது; அது பரம ரகசியமாக நடந்து வருகிறது’ என துணை முதல்வர் பன்னீர் செல்வம்

தெரிவித்துள்ளார். தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி வியூகம் வகுத்து ‘சூப்பர் பாஸ்ட்’ வேகத்தில் பணிகள் நடப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான தேதியை மார்ச் முதல் வாரத்தில் தலைமை தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன் கூட்டணி அமைத்தல், விருப்ப மனு பெறுதல் போன்ற பணிகளில் தேசிய கட்சிகள் மட்டுமின்றி, மாநில கட்சிகளும் சுறுசுறுப்பாக செயல்படத் துவங்கி உள்ளன.
தமிழகம், புதுவையில் 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இவற்றில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து அ.தி.மு.க., இன்று முதல் விருப்ப மனுக்களை வாங்க உள்ளது; 10ம் தேதி வரை மனுக்கள் பெறப்பட உள்ளன. கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு போன்றவற்றுக்கும், அ.தி.மு.க., சார்பில், மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காங்., – தி.மு.க., இடையே ஏற்கனவே கூட்டணி உறுதியாகி விட்ட நிலையில் அ.தி.மு.க., மட்டும் கூட்டணி குறித்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தது. ‘தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்,

கூட்டணி தொடர்பான முடிவுகளை அறிவிப்போம்’ என முதல்வர் பழனிசாமி அவ்வப்போது கூறி வந்தார். அத்துடன் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கும் விஷயத்தில் அ.தி.மு.க.,வில் இருவேறு கருத்துக்கள் நிலவு வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், பா.ஜ., – அ.தி.மு.க., கூட்டணிக்கான வாய்ப்புகள் அதிகமாகி உள்ளதை துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று சூசகமாக தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் அண்ணாதுரை நினைவு தினத்தை ஒட்டி சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பொது விருந்தில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி:
‘சமதர்மம், தமிழ் உணர்வோடு வாழ வேண்டும்’ என அண்ணாதுரை புகட்டிய தத்துவம், இன்றளவும் உயிர் பெற்றுள்ளது. லோக்சபா தேர்தலில் போட்டியிட

கட்சித் தொண்டர்கள் யார் வேண்டுமானாலும் விருப்ப மனு கொடுக்கலாம். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க விரும்பும், நட்பு உணர்வுள்ள, மாநில, தேசிய கட்சிகளுடன் பேசி வருகிறோம்.
அந்தப் பேச்சுவார்த்தை ரகசியமாக நடைபெற்று வருகிறது. அனைத்து முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்ட பின், கூட்டணி பற்றி வெளிப்படையாகத் தெரிவிக்கப்படும். தமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சியாக இருப்பதால் அ.தி.மு.க., தலைமையில் தான் கூட்டணி அமையும். கூட்டணி தொடர்பாக கருத்து கூற தம்பிதுரைக்கு உரிமை உள்ளது. இருப்பினும், ஒருமித்த கருத்துடன் கூட்டணி பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு பன்னீர் செல்வம் கூறினார்.

வியூகம்:

இதற்கிடையில், துணை முதல்வரின் கருத்தை ஆமோதிக்கும்

வகையில்,’தி.மு.க., – காங்., கூட்டணியை வீழ்த்தும் வியூகத்தை அ.தி.மு.க., தேர்தல் பணிக்குழு, ‘சூப்பர் பாஸ்ட்’ வேகத்தில் வகுத்து வருகிறது’ என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழக காங்., தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, கே.எஸ்.அழகிரி என் நண்பர்; அவருக்கு என் வாழ்த்துக்கள். லோக்சபா தேர்தலுக்கு, லேட்டா புறப்பட்டாலும், லேட்டஸ்டாக புறப்பட்டது அ.தி.மு.க., தான். தேர்தல் பணிகள் எல்லாம், சூப்பர் பாஸ்ட் வேகத்தில் நடந்து வருகின்றன. பிற கட்சிகளுக்கு முன்னதாக, தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, விருப்ப மனுக்களை பெற உள்ளோம்.
அரசியலில், ஸ்டாலின், தினகரன் போன்ற நிறைய சின்னத் தம்பிகள் இருக்கின்றனர். இரு சின்னத் தம்பிகளும் ஆட்சி அமைக்க முயற்சிப்பது நடக்காது. தி.மு.க., எப்போதும் இரட்டை குதிரையில் சவாரி செய்யும். காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பது போல, அ.தி.மு.க., மீது அனைவரும் குறைகூறுவது வாடிக்கையாகி விட்டது. இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.
தேசிய அளவில் பா.ஜ.,வுடனும், மாநில அளவில், பா.ம.க., – தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளுடன், அ.தி.மு.க., ரகசிய பேச்சி நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பேச்சு இறுதி கட்டத்தை அடைந்த பின், முறையான அறிவிப்பை வெளியிட, அ.தி.மு.க., மேலிடம் திட்டமிட்டு உள்ளது.

%d bloggers like this: