சாலை விதிகளை மீறுபவர்களா நீங்கள்? உங்கள் இன்சூரன்ஸ் தொகை அதிகரிக்க வருகிறது புதிய சட்டம்!

அதிகரித்து வரும் வாகனங்களால் நாட்டில் உள்ள பல முக்கிய சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. அதனால் நாட்டின் முக்கிய நகரங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஸ்தம்பித்து நிற்கின்றது. குறிப்பாக, காலை மற்றும் மாலையில் அலுவலகம், பள்ளி செல்வோரின் வாகனங்களால் தான் பெருமளவில் நெரிசல் ஏற்படுகிறது.

இதன்காரணமாக, பள்ளி மற்றும் அலுவலகம் செல்பவர்கள் காலதாமதமாக செல்லக்கூடிய சூழல் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்கும் விதமாக சிலர் தங்களது வாகனங்களை அதிவேகமாக செலுத்துகின்றனர். அப்போது விபத்தில் சிக்கி தங்களது வாழ்க்கையும் இழக்கின்றனர். இதுபோன்ற சூழலை தவிர்க்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சாலை விதிகளை விதித்துள்ளன.

ஆனால், அவற்றை துளியளவும் மதிக்காத வாகன ஓட்டிகள், தங்களது தேவைக்காக போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டுகளுக்கு தண்டனை அளிக்கும் விதமாக விதமீறலைப் பொருத்து அபராதத் தொகை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்நிலையில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின், வாகனத்திற்கான இன்சூரன்ஸ் தொகையை அதிகரிக்கும்படி, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், சாலையில் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்கும் வாகனங்களுக்கு, இன்சூரன்ஸ் தொகையில் இன்சென்டிவ் வழங்கவும் இந்த ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் குறித்த தகவல்களை, வாகன பதிவெண் மூலம் ‘வாகன்’ என்னும் வாகன தகவல்கள் அடங்கிய மத்திய அரசின் மென்பொருள் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும் அந்த ஆணையம் வழிவகை செய்துள்ளது.

இதன்மூலம் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், போக்குவரத்து முறைகேட்டில் ஈடுபடும் வாகனங்கள் குறித்த தகவலை பெற்று அவர்களிடம் இருந்து அதிகளவில் பிரிமியம் இன்சூரன்ஸ் தொகையை வசூலிக்க உள்ளனர்.

இம்மாதிரியான திட்டம் ஏற்கனவே வளர்ந்த நாடான அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதனை இந்தியா தற்போதுதான் கடைபிடிக்க உள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் சாலை போக்குவரத்து பாதுகாப்பதுடன், விபத்துகளும் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

%d bloggers like this: