திமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக!

அதிமுகவா, திமுகவா என ஆலோசனையிலும், குழப்பத்திலும் இன்னமும் பாமக நீடித்து வருவதாகவே கூறப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் அதிமுக கூட்டணியில் சேர பாஜகவை தவிர பல கட்சிகளும் யோசனை செய்வதே தற்போதைய கள நிலவரம்.

அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறுவதாகவும், அதற்கான சீட் விவகாரங்கள் நடந்து வருவதாகவும் பேச்சு அடிபட்டு வருகிறது. ஆனால் இதுவரை எந்த கட்சியுடன் கூட்டணி என்று பாமக பகிரங்கமாக அறிவிக்கவில்லை. இருந்தாலும் அதிமுகவா, திமுகவா என பாமக ஆலோசனையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.

வேண்டவே வேண்டாம்

பாமக நிறுவனர் ராமதாஸை பொறுத்தவரை அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்பதில் தெளிவாக இருக்கிறார். ஆனால், அன்புமணி ராமதாஸோ அதிமுகவுடன் கூட்டணி வேண்டவே வேண்டாம் என்றும் நினைக்கிறாராம். அகில இந்திய அளவில் மத்தியில் பாஜக வர இனி வாய்ப்பு குறைவுதான்.

துரைமுருகன்

ஆனா அதுவே காங்கிரசுக்கு நல்ல பிரகாசமான எதிர்காலம் இருக்கு. திமுகவோட கூட்டணி வைத்தாலாவது அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கும் என்பதால் திமுக தரப்பை அதிகம் விரும்புகிறார் அன்புமணி. போதாக்குறைக்கு துரைமுருகன் போகிற போக்கில் கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர வாய்ப்பு என்று கொளுத்தி போட்டுவிட்டு போய்விடவும் அதையும் பரிசீலித்தே வருகிறார்.

கிருஷ்ணசாமி

அது மட்டுமல்ல, பாஜக, அதிமுக மீதுள்ள மக்களின் கோபம் மற்றும் அதிருப்தி குறித்து, மருமகன் அன்புமணியிடம் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி எடுத்துக் கூறியதாகவும் கூறப்படுகிறது.

அன்புமணி ஆதங்கம்

இதையெல்லாம் மனதில் வைத்துதான், எடப்பாடி தலைமையின் கீழ் நாம் கூட்டணி வைப்பதா என்றும், தந்தையின் அரசியல் அனுபவத்துக்கு முன்பு ஓபிஎஸ்., ஈபிஎஸ்., எல்லாம் ஒரு தூசு எனவும் நெருக்கமானவர்களிடம் அன்புமணி ஆதங்கப்படுகிறாராம். அதனால்தான் இன்னும் கூட்டணி விஷயத்தில் தந்தை-மகன் இருவருக்கும் ஒத்து போகாமலேயே இருப்பதாக சொல்லப்படுகிறது.

மூத்த நிர்வாகிகள்

மேலும், “திமுக கூட்டணி என்று கூட நாம உச்சரிக்க தேவையில்லை, காங்கிரஸ் கூட்டணியில் பாமக என செய்தியாளர்களை எதிர்கொள்வோம்” என்று மூத்த நிர்வாகிகளும் அன்புமணிக்கு அட்வைஸ் தந்திருக்கிறார்கள். இந்த விஷயம் அப்படியே அதிமுக காதில் வந்து விழ, அன்புமணியை சரிகட்டும் பணியை ஆளும் தரப்பு தொடங்கியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

%d bloggers like this: