இது கலைஞர் தி.மு.க அல்ல!” – கடுப்பேற்றும் ஸ்டாலின்… கலக்கத்தில் கூட்டணி

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் தொடங்கி லெட்டர் பேடு கட்சிகள் வரை விதவிதமாக வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டன. எதிரிகள் நண்பர்கள் ஆகிறார்கள். நண்பர்கள் எதிரிகள் ஆகிறார்கள். காலைப் பிடிப்பதும் காலை வாருவதுமான கரைவேட்டிகளின் காட்சிகளை இனி சகஜமாகக் காணலாம். அந்த வகையில் தமிழ்நாட்டில் ‘40-க்கு 40’ என்கிற இலக்குடன் கூட்டணி வியூகத்தை வகுத்துவருகிறது தி.மு.க. அதேசமயம் தொகுதிப் பங்கீடு விஷயத்தில், கட்சித் தலைவர் ஸ்டாலினின் கறார் நடவடிக்கைகளைக் கண்டு கூட்டணி கட்சிகள் ஆடிப்போயிருக்கின்றன. வெளியே ஒற்றுமையாகக் காட்டிக்கொண்டாலும் தொகுதி பேர விவகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்குள் பெரும் யுத்தமே நடப்பதாகக் கிசுகிசுக்கிறார்கள் கூட்டணியில் உள்விவரம் அறிந்தவர்கள். என்னதான் நடக்கிறது தி.மு.க கூட்டணியில்?

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் உற்றுக் கவனிக்கப்படும் கட்சியாக மாறியிருக்கிறது தி.மு.க. கருணாநிதி இல்லாமல் தி.மு.க சந்திக்கும் முதல் தேர்தல் இது. தலைவராக ஸ்டாலின் களம் இறங்கும் முதல் தேர்தலும் இதுவே. கூட்டணிக் கட்சிகளிடம் கருணாநிதி ஆரம்பத்தில் கறார் காட்டினாலும்கூட அதன் பிறகு கனிந்துபோகும் வாய்ப்புகளை, கடந்த தேர்தல்களில் பார்க்க முடிந்தது. இப்போது நிலைமை அப்படி இல்லை என்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள்.

“கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியால் ஐந்தாண்டுகள் மக்களவையில் தி.மு.க உறுப்பினர்கள் ஒருவர்கூட இல்லாத பரிதாப நிலை ஏற்பட்டது. அதற்குப் பரிகாரமாக இந்த முறை அதிக அளவில் தி.மு.க உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குள் சென்றால் மட்டுமே, டெல்லி அரசியல் லாபியைத் தன் வசம் கொண்டுவர முடியும் என ஸ்டாலின் நினைக்கி றார். தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினரும் இதை உறுதிப்படுத்துகிறார்கள். “திருநாவுக்கரசர் மாற்றத்துக்கு ஸ்டாலினும் ஒரு காரணம். அவர் தொடக்கத்தில் இருந்தே அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகச் செயல்பட்டதை தி.மு.க விரும்பவில்லை. அவரை வைத்துக்கொண்டு தி.மு.க-வுடன் சீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தினால், எதிர்பார்த்த இடங்களைப் பெற முடியாமல் போய்விடுமோ என்ற சந்தேகம் காங்கிரஸ் தலைமைக்கு இருந்ததை மறுக்க முடியாது” என்று சொல்பவர்கள், “புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அழகிரி, சிதம்பரத்தின் ஆதரவாளராக இருந்தாலும் தி.மு.க-வுக்கு இணக்கமானவராகவே இருப்பார்” என்கிறார்கள்.

 

காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு?

“காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க கூட்டணியில் எத்தனைத் தொகுதிகள் தரப்படும்?” என்று அறிவாலயம் தரப்பில் விசாரித்தோம். “காங்கிரஸ் கட்சி, தி.மு.க கூட்டணிக்கு வருவது உறுதியான போது புதுச்சேரி பிளஸ் ஐந்து தொகுதிகள் என்று முடிவு செய்யப்பட்டது. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ‘ராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக’ என்று ஸ்டாலின் முழங்கிய பிறகு, காங்கிரஸ் தரப்பு கொஞ்சம் உற்சாகமாக இருந்தது. கருணாநிதி காலத்தில் பெற்றதைப்போல இரட்டை இலக்கத் தொகுதிகளைப் பெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள். அதற்கு இந்த முறை வாய்ப்பு இல்லை. தி.மு.க தலைவருக்கு மூளையாகச் செயல்படும் ஓ.எம்.ஜி குழு, கூட்டணிக் கட்சிகளின் பலம் என்ன, பலவீனம் என்ன, எத்தனைத் தொகுதிகளில் அவர்களால் வெற்றிபெற முடியும் என்பதை எல்லாம் புள்ளி விவரங்களாக ஸ்டாலினிடம் ஒப்படைத்துள்ளது. அதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை இலக்கத் தொகுதிகளை மட்டுமே வழங்கும் முடிவில் தெளிவாக இருக்கிறது தி.மு.க. அதுவும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளரைக் களத்தில் இறக்கவேண்டும் என்கிற நிபந்தனைகளோடு இந்தத் தொகுதிப் பங்கீடு நடைபெறும்” என்றார்கள்.

ஓ.எம்.ஜி குழு சார்பில் பேசியவர்களோ, “கட்சி நிர்வாகிகளிடமும் கூட்டணி கட்சி சார்பில் பேச வரும் நிர்வாகிகளிடமும் ஸ்டாலின் தரப்பில் தெளிவாக, “இது கலைஞர் வளர்த்த கட்சிதான். அவர் வழியில்தான் எப்போதும் செயல்படும். ஆனால், தொகுதிப் பங்கீடு விஷயத்தைப் பொறுத்தவரை மட்டும் இது கலைஞர் தி.மு.க அல்ல… ஸ்டாலின் தி.மு.க. அதை மனதில் கொண்டே பேச்சுவார்த்தைகளை ஆரம்பியுங்கள்” என்று சொல்லப்படுகிறது. கடந்த காலங்களில் கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை வாரி வழங்கியதால் ஏற்பட்ட விளைவுகளை ஸ்டாலின் மறக்கவில்லை. அதனால் இந்த முறை, 25 இடங் களுக்கும் குறையாமல் களம் இறங்க வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அவரது கணக்குபடி காங்கிரஸுக்கு அதிகபட்சமாக எட்டுத் தொகுதிகளை விட்டுத் தரலாம். மேலும், 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனித்து நின்றபோது அவர்கள் பெற்ற வாக்கு விகிதம் என்ன என்பது வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது.

குறிப்பாக நாகர்கோவில், சிவகங்கை உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் மட்டுமே அவர்கள் சொல்லிக் கொள்ளும்படி வாக்குகளை வாங்கியிருந்தார்கள். கூட்டணிக் கட்சிகளுக்கு உள்ள செல்வாக்கு விவரங்கள் குறித்து தி.மு.க தரப்பில் நடத்தப்பட்ட சர்வேயில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாகக் கருதப்படும் தொகுதிகளில் மூன்று முதல் நான்கு தொகுதிகள் வரை மட்டுமே வெற்றி வாய்ப்புள்ளது என்ற ரிப்போர்ட் கிடைத்திருக்கிறது. இதைப் பார்த்து ஸ்டாலின் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்” என்றார்கள்.

தி.மு.க-வின் இந்தக் கணக்கு காங்கிரஸ் தரப்பையும் எட்டியுள்ளது. ப.சிதம்பரம் தனக்கு நெருக்கமானவர்களிடம், “தி.மு.க ஐந்து முதல் ஆறு தொகுதிகள்வரையே கொடுக்கும் என்று தெரிகிறது. அதற்கு மேல் வாய்ப்பில்லை” என்று சொன்னாராம். ஆனால், காங்கிரஸ் நிர்வாகிகளோ “ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தல் வெற்றிக்குப் பிறகு நமது கட்சியின் கிராஃப் உயர்ந்திருக்கிறது. இங்கு தலைவர்கள் வரிசையிலே பத்து பேர்வரை இருக்கிறார்கள். இவர்களுக்கே பத்து தொகுதிகள் தேவைப்படும். மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, ஏற்கெனவே கடலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அந்தத் தொகுதியை அவர் எதிர்பார்க்கிறார். திருச்சி அல்லது ராமநாதபுரம், காஞ்சிபுரம் அல்லது ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு அல்லது திருப்பூர் மற்றும் திருநெல்வேலி, சிவகங்கை, சேலம், தேனி, ஆரணி என காங்கிரஸின் தலைவர்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. இதில் ஆறு தொகுதிகள் மட்டும் அளித்தால் நாங்கள் வேலை செய்ய மாட்டோம்” என்று போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.

இதர கட்சிகளுக்கு எவ்வளவு?

ம.தி.மு.க கணக்கு வேறு ரகம். நான்கு தொகுதிகள் வேண்டும் என்று கேட்டால்தான் இரண்டைப் பெற முடியும் என்று நினைக்கிறார் களாம். திருச்சி, காஞ்சிபுரம், ஈரோடு, விருதுநகர் தொகுதிகளைக் குறிவைத்திருக்கிறார்கள். திருச்சியை வைகோ-வுக்கு என்று சொல்லியே கேட்கப்போகிறார்களாம். தி.மு.க தரப்பில் இரண்டு தொகுதிகளை ஓகே சொல்லும் முடிவில் இருக்கிறார்கள். திருச்சியும், வட மாவட்டத்தில் ஒரு தொகுதியும் தரப்படலாம்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த இரண்டு மாதங்களாகவே, தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுவிடும் என்ற நம்பிக்கையில் விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் பூத் கமிட்டிவரை அமைத்துவிட்டார்கள். கடந்த வாரம் நடைபெற்ற அக்கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தில், ‘விழுப்புரம், சிதம்பரம் இரண்டு தொகுதிகளையும் நாம் கேட்டுப்பெற வேண்டும்’ என்று முடிவு செய்துள்ளார்கள். அக்கட்சி சார்பாகப் பேசிய வர்கள், “2009, 2014 இரண்டு தேர்தல்களிலும் இரண்டு தொகுதிகளில் நின்றோம். 2009-ம் ஆண்டு விழுப்புரம் தொகுதியில் இரண்டா யிரத்துக்கும் குறைவான ஓட்டுகளில் தோல்வியைத் தழுவினோம். அதை அடிப்படையாக வைத்தே, 2014-ல் விழுப்புரம், சிதம்பரம் ஆகிய தொகுதிகள் வேண்டும் என்று கருணாநிதியிடம் கேட்டோம். அப்போதே ஸ்டாலின் ஒரு தொகுதியே போதும் என்று சிதம்பரம் தொகுதியை மட்டும் வழங்கினார். கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு வெளியே வந்த திருமா, ‘ஒன்றைப் பெற்றாலும் ஒற்றுமையாக இருப்போம்’ என்று பெருந்தன்மையாகக் குறிப்பிட்டார். ஆனால், வி.சி.க-வுக்குள் எழுந்த களேபரத்தால் மீண்டும் கருணாநிதியைச் சந்தித்துப்பேசி  விழுப்புரம் தொகுதி வேண்டும் என்று கேட்டோம்.

ஆனால், சம்பந்தமே இல்லாமல் திருவள்ளூர் தொகுதியைத் தந்ததால் தோல்வியைச் சந்தித்தோம். இந்தத் தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் தொகுதி களில் கண்டிப்பாகப் போட்டியிட வேண்டும் என்ற முடிவில் உள்ளோம். ஆனால், தி.மு.க தரப்பில், ‘உங்களுக்கு ஒரு தொகுதி. அதேசமயம், இரண்டு தொகுதிகள் வேண்டும் என்றால் ஒரு தொகுதியில் திருமாவளவனும் மற்றொரு தொகுதியில் ரவிக்குமாரும் வேட்பாளராகக் களம் இறங்க வேண்டும். இரு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும்’ என்று நிபந்தனை விதித்திருக்கிறார்கள்” என்றார்கள்.

இடதுசாரி கட்சிகளுக்கு தி.மு.க கூட்டணியில் திருப்பூர், கோவை ஆகிய இரண்டு தொகுதிகளை இரண்டு கட்சிகளுக்கும் தள்ளிவிடலாம் என்று திட்டமிடுகிறார்கள். ஏற்கெனவே கொங்கு மண்டலத்தில் தி.மு.க கொஞ்சம் வீக்காக இருப்பதால் அங்கு களம் இறங்கி ரிஸ்க் எடுக்க வேண்டாம்; பொள்ளாச்சி தொகுதியை மட்டும் தன் வசம் வைத்துக்கொள்ளலாம் என்று தி.மு.க திட்டமிடுகிறது. கடைசி நேரத்தில் தி.மு.க கூட்டணிக்குள் கொங்கு கட்சி ஒன்று இணையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அந்தக் கட்சி இணைந்தால் ஒரு சீட் வழங்கி, உதயசூரியன் சின்னத்திலே நிற்க வைக்கும் திட்டமும் தி.மு.க-விடம் உள்ளது.

முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு சீட் உறுதியாகி உள்ளது. அகில இந்தியத் தலைவர் காதர்மொய் தீனுக்கு அந்த சீட் வழங்கப்படலாம். வேலூர் தொகுதியை அந்தக் கட்சி குறிவைக்கிறது. அமைப்பு ரீதியாக வலுவாக உள்ள தங்களுக்கும் ஒரு தொகுதி வேண்டும் என த.மு.மு.க அமைப்பும் கேட்க உள்ளதாம். அவர்கள் ராமநாதபுரம், தேனி, வேலூர் இந்த மூன்று தொகுதிகளை லிஸ்ட்டில் வைத்துள்ளார்கள். ஆனால் அவர்களிடம்,  ‘சட்டமன்றத் தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம்’ என்று தி.மு.க தரப்பு சொல்ல நினைக்கிறது. த.மு.மு.க தரப்பு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தால் மயிலாடுதுறை தொகுதியை அவர்களுக்குத் தரும் வாய்ப்புகள் உள்ளன.

மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகள் மற்றும் அவர் சார்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேசுபவர்களின் நடவடிக்கைகள், தி.மு.க முகாம்களிலிருந்து கூட்டணிக் கட்சிகளுக்கு விடுக்கப்படும் செய்திகள் எல்லாமே கறார் தொனியில் இருப்பது, கூட்டணியில் உள்ள பல கட்சிகளையும் கலங்கடித்துள்ளது. ‘இந்த முறை தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்புகள் இருப்பதுபோல தெரிகிறது. ஆனால், தி.மு.க தரப்பில் காட்டும் கெடுபிடிகளே, அதற்கு வேட்டு வைத்துவிடும் போலிருக்கிறது. கருணாநிதி இருந்தால், இதையெல்லாம் சமாளிக்கும் விதமே வேறு. ஆனால், தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் போல தி.மு.க-வில் ஆளாளுக்கு தலையெடுத்து நிற்கிறார்கள். அவர்களையெல்லாம் மு.க.ஸ்டாலின் கண்டுகொள்வதில்லை. அதை அவரும் விரும்புவதுபோலத்தான் தெரிகிறது. இப்போதே வெற்றிபெற்றுவிட்ட தொனியில் நடந்துகொள்கிறார்கள். இதெல்லாம் கூட்டணிக்கு அழகல்ல. கூட்டணிக்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையென்றால், அது வெற்றியை வெகுவாக பாதித்துவிடும்’ என்று கவலை பொங்கப் பேச ஆரம்பித்துள்ளனர் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த சில தலைவர்கள்!

%d bloggers like this: