அ.தி.மு.க.-பா.ஜ.க. சீட்டு மல்லுக்கட்டு!

திகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பே, அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கிடையே நடைபெறும் சீட்டு மல்லுக் கட்டு… கூட்டணி உறுதி என்கிற இறுதி அறிவிப்பையே தள்ளிவைத் துள்ளது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

எண்ணிக்கை குறைந்தாலும் மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சிதான் அமையும். காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்காது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 272-ல் 42 தொகுதிகள் குறைந்து 230 தொகுதிகளில் வெற்றி பெறும். மாயாவதியும் அகிலேஷும் கைகோர்க் கும் உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு பழைய வெற்றி கிடைக்காவிட்டாலும் அங்குள்ள 80 தொகுதிகளில் 35 இடங்களை ஜெயிக்கும். அதனால் அடுத்து அமையப் போவது பா.ஜ.க. தலைமை யிலான கூட்டணி அரசுதான். அதில் அ.தி.மு.க. மந்திரிசபையில் இடம்பெறும் என்கிற இந்த “கேரட்டை’ காட்டிதான் தமிழகத் தில் உள்ள கட்சிக் குதிரைகளை பா.ஜ.க. வளைத்து வருகிறது.

மத்திய அமைச்சர் ஆசையில்தான் அ.தி.மு.க. தலைவர்கள் தங்களது பிள்ளைகளை களமிறக்குகிறார்கள். ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்தில் தொடங்கி தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி ஆகியோரது வாரிசுகளோடு லேட்டஸ்டாக எம்.சி.சம்பத், வளர்மதி ஆகியோரின் மகன்களும் களம் காண தயாராகி வருகிறார்கள். ஜெயித்தால் மந்திரி… தோற்றால் ஒரு தேர்தல் அனுபவம் என ஜெ. இல்லாத அ.தி.மு.க.வை குடும்ப கட்சியாக மாற்ற முயற்சி நடக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.

“இவ்வளவு இருந்தும் ஏன் பா.ஜ.க.வுடன் கூட்டணி என அ.தி.மு.க. அறிவிக்க தயங்குகிறது’ என கேட்டால், “”வெயிட் பண்ணுங்க சார்” என அ.தி.மு.க.வில் இருந்து பதில் வருகிறது. “திருப்பூரில் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பு வருமா?’ என பா.ஜ.க.வினரிடம் கேட்டால் “அந்த கூட்டத்தில் கூட்டணி பற்றிய ஒரு சில சிக்னல்கள்தான் வரும்’ என்கிறார்கள். “பிப்ரவரி 24-ம் தேதி ஜெ.வின் பிறந்தநாள் வருகிறது. அன்று வேட்பாளர்கள் பெயர்களுடன் அறிவிப்பு வர வாய்ப்பு இருக்கிறது’ என மென்று முழுங்குகிறார்கள் அ.தி. மு.க.வினர்.

“”பா.ஜ.க. சார்பில் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், அ.தி.மு.க. சார்பில் நேரடியாக தங்கமணி, வேலுமணி… மறைமுகமாக ஜக்கி வாசுதேவ், கேரள கவர்னர் சதாசிவம் ஆகியோர் கூட்டணி குறித்து பேசுகிறார்கள். இதில் ஆரம்பகட்ட பேச்சுகள் முடிவடைந்து விட்டன. ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையில் அ.தி. மு.க.விற்கு 25 சீட் மற்ற கட்சிகளுக்கு 15 சீட் என முடிவானது. இதையே தம்பிதுரை எதிர்க்கிறார். “பா.ஜ.க.வின் கையில் 15 தொகுதிகள் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம். இது எம்.ஜி.ஆர்., ஜெ. உருவாக்கிய கட்சி. அதை பா.ஜ.க.விடம் அடகு வைப்பதை அ.தி.மு.க. தொண்டன் ஏற்க மாட்டான்’ என ஓ.பி.எஸ்.சிடமும் இ.பி.எஸ்.சிடமும் நேருக்கு நேர் சண்டை போட்ட தம்பிதுரையிடம், “உங்களுக்கு ராஜ்யசபா சீட் தருகிறோம்’ என இருவரும் சமாதானம் பேசினார்கள்” என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

“”நாம் பா.ஜ.க.வுடன் கூட்டணி போகா விட்டால் நாங்கள் குடும்பத்துடன் சிறைக்கு போவோம். அத்துடன் எங்களை சார்ந்து நிற்கும் கவுண்டர் இன பிரமுகர்கள் மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் வருமான வரித்துறையின் ரெய்டுகளில் சிக்குவோம்” என்றும் ஜக்கி வாசுதேவும் கேரள கவர்னர் சதாசிவமும் எச்சரிக்கிறார்கள் என ஓ.பி.எஸ்.சும் இ.பி.எஸ்.சும் சொன்னதை ராஜ்யசபா சீட் என்கிற “கேரட்’டோடு ஏற்றுக் கொண்டார் தம்பிதுரை என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

அ.தி.மு.க.வின் தொகுதிகள் போக மீதமுள்ள 15 தொகுதி களில் பா.ஜ.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் பெரும் மோதல் வெடித்துள்ளது. பா.ம.க.விடம் பேசி வரும் நிர்மலா சீதாராமனிடம் முதலில் புதுச்சேரியோடு சேர்த்து ஏழு தொகுதி என ஆரம்பித்த பா.ம.க., 6 அடுத்து 5 என ஒவ்வொரு படியாக இறங்கியது. ஒரு கட்டத்தில் நிர்மலா சீதாராமன் “அன்புமணி மீது மருத்துவ கல்லூரி அனுமதியில் நடைபெற்ற ஊழல் வழக்கு இருக்கிறது. உங்களுக்கு தி.மு.க. முகாமில் வரவேற்பில்லை’ என வெடித்திருக்கிறார். அதற்கு பதிலளித்த பா.ம.க.வோ, “”பா.ஜ.க. 10 தொகுதிகளை கேட்கிறது. எங்கும் நீங்கள் நோட்டாவை தாண்டி வாக்குகள் பெறவில்லை. அ.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளின் வாக்குகளில் வெற்றி பெற நினைக்கிறீர்கள். அது நியாயமா?” என கேட்டிருக்கிறார்கள்.

“”கூட்டணி பேச்சுவார்த்தையில் ஜெ. பாணியை பின்பற்றி வந்தால் வரவேற்போம். போதாதென்றால் எங்களுக்கு பாதிப்பில்லை” என சொல்லிவிட பா.ம.க. ரெடியாகிவிட்டது. அ.தி.மு.க.வும், “”25 தொகுதிகளுக்கு குறையாமல் இதுவரை நாங்கள் போட்டியிட்டதில்லை” என உறுதியாக நிற்கிறது. கடைசியாக பா.ஜ.க. 10 தொகுதியில் இருந்து தனது தொகுதிகளை குறைக்க முடிவு செய்துள்ளது. தே.மு.தி.க., புதிய தமிழகம், ஜி.கே.வாசன், கொங்கு கட்சி போன்றவை “கொடுப்பதை வாங்கிக் கொள்கிறோம்’ என்ற நிலையில் உள்ளன.

ஆனால் தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா “நான் மதுரையில் நிற்பேன்’ என்கிறார். அதேபோல் ஜி.கே.வாசன் தனது சொந்த ஊரான தஞ்சாவூரை கேட்கிறார். தமிழிசை தென்சென்னை, வானதி கோவை, திருப்பூர் சி.பி.ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் பொன்னார், தஞ்சையில் கருப்பு முருகானந்தம் ஆகியோர் போட்டியிட நிர்மலாவை அணுகியுள்ளனர். தென்சென்னை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் வெற்றி பெற்ற தொகுதி. கோவை, திருப்பூர் ஆகியவை வேலுமணியின் வாரிசு குறி வைக்கும் தொகுதி. மதுரை அ.தி. மு.க.வின் தொகுதி. பா.ஜ.க.விற்கு வாக்கு உள்ள பகுதிகளில் பா.ஜ.க. நிற்ப தோடு அ.தி.மு.க. தொகுதிகளையும் குறிவைத்து தாமரையை மலரச் செய்வது சரியா? என்கிற போர்க்குரல்கள் அ.தி.மு.க.வில் கேட்கிறது.

இதற்கிடையே மதுரையில் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரையை களமிறக்குகிறார் டி.டி.வி.தினகரன். அதுபோல திருச்சிக்கு சாருபாலா தொண்டைமான் என தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. கூட்டணிக்கு கிலி கொடுக்கும் வேட்பாளர்களை செலக்ட் செய்து வைத்துள்ளார் டி.டி.வி.தினகரன். இந்த இழுபறிக்கு நடுவில் குக்கர் சின்னம் டி.டி.வி.க்கு போய்விடக்கூடாது என்பதிலும் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரக்கூடாது என்பதிலும் ஒரு புதிய கண்டிஷனையும் பா.ஜ.க.விடம் எடப்பாடி முன்வைத்துள்ளார் என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள்.

%d bloggers like this: