கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் எத்தனை தடுமாற்றம்.. எத்தனை குழப்பம்.. கழகங்களில்

: கருணாநிதி,ஜெயலலிதா, இவங்க ரெண்டு பேரும் இல்லாமல் தமிழகம் தத்தளிப்பது கொஞ்ச நஞ்சமல்ல. இப்படி ஒரு தேர்தலை இதற்கு முன்பு திமுகவும், அதிமுகவும் எதிர்கொண்டிருக்கவே மாட்டார்கள். இவர்களின் வெற்றிடம் இப்போதைய தமிழக அரசியலின் பக்குவமின்மையை நாளுக்கு நாள் வெளிப்படுத்தியே வருகிறது. அரசியல் உப்பில்லாத உணவு போலவே உள்ளது.

தேர்தல் என்ற அறிவிப்பு வருவதற்கு முன்னமேயே அதற்கான காய்களை நகர்த்த தொடங்கிவிடுவார் ஜெயலலிதா. எல்லா கட்சிகளையும்விட முன்கூட்டியே வேட்பாளர் பட்டியலையும் வெளியிடுவார். அந்த பட்டியல் உளவுத்துறை உள்ளிட்ட எத்தனையோ பேர்களின் மூலமாக திரட்டி தயாரிக்கப்படும் பட்டியலாக இருக்கும். அப்படிப்பட்ட பட்டியலிலும் கூட நிறைய முறை மாற்றம் செய்யப்படும்.

அமைச்சரே ஆனாலும் பொழுது விடிந்தால் அவருக்கு பதவி நிச்சயம் இருக்காது. ஊழலோ, மற்ற புகார்களின் பேரால் தூக்கி அடிக்கவும் ஜெயலலிதா தயங்கியது இல்லை. அதேபோல, கூட்டணி என்பதை நம்பிக்கொண்டு கட்சியை வளர்க்கவில்லை. யாராக இருந்தாலும் தேடி வரவழைப்பார்.

உதிரிக்கட்சிகள்

கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அப்பாய்ண்ட்மென்ட்கூட கிடைக்காமல் ஜெயலலிதாவை சந்திக்க முடியாமல் திரும்பி வந்தவர்கள் எத்தனையோ பேர் உண்டு. இன்றைக்கு நாங்கள் இல்லாமல் கூட்டணி கிடையாது என்று மார்தட்டும் சிறு கட்சிகளை அன்று “உதிரிக்கட்சிகள்” என்றுதான் ஜெயலலிதா சொன்னார். ஒரு கட்டத்தில் கூட்டணியே தேவையில்லை என்று தனித்து நின்று போட்டி போட்டு வெற்றி பெற்றும் காட்டினார்.

சாணக்கியத்தனம்

இதேதான் கருணாநிதியும். திமுகவிலிருந்து பிரிந்தவர்கள், சண்டை போட்டவர்கள், மனஸ்தாபம் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாக கட்சிக்குள் கொண்டு வந்து மீண்டும் ஒன்றிணைத்துவிடுவார். முடிந்தவரை பிளவுகளை அங்கீகரிக்காமல் பார்த்து கொண்டார். ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரபலங்கள், முக்கிய புள்ளிகள், செல்வாக்கு உள்ள தலைகள் போன்றவர்களை கரெக்ட்டாக தட்டி தூக்கி திமுகவில் இணைய வைப்பார். இதன் பெயர்தான் சாணக்கியத்தனம்… அரசியல் சாதுர்யம்.!

இடைத்தேர்தல்கள்

இவர்கள் இருவரின் ஆளுமைகளை கண்டுதான் எண்ணற்றோர் உயிருக்கு உயிராக இன்னும் அவர்களை நேசிக்கிறார்கள். லட்சக்கணக்கான தொண்டர்கள் அவர்கள் மீது பைத்தியமாய் இருக்கிறார்கள். ஆனால் இன்றைய அரசியல் இவை எல்லாவற்றையும் தலைகீழாக புரட்டி போட்டு கொண்டிருக்கிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலங்கடத்துவது ஒரு ஆளுங்கட்சிக்கு எத்தனை பலவீனம் தெரியுமா? 21 தொகுதிகளுக்கு எம்எல்ஏக்கள் இல்லை. யாராவது அந்த தொகுதி மக்களை பற்றி கவலைப்பட்டார்களா? இடைத்தேர்தல்களையும் நடத்தவிடாமல் சாக்கு சொல்லிக் கொண்டிருப்பது அதிமுகவுக்கு எவ்வளவு பெரிய இழுக்கு?

கூட்டணி பலம்

இது எல்லாவற்றையும் விட முக்கியம் கூட்டணி விஷயத்தில் இப்படி ஒரு குழப்பமா? இன்னமும் முடிவில்லாமல் யாரை உள்ளுக்குள் இழுத்து போடுவது என்பதில் எவ்வளவு தடுமாற்றம். பாஜக, பாமக போன்றவற்றை கூட்டணிக்குள் கொண்டுவரும் சாமர்த்தியம் அதிமுகவுக்கு போதவில்லை என்பதைதான் இது காட்டுகிறது. திமுகவோ அதற்கு மேல் உள்ளது. ஸ்டாலின் ஒன்று சொல்கிறார், துரைமுருகன் ஒன்று சொல்கிறார். இவங்க வந்தா நாங்க வெளியே போயிடுவோம் என்று திருமாவளவன் சொல்கிறார்.

தடுமாற்றம்

திமுகவின் அபிமானத்தை பெறவோ என்னவோ வைகோ அளவுக்கு மீறி பாஜகவை விமர்சித்து வருகிறார். இப்படி இருந்தும் திட்டவட்டமான கூட்டணியை மு.க.ஸ்டாலின் அறிவிக்காதது ஏன் என்று தெரியவில்லை. காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்டுகள், முஸ்லீம் கட்சிகளுடன் கூட்டணி என்று பகிரங்கமாக இதுவரை முடிவெடுக்காதது ஏன்? வேறு யாராவது உள்ளே வரப்போகிறார்களா? அல்லது இருப்பவர்கள் வெளியே போக போகிறார்களா? என்பதில் திமுக இன்னும் தடுமாற்றத்திலேயே உள்ளது.

ஸ்தாபன முதிர்ச்சி

ஆட்சிநிர்வாகம், ஸ்தாபன முதிர்ச்சி, தொலைதூர பார்வை, எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் எளிதில் கையாளும் திறமை, மாற்றாரின் கடும் விமர்சனங்களையும் சகித்து கொள்ளும் பக்குவம் போன்றவை அனைத்தும் கருணாநிதி, ஜெயலலிதாவிடம் இருந்தது. அதிமுக, திமுகவை பாதுகாக்கவும், அதனை ஆட்சி பீடத்தில் அமர்த்தவும் இவர்கள் இருவரும் அர்ப்பணித்த உழைப்பும் தியாகமும் அளப்பரியது.

உள்ளக் குமுறல்

எத்தனையோ சோதனைகளையும், அடக்குமுறைகளையும், அவதூறுகளையும், பழிகளையும் தாண்டி கட்சியையும் ஆட்சியையும் பாதுகாத்து இவர்கள் வகுத்த வந்தபாதை, தற்போது மாறிவிடக்கூடாதே என்பதே அடிமட்ட அதிமுக, திமுக தொண்டனின் உள்ளக் குமுறலாக எழத் தொடங்கி உள்ளது.

%d bloggers like this: