பட்ஜெட் 2019: யாருக்கெல்லாம் வருமான வரிச் சலுகைகள்?

த்திய அரசின் இடைக்கால பட்ஜெட் 2019-20-ஐ பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். கடந்த பட்ஜெட்டில் சம்பளதாரர்களுக்கு அளித்த வரிச் சலுகை மற்றும் வரிச் சலுகையைப் பற்றி பட்ஜெட்டின்போது பெருமையாகக் குறிப்பிட்ட பியூஷ் கோயல்,  புதிய நிதியாண்டுக்கான வருமான வரிச் சலுகை பற்றி எதுவும் கூறாமல் வேறு அறிவிப்புக்குச் சென்றுவிட்டார்.

கடந்த பட்ஜெட்டில் சம்பளதாரர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்ட நிலைக்கழிவு இப்போது, ரூ.40,000-லிருந்து ரூ.50,000-ஆக உயர்த்தப் படுகிறது.

வங்கி மற்றும் தபால் அலுவலக டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டிக்கு இப்போது ரூ. 10,000 வரை டி.டி.எஸ் பிடிக்கப்படுவதில்லை.  இது ரூ.40,000-ஆக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் சிறிய அளவில் வங்கியில் டெபாசிட் செய்கிறவர்கள் மற்றும் பணிபுரியாத குடும்பத் தலைவிகள் பயனடைவார்கள்.

வீட்டு வாடகையில் பிடிக்கப்படும் டி.டி.எஸ்-க்கான வரம்பு ரூ.1.80 லட்சத்திலிருந்து ரூ.2.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு வாடகை மூலம் பயனடையும் நடுத்தர வருவாய் பிரிவினர் இதனால் பயனடைவார்கள்.

 

ஒருவருக்கு இரண்டு வீடுகள் இருந்து ஒரு வீட்டில் அவர் குடியிருப்பது போல் கணக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இரண்டாவது வீட்டை வாடகைக்கு விட்டிருந்தாலும், விடாவிட்டாலும் அதனை வாடகைக்கு விட்டதாகக் கணக்கில் கொண்டு வரிகட்ட வேண்டும் என தற்போது உள்ளது. பட்ஜெட் 2019-20-ல் இரண்டாவது வீடும் அதன் சொந்தக்காரர் அவரின் சுய பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்கிறார் எனக் கொள்ளப்படும் என தற்போது மாற்றப் பட்டிருக்கிறது. இதன்மூலம், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வைத்திருக்கும் வரிதாரருக்கு லாபம் மற்றும் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கு இந்த அறிவிப்பு உதவும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

வீட்டை விற்றதன்மூலம் கிடைக்கும் நீண்ட கால மூலதன ஆதாய வரியைத் தவிர்க்க இப்போது இன்னொரு வீடு வாங்கிக்கொள்ளலாம் என இருக்கிறது. பட்ஜெட் 2019-20-ல் ரூ.2 கோடி வரையிலான மூலதன ஆதாயத்தின்மூலம் வாழ்நாளுக்குள் ஒருமுறை, இரண்டு வீடுகள் வாங்கிக்கொள்ளலாம் என சலுகை அளிக்கப் பட்டிருக்கிறது.
           
‘‘ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் வரை உள்ள தனிநபர்களுக்கு முழுமையாக வரித் தள்ளுபடி அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இனி எந்த வரியும் கட்ட வேண்டியதில்லை. அந்த வகையில், பி.எஃப்,  லைஃப் இன்ஷூரன்ஸ், சிறப்பு முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்திருந்தால் ரூ.6.5 லட்சம் வரையில் வருமானம் உள்ளவர்கள் வரி எதுவும் கட்ட வேண்டியதில்லை. சுமார் மூன்று கோடி நடுத்தர வருமானப் பிரிவினர் பயன் அடைவார்கள்’’ என பியூஷ் கோயல் அறிவிக்க நாடாளுமன்றத்தில் பெரும்பாலான எம்.பி-கள்   ஆரவாரம் செய்தார்கள்.

நிதி அமைச்சரின் இந்த அறிவிப்பு சம்பளதாரர் களுக்கு எந்த அளவுக்கு லாபம் தரும் என ஆடிட்டர் ஆர்.ஜெகதீஷிடம் கேட்டோம்.

‘‘மேலோட்டமாகப் பார்த்தால், ரூ.5 லட்சம் வரை வரி இல்லை என்பது அனைவருக்கும் லாபமானதாகத் தோன்றும். இந்தச் சலுகையை மத்திய அரசு, வரித் தள்ளுபடி என்கிற பெயரில்  வருமான வரிப் பிரிவு 87ஏ-ன் கீழ் வழங்கப்போகிறது. ஏற்கெனவே, இந்தப் பிரிவின் கீழ் ரூ.3.5 லட்சம் வரை வரிக்கு உட்பட்ட வருமானம் உள்ளவர் களுக்கு அதிகபட்சம் ரூ.2,500 வரித் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இப்போது ரூ.5 லட்சம்   வரை வரிக்கு உட்பட்ட வருமானம் உள்ளவர்களுக்கு அதிகபட்சம் ரூ.12,500 வரை வரி தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.
 
அடிப்படை வருமான வரி வரம்பு (5%, 20%, 30%) அடுத்த நிதி ஆண்டு வரைக்கும் தொடரும் என நிதி அமைச்சர் அறிவித்திருக் கிறார். காரணம், இடைக்கால பட்ஜெட்டில் அடிப்படை வருமான வரி வரம்பை (tax slab) மாற்ற முடியாது. அடிப்படை வருமான வரம்பில் மாற்றம் செய்தால் தான் அனைத்து வரிதாரர்களுக்கும் வரிச் சலுகை கிடைக்கும். அந்த வகையில், நிதி அமைச்சரின் இந்த அறிவிப்பால் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்தைத் தாண்டுபவர்களுக்கு எந்தச் சலுகையும் கிடையாது.

 

உதாரணம் மூலம் பார்ப்போம். ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.7.35 லட்சம் என வைத்துக்கொள்வோம். அவர்,  வீட்டு வாடகைபடி உள்ளிட்ட இதர வரிச் சலுகைகள் ரூ.50,000, 80சி-யின்கீழ் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்திருக்கிறார். 80டி-யின் கீழ் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு ரூ.25,000 பிரீமியம் கட்டியிருக்கிறார் என வைத்துக் கொண்டால், அவரின் வருமானத்திலிருந்து வரிச் சலுகைகள் ரூ.2.25 லட்சம் கழித்தால் அவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5.10 லட்சம். இவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் என்பதால் வரித் தள்ளுபடி ரூ. 12,500 கிடையாது.  அடிப்படை வருமான வரி விலக்கு ரூ.2.5 லட்சம் கழித்ததுபோக, மீதியுள்ள ரூ.2.60 லட்சத்தில், ரூ.2.5 லட்சத்துக்கு 5% (ரூ.12,500), ரூ.10,000-க்கு 20% (2,000) என மொத்தம் ரூ.14,500 வரிக் கட்டவேண்டும்” என்றார்.
   

%d bloggers like this: