அ.தி.மு.க., – பா.ஜ., – பா.ம.க., கூட்டணி; ரகசிய பேச்சுவார்த்தையில் உடன்பாடு

சில நாட்களாக திரைமறைவில் நடந்த வந்த பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க., – பா.ஜ., – பா.ம.க., ஆகிய கட்சிகள் இடையே முதல் கட்டமாக கூட்டணி உடன்பாடு எட்டியுள்ளது. ஓரிரு நாளில் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட அக்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அ.தி.மு.க., சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடந்தது. தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறும் பணியும் நேற்று துவங்கியது.

திரைமறைவில் பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., நடத்திய கூட்டணி பேச்சு வெற்றி பெற்றுள்ளது.

2ம் தேதி சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஒருவரும், அ.தி.மு.க., அமைச்சர் ஒருவரும் ஒரு மணி நேரம் தனியாக பேசி கூட்டணியை இறுதி செய்துள்ளனர். அதேபோல் நேற்று அமாவாசை நாள் என்பதால் பா.ம.க.,வை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவரை, அ.தி.மு.க., தொழிலதிபர்கள் சிலர் சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளனர்.

முதல் கட்டமாக அ.தி.மு.க., – பா.ஜ., – பா.ம.க., ஆகிய கட்சிகள் இடையே கூட்டணி அமைப்பதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு குறித்து பா.ஜ., சார்பில் குழு அமைத்த பின் பேச்சு நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க., – பா.ஜ., – பா.ம.க., கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை அ.தி.மு.க. மேலிடம் வெளியிட திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: அ.தி.மு.க., – பா.ஜ., – பா.ம.க., ஆகிய கட்சிகளுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க.,விடம் இன்னும் பேச்சு துவக்கவில்லை. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்துக்கு அமெரிக்காவில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முடிந்ததும் அவரது மனைவி பிரேமலதாவுடன் பேச்சு நடத்த அ.தி.மு.க., தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

%d bloggers like this: