சம்பளதாரர்கள்… விவசாயம்… ரியல் எஸ்டேட்… சலுகைகளை வாரி வழங்கிய தேர்தல் பட்ஜெட்!

பொதுவாக, பட்ஜெட் என்பது ஒரு நாட்டுக்கான நிதித் திட்டமிடல் தான். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்வது, கடந்த ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்கிற மாதிரியான விஷயங்கள் எல்லாம் எடுத்துச் சொல்லத்தான் பட்ஜெட் தாக்கல் பயன்பட்டு வந்தது.

ஆனால், சமீப காலமாக பட்ஜெட் என்றாலே கடந்த ஆண்டுகளில் தங்களது அரசாங்கம் புரிந்த சாதனைகளை எடுத்துச் சொல்லவும், எதிர்வரும் ஆண்டில் தங்கள் அரசாங்கம், மக்களுக்கு என்னென்ன நன்மைகளைத் தரவிருக்கிறது என்பதை எடுத்துச்சொல்லும் அரசியல் களமாக மாறிவிட்டது. அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பா.ஜ.க அரசாங்கத்தின் கடைசி ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டும் தேர்தல் பட்ஜெட்டாக அமைந்துவிட்டதை யாரும் மறுக்க முடியாது.

பா.ஜ.க ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல நிதிச் சீர்திருத்தங்கள் இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படையை மாற்றியமைக்கக்கூடியதாக இருந்தாலும், சாதாரண மக்கள் அவற்றினால் கஷ்டப்படவே செய்தனர். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கத்தினால், சாதாரண மக்கள் படாதபாடுபட்டனர்.   ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்ததால், பல பொருள்களின் விலை உயர்ந்து, மக்களின் சேமிப்பு கரையவே செய்தது. அரசின் இது மாதிரியான நடவடிக்கைகளினால் அதிருப்திக்குள்ளான மக்கள், சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க-வுக்கு அமோக ஆதரவு அளிக்கவில்லை. தவிர, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமா என்றும் யோசித்து வந்தனர்.

இந்த நிலையில், ஓட்டு போடும் மக்களின் அபிமானத்தை மீண்டும் பெறுவதற்கு இந்த பட்ஜெட்டைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் நிதி அமைச்சர் பியூஷ் கோயல். பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி-யினால் பாதிப்படைந்த சாதாரண, நடுத்தர மக்களின் கவனத்தை ஈர்க்கிற வகையில் தனது முதல் பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்திருக்கிறார். இந்திய வாக்காளர்களின் அபிமானத்தைப் பெறுகிறமாதிரி இந்த பட்ஜெட்டில் அவர் அறிவித்திருக்கும் திட்டங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

சம்பளதாரர்களுக்கு வாரி வழங்கப்பட்ட வரிச் சலுகை

ரூ.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்கள் இனி வரி எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்று அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல். கடந்த ஆண்டுகளில் ரூ. 5 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் ரூ.12,500 வரை வரி கட்டி வந்தனர். இனி அவர்களுக்கு இந்த ரூ.12,500 மிச்சமாகும். அரசின் இந்த அறிவிப்பினால் மூன்று கோடி சம்பளதாரர் கள் பலன் அடைய வாய்ப்பிருக்கிறது. வருமான வரிச் சலுகைக்கான வரம்பினை ரூ.5 லட்சம் வரை உயர்த்த வேண்டும் என பா.ஜ.க-வின் சில தலைவர்கள் பல ஆண்டுகளாகவே சொல்லி வந்தனர். நடுத்தர மக்களின் இந்த எதிர்பார்ப்பைக் கடந்த நான்காண்டுகளாக நிறைவேற்றாத பா.ஜ.க அரசாங்கம், தேர்தல் நடக்கவிருக்கும் இந்தச் சமயத்தில் நிறைவேறியிருக்கிறது. ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் சம்பளதாரர்களுக்கு அரசின் இந்த அறிவிப்பினால் எந்தப் பயனும் இல்லை என்றாலும், ஒருபகுதி மக்களுக்கு நன்மை செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

தற்போது முறைப்படுத்தப்படாத துறையில் இருக்கும் தனியார் ஊழியர்களுக்கு (ரூ.15,000 மாத வருமானத்திற்குக் கீழ் உள்ளவர்கள்) பென்ஷன் என்பது இல்லாமலே இருக்கிறது. இந்த நிலையில், இப்போது 30 வயதிருக்கும் ஒருவர் ஒரு மாதத்துக்கு ரூ.100 வீதம் சேமிக்கத் தொடங்கினால், அவருடைய அறுபதாவது வயதில் மாதமொன்றுக்கு ரூ.3,000 பென்ஷன் பெறமுடியும் என்கிற திட்டத்தையும் நிதி அமைச்சர் அறிவித்திருக்கிறார். இந்த பென்ஷன் திட்டத்துக்காக  ரூ.500 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. அரசாங்கமும் மாதம் 100 ரூபாய் இந்தக் கணக்கில் போடும். இப்போதைக்கு ரூ.3,000 என்பது பெரிய தொகையாக இருந்தாலும், 30  ஆண்டுகள் கழித்து, அதனால் பெரிய பயன் எதுவும் இருக்காது என்றாலும் தனியார் ஊழியர் களுக்கும் பென்ஷன் என்கிற கவர்ச்சிகரமான அம்சத்தை வாக்காளர்களின் மனதில் விதைத்திருக் கிறது மத்திய அரசாங்கம். இந்தத் திட்டத்தின் மூலம் 10 கோடித் தொழிலாளர்கள் பயன்  பெறுவார்கள்.

விவசாயிகளுக்கு…

விளைபொருள்களின் நிலையற்ற விலையாலும், பருவமழை தவறுவதாலும், விவசாயிகளின் வருமானம் வெகுவாகக் குறைந்ததால், பலரும் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். விவசாயிகள் இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்தைத் தணிக்க ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற நிலையில், இரண்டு ஹெக்டேருக்குக் கீழே வைத்திருக்கும் விவசாயி களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்க மத்திய அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. ஆண்டுக்கு மூன்று முறை ரூ.2,000 வீதம் இந்தப் பணம் விவசாயிகளின் கணக்குகளில் நேரடியாகத் தரப்படும். இதனால் 12 கோடி விவசாயிகள் பயன் பெற வாய்ப்புண்டு என்று சொல்லியிருக்கிறது மத்திய அரசாங்கம். ரூ.6,000 என்பது சிறிய தொகைபோல் தெரிந்தாலும், இதுவரை எந்த அரசாங்கமும் செய்யாத ஒரு செயலை இந்த அரசாங்கம் செய்திருக்கிறது.

தொழில் துறை, சேவைத் துறை போன்றவற்றுக்கு எந்தவிதமான உற்சாகமான அறிவிப்பு எதுவும் செய்யாத நிலையில், விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு மட்டும் ரூ.75,000 கோடியை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்திருக்கிறார் நிதி அமைச்சர் பியூஷ் கோயல். விவசாயத் துறைக்கு கடந்த ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விடக் கூடுதலாக ரூ.20,000 கோடியை ஒதுக்கீடு செய்திருக்கிறார். இதுமட்டுமின்றி, விவசாயி ஒருவர் கால்நடை வளர்ப்பையும், மீன் வளர்ப்பையும் செய்யும்பட்சத்தில் கிஷான் கிரெடிட் கார்டு மூலம் கடன் வாங்கியிருந்தால், அவர் வாங்கிய கடனுக்கான வட்டி 2% தள்ளுபடி செய்யப்படும். இந்தக் கடன் தொகையைச் சரியாகச் செலுத்தியிருந்தபட்சத்தில் அதற்கும் 3% வட்டித் தள்ளுபடி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுபோக, இயற்கை சீற்றத்தினால் பாதிப்படைந்த விவசாயிகள் வாங்கிய கடனில் 2% வட்டித் தள்ளுபடி அளிக்கப்படும் என விவசாயிகளுக்குப் பல சலுகைகளை அளித்ததன் மூலம் விவசாயிகளின் நல்லாதரவை இந்த அரசாங்கம் பெற முயற்சி செய்திருக்கிறது.

ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு…

உள்கட்டமைப்புத் துறையின் வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டில் பல திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. கிராமப்புறங்களின் உள்ள சாலைகள் அமைக்க கடந்த ஆண்டு ரூ.15,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், எதிர்வரும் ஆண்டில் இதற்கு ரூ.19,000 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. 2019-ம் ஆண்டுக்குள் எல்லாக் கிராமங்களுக்கும் மின் இணைப்பு அளிக்கப்படும் என்கிற அறிவிப்பினால் நகர்ப்புறங்களில் மட்டும் இருந்தவந்த ரியல் எஸ்டேட் வளர்ச்சி இனி கிராமப்புறங்களிலும் ஏற்படும் என  எதிர்பார்க்கலாம்.

ஒருவர் இரண்டு வீடு வைத்திருந்து அதில் ஒரு வீட்டில் வசிப்பதாகக் கருதப்படும். இரண்டாவது வீட்டிற்கு வாடகை வருமானம் கணக்கிடப்பட்டு வரி விதித்தது தற்போது விலக்க அளிக்கப் பட்டுள்ளது. வீட்டு வாடகையாக அளிக்கப்படும் தொகைக்கு டி.டிஎஸ் பிடிப்பது  ரூ.1,80,000-லிருந்து ரூ.2,40,000-ஆக உயர்த்தியிருப்பது ஆகிய அறிவிப்பினால் இனி பலரும் சொந்தமாக வீடு வாங்கும் சூழ்நிலை ஏற்படும். இதனால் ரியல் எஸ்டேட் துறை மீண்டும் சுறுசுறுப்படைந்து, வீடு மற்றும் மனை களின் விலை உயர வாய்ப்பு உண்டு. விற்காத வீடுகளுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகை ஓராண்டிலிருந்து இனி இரண்டு ஆண்டுகளுக்கு அளிக்கப்படும் என்கிற அறிவிப்பு ரியல் எஸ்டேட் பில்டர்களுக்கு நன்மை செய்வதாக இருக்கும்.

ஜனநாயக மரபுகளை மீறாத பட்ஜெட்

2019-20-ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்தான். இதில் எந்தப் பெரிய அறிவிப்பும் இருக்காது. அப்படி அறிவித்தால், அது ஜனநாயக மரபுகளை மீறக்கூடிய செயலாக இருக்கும் என முன்னாள் நிதி அமைச்சர்களான யஷ்வந்த் சின்ஹா, ப.சிதம்பரம் உள்பட பலரும் எச்சரித்தனர். இந்த நிலையில், பியூஷ் கோயல் தாக்கல் செய்திருக்கும் இந்த பட்ஜெட்டில் பெரிய அளவில் அறிவிப்புகளை ஏதும் வெளியிடாமல் ஜனநாயக மரபின்படி நடந்திருக்கிறார். தனக்குக் கிடைத்திருக்கும் மிகக் குறைந்த வாய்ப்பினை நன்றாகப் பயன்படுத்தி, பா.ஜ.க அரசின்மீது மக்களுக்கு இருந்த சிறு அதிருப்தியையும் தன்னால் முடிந்த அளவுக்குத் தணிக்க முயற்சி செய்திருக் கிறார் நிதி அமைச்சர்.

%d bloggers like this: