ஜெயிக்கவில்லை என்றால் ஜெயில்!” – அ.தி.மு.க-வுக்கு டெல்லி எச்சரிக்கை!

சுடச்சுட நாம் கொடுத்த சுக்குமல்லிக் காபியைக் குடித்துக்கொண்டிருந்த கழுகாரிடம், ‘‘தேர்தல் கூட்டணி விவகாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது… அதிலும் அ.தி.மு.க-தான் முன்னால் இருப்பதாகத் தெரிகிறதே?” என்றோம்.

‘‘தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, தேர்தல் களத்தில் இறங்கி, வியூகம் வகுப்பது ஜெயலலிதாவின் ஸ்டைல். அதையே இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கையில் எடுத்துள்ளார். விருப்ப மனு வழங்கும் பணிகள் தொடங்கியது அப்படித்தான். அமைச்சர்களின் உறவினர்கள் பலரும், விருப்ப மனுக் கொடுத்துள்ளனர். குறிப்பாக, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தர், அமைச்சர்கள் சி.வி.சண்முகத்தின் அண்ணன், சம்பத்தின் மகன், வீரமணியின் உறவினர் என அமைச்சர்களின் ரத்தப் பந்தங்கள் வரிசையாக மனுக்களை வாங்கியுள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட உள்ள அமைச்சர்களே, தங்கள் உறவுகளுக்கு சீட் கேட்டுக் களத்தில் இறங்கவுள்ளனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இந்தக் கோதாவில் குதித்திருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்”

‘‘ஓ.பி.எஸ் கதையைச் சொல்கிறீரா?”

‘‘ஆமாம்! ‘என் மகன் அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர். அவர் சீட் கேட்பது தார்மீக உரிமை. இதில் என்ன தவறு இருக்கிறது?’ என்று கேட்டுள்ளார். தேனி தொகுதியை ரவீந்தர் குறிவைத்துள்ளாராம். அந்தத் தொகுதியில் இப்போதே ஓ.பி.ஆர் என்ற அடைமொழியோடு வாழ்த்து போஸ்டர்களும் பளிச்சிடுகின்றன.’’

‘‘ம்! தி.மு.க-வில் ஏன் இன்னும் விருப்ப மனு வாங்காமல் இருக்கிறார்கள்?’’

“ஊராட்சி சபைக் கூட்டம் முடிந்து, பிப்ரவரி 5-ம் தேதிதான் சென்னைக்குத் திரும்பியுள்ளார் ஸ்டாலின். முதலில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்துப் பேச உள்ளார். அதற்குப் பிறகே கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஆரம்பிக்க உள்ளாராம். தி.மு.க சீட் பேரம் குறித்து விரிவான விவரங்களை உமது நிருபர் கவர் ஸ்டோரியாக கொடுத்துள்ளாரே… அதைப் பார்த்துக்கொள்ளும்.’’

‘‘கூட்டணி விஷயத்தில் கூலாக இருக்கும் ஸ்டாலின், ரஜினி விஷயத்தில் வருத்தமாக இருக்கிறார் என்கிறார்களே?”

 

‘‘பத்திரிகை விவகாரத்தை வைத்து, பத்திரிகைக்குச் செய்தி கேட்கிறீர். பலே… பலே… ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் திருமணப் பத்திரிகை கொடுக்க ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டுக்கு, கடந்த புதன்கிழமை மாலை ரஜினிகாந்த் சென்றார். அரசியல் ரீதியாக இந்தச் சந்திப்பு இல்லை என்று கூறப்பட்டாலும், பத்திரிகை கொடுத்ததே அரசியலாகிவிட்டது. தன்னைச் சந்திக்கும் முன், திருநாவுக்கரசரைச் சந்தித்துப் பேசியதில் ஸ்டாலினுக்கு வருத்தம் என்கிறார்கள்.’’

‘‘அதனால்தான் ரஜினி – ஸ்டாலின் சந்திப்புப் புகைப்படம்கூட வெளியிடப்படவில்லையா?’’

‘‘ரஜினி – ஸ்டாலின்  சந்திப்புப்  புகைப்படம் வெளியாகும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த போது, ஸ்டாலின் – டிரம்ஸ் சிவமணி சந்திப்புப் படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தது தி.மு.க தலைமை. ரஜினி சந்திப்புப் பற்றி முரசொலியில்கூடச் செய்தி வெளியிடவில்லை. தி.மு.க தரப்பில் கேட்டால், ‘படம் வேண்டாம் என ரஜினியே மறுத்துவிட்டார்’ என்கிறார்கள்.’’

‘‘சரி, எதற்காக திருநாவுக்கரசர் வீட்டுக்கு முதலில் சென்றாராம் ரஜினி?’’

‘‘மாப்பிள்ளை விசாகன், திருநாவுக்கரசரின் நண்பரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சொர்ணா சேதுராமனின் மருமகன். திருநாவுக்கரசர் மூலமாகவே, சொர்ணா சேதுராமனிடம் சம்பந்தம் பேசப்பட்டிருக்கிறது. அந்த நன்றிக்காக முதல் பத்திரிகையை திருநாவுக்கரசருக்கு வைத்தாராம் ரஜினி.’’

‘‘சரி, ரஜினி – திருநாவுக்கரசர் சந்திப்பில் திருமாவளவன் எப்படி வந்தார்?’’

‘‘அதுதான் சுவாரஸ்யமே. ‘தேசம் காப்போம்’ மாநாட்டில் கலந்துகொண்ட திருநாவுக்கரசருக்கு நன்றி தெரிவிக்கவே, திருமா சென்றுள்ளார். திருநாவுக்கரசர் வீட்டில் திருமாவுக்கு காலை 10 மணிக்கும், ரஜினிக்கு 12 மணிக்கும் நேரம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், திருமா, 11 மணிக்கு மேல்தான் திருநாவுக்கரசர் வீட்டுக்கு வந்திருக்கிறார்; அவர் வந்த சிறிது நேரத்தில் ரஜினியும் என்ட்ரி கொடுத்துவிட்டார்.’’

‘‘ஓகோ!’’

‘‘இதனால் இருவர் சந்திப்பு, மூவர் சந்திப்பாக மாறியுள்ளது. திருமாவிடம் ‘உங்களைத் தனியாக வந்து சந்தித்துப் பத்திரிகை அளிக்க  இருந்தேன்’ என்று சொல்லியிருக்கிறார் ரஜினி. அதற்கு, ‘பரவாயில்லை… இங்கேயே தந்துவிடுங்கள்’ என்று திருநாவுக்கரசர் வீட்டில் வைத்தே  தனக்கான பத்திரிகையை திருமா வாங்கியுள்ளார். அதன் பிறகே மூவரும் இணைந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்கள்.’’

‘‘சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்பட்டதா?’’

‘‘ரஜினி வருவதற்கு முன்பு, திருநாவும், திருமாவும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து, பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து தன்னை நீக்கியது குறித்துத் தன் வருத்தத்தைப் பகிர்ந்துகொண்ட திருநாவுக்கரசர், ‘தேர்தல்வரை மாற்ற மாட்டார்கள் என்றே நினைத்தேன்’ என்று சொல்லியிருக்கிறார். ‘சரி, தேர்தல் களத்தில் நின்று வெற்றிபெற்று டெல்லி சொல்லுங்கள்’ என்று திருமா ஆறுதல் சொன்னாராம். ரஜினி வந்த பிறகு அரசியல் பேச்சு இல்லை என்கிறார்கள். இது குடும்ப விசேஷம் என்பதால், போகும் இடங்களில் அரசியலைப் பக்குவமாகத் தவிர்த்துவருகிறாராம் ரஜினி.’’

‘‘டி.டி.வி.தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைத்துவிடுமா?’’

‘‘குக்கர் சின்னம் கோரி, தினகரன் தரப்பு போட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘அ.ம.மு.க-வுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது. அக்கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குவது குறித்துத் தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று சொல்லி விட்டது. ஏற்கெனவே தேர்தல் ஆணையம் கொடுக்க மறுத்ததால்தான் நீதிமன்றத்துக்கே சென்றார் தினகரன். எனவே, குக்கர் சின்னத்தை ஒதுக்குவதில் ஆணையம் ‘மக்கர்’ செய்யவே வாய்ப்புகள் அதிகம்.’’

 

‘‘ஆகா…’’

‘‘இரட்டை இலை சின்னம் தொடர்பாக தினகரன் தொடர்ந்த வழக்கை நான்கு வாரங்களுக்குள் டெல்லி உயர் நீதிமன்றம் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை, டெல்லி உயர் நீதிமன்றம் வழக்கை முடிக்கவில்லையென்றால், குக்கர் சின்னம் வழங்குவது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கில் ஆளும் அ.தி.மு.க தரப்புக்குச் சாதகமாகவே தீர்ப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை, எதிராக வந்தால், எதிரிக்கு இரண்டு கண்களும் போச்சே என்று தினகரன் தரப்பு கொண்டாடக் கூடும்.’’

‘‘அ.தி.மு.க – பி.ஜே.பி கூட்டணிப் பேச்சுவார்த்தை எப்படிப் போகிறது?”

‘‘பி.ஜே.பி தயவில் பல காரியங்களைச் சாதித்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, இப்போது கூட்டணிக்கு இழுத்தடிப்பதாகக் கோபத்தில் இருக்கிறது டெல்லி தரப்பு.  ‘காங்கிரஸ் ஆட்சி வந்துவிட்டால், தமிழக அமைச்சர்கள் பலரும் ஜெயிலுக்குப் போகவேண்டியிருக்கும்; எப்படியாவது பி.ஜே.பி-யுடன் கூட்டணியை வலுப்படுத்தி ஜெயிக்கப் பாருங்கள்’ என்று டெல்லியிலிருந்து அமைச்சர் ஒருவர் தரப்பிலிருந்து கண்டிப்பான தொனியில் தகவல் வந்ததாம். அநேகமாக எப்படியும் இறுதிக்கட்டத்தில் கூட்டணி ஏற்பட்டுவிடும் என்றுதான் தெரிகிறது.’’
 
‘‘வேறு வழி!’’

“தமிழகம் முழுவதும் அரசுக்குச் சொந்தமான கட்டடங்கள் மற்றும் காலி இடங்களில் விளம்பரப் பலகைகள் அமைத்து விளம்பரம் செய்துகொள்ள டெண்டர் வழங்கும் பணி, தீவிரமாக நடக்கிறது. ஏற்கெனவே இருக்கும் சட்டத்தில், இதற்காகவே திருத்தங்கள் செய்து, கெஸட்டிலும் வெளியிட்டு விட்டார்கள். தேர்தல் அறிவிப்புக்கு முன்பே, டெண்டர் பணிகளை முடிக்க அனைத்து மாநகராட்சி கமிஷனர்களும் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.’’

‘‘எதற்கு இத்தனை அவசரமாம்?’’

‘‘மொத்த டெண்டரையும் முக்கியமான அமைச்சர் ஒருவருடன் தொடர்புடைய அட்வர்டைசிங்  நிறுவனம் ஒன்றுக்குத்தான் கொடுக்கப்போகிறார்கள். பிறகு அவசரத்துக்குக் கேட்கவா வேண்டும். அதேசமயம்  இதை எதிர்த்து, நீதிமன்றம் செல்வதற்கு நுகர்வோர் அமைப்பு ஒன்று தயாராகிக்கொண்டிருக்கிறது!’’ என்ற கழுகார், தன் மொபைல் மணியோசையை உரக்க ஒலிக்கவிட்டபடி சிறகுகள் விரித்தார்.

%d bloggers like this: