ராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : துலாம்

விஷய ஞானம் மிகுந்த துலாம் ராசி அன்பர்களே! 13.2.19 முதல் 31.8.20 வரை உங்களுக்கு ராகுவும் கேதுவும் புது மலர்ச்சியை அளிக்கப்போகிறார்கள்.

ராகு அருளும் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு 10 – ல் இருந்து உங்களை ஒரு வேலையையும் செய்யவிடாமல் முடக்கிப்போட்ட ராகு பகவான் இப்போது 9 -ல் அமர்வதால், சோம்பல் நீங்கும்.

இதுவரை முடிக்கப்படாமல் கிடப்பில் கிடந்த பல காரியங்களை இனி முழுமூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள். வாழ்க்கை இனி பிரகாசிக்கும். குடும்பத்தில் எப்போது பார்த்தாலும் ஒருவித குழப்பங்களும், சண்டை சச்சரவுகளும் நிலவியிருந்ததே! இனி அவை நீங்கி, சந்தோஷம் குடிகொள்ளும். உங்களின் ஆலோசனையின்றி குடும்பத்தினர் எதுவும் செய்யமாட்டார்கள்.

வீட்டில் ஒரு சுபநிகழ்ச்சிகள் தடைபட்டுக் கொண்டிருந்தனவே… இனி, சுப காரியங்களால் வீடு களைகட்டும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய வழி காண்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம்  அதிகரிக்கும். உங்களுக்கு எதிராகக் கலகமூட்டியவர்களை ஒதுக்குவீர்கள். குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்துடன் போய் நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். 

பிள்ளைகளின் பிடிவாதக் குணமும் எதிர்த் துப் பேசும் பழக்கமும் மாறும். பொறுப்பாக நடந்துகொள்வார்கள். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்த  இடத்தில் நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாட்டில் படிக்கும் வாய்ப்பு தேடி வரும். பூர்வீகச் சொத்தைச் சீர்செய்வீர்கள். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். அவர்களின் துணையுடன் முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.

உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் சேரும்.  தடைப்பட்ட கல்வியைத் தொடர்வீர்கள்.

தாயாருடன் இருந்துவந்த மனஸ்தாபங்கள் நீங்கும். நீண்டகாலமாக எண்ணியிருந்த தெய்வக் கடன்களை இப்போது நிறைவேற்று வீர்கள். குடும்பத்துடன் வெளிமாநில புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு ஏற்றம் உண்டாகும். கன்னிப்பெண்கள் படிப்பிலும் விளையாட்டிலும் சாதிப்பார்கள். அவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும்; பெற்றோர்களால் ஆதாயம் உண்டு.

வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். தொழில் நுணுக்கங்களை அறிந்து  அதன்படி செயல்படுவீர்கள். எதிர்பாராத உதவியால் தொழில் லாபம் பெருகும். புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். அனுபவம் மிகுந்த வேலையாள்கள் வந்துசேருவார்கள்.

ஏற்றுமதி இறக்குமதி வகைகள், உணவு, இரும்பு, கணினி உதிரி பாகங்கள், மருந்துப் பொருள்களால் லாபம் அதிகரிக்கும். கடையை விரிவாக்கி அழகுப்படுத்துவீர்கள். அரசாங்க விஷயங்களில் அலட்சியம் வேண்டாம்.

இதுவரை 10 – ல் இருந்த ராகு, உத்தியோகத் தில் வேலைச்சுமையையும், வீண்பழியையும் கொடுத்தாரே, இனி 9 – ல் நுழைவதால் அந்த நிலை மாறும். உங்களின் நிர்வாகத்திறனை மேலதிகாரி பாராட்டுவார். தள்ளிப்போன பதவி உயர்வும் ஊதிய உயர்வும் தடையின்றி கிடைக்கும். வேலைச்சுமை குறையும்.  சிலருக்கு தகுதி, திறமைக்கேற்ற உத்தியோகம் புகழ் பெற்ற நிறுவனத்திலிருந்து கிடைக்கும்.

கலைத்துறையினருக்குத் தடைகள் யாவும் நீங்கி வாய்ப்புகள் அதிகரிக்கும். அவற்றைத் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களின் படைப்புகள் பட்டிதொட்டியெங்கும் பேசப்படும். அதேபோல், பழைய நிறுவனத் திலிருந்து வராமலிருந்த சம்பளபாக்கி, இப்போது உங்களின் கைக்கு வந்து சேரும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றி வாருங்கள்.

கேது பகவான் அருளும் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்கு 4 – ல் இருந்து கொண்டு, பதற்றத்தை அளித்துக்கொண்டிருந்த கேது, இப்போது மூன்றாவது வீட்டில் வந்தமர்கிறார். குடும்பத்தில் சந்தோஷம் கரை புரளும்; சங்கடங்கள் தீரும்.

எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவிக்கு அவர் ஆசைப்பட்ட டிசைனில் தங்க நகைகள் வாங்கிக் கொடுப்பீர்கள். சோம்பலாக இருந்த பிள்ளைகள் இனி சுறுசுறுப்படைவார்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள்.

சகோதரர்களிடம் வீண் பிரச்னைகள் வேண்டாம். அவர்களிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சொத்துச் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைக் கவனமாகக் கையாளுங்கள். இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாக முடியும்.

உங்களில் சிலர், வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். சிலர் கூடுதலாக அறை கட்டுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. நீங்களும் அயல்நாடு சென்று வருவீர்கள். உதாசினப்படுத்திய உறவினர்கள், நண்பர்கள் இனி தேடி வருவார்கள். தங்க நகை, ரத்தினங்கள் சேரும்.

வியாபாரத்தில் முக்கியப் பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலையாள்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்தும், புதிய வாய்ப்புகள் வந்தமையும். சக ஊழியர்களுடன் இருந்து வந்த பகை நீங்கி நட்பு உருவாகும். கணினித் துறையினருக்கு அதிக ஊதியம் மற்றும் சலுகையுடன் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

மொத்தத்தில் இந்த ராகு கேதுப் பெயர்ச்சி,  மனத்தாங்கலுடன் திகழ்ந்த உங்களை மகிழவைப்பதாக அமையும். அனுமன் வழிபாடு உங்களுக்கு உற்றத்துணையாகும். அனுமனுக்கு வெண்ணெய் சாத்தி வழிபடுங்கள் வெற்றி உண்டாகும்.

%d bloggers like this: