காசு… பணம்… துட்டு… – படியாத பேரம்… முடியாத கூட்டணி!

ந்ததுமே சுடச்சுட இஞ்சி டீயைக் குடித்துக்கொண்டே ஆரம்பித்தார் கழுகார்…‘‘இரண்டு திராவிட  கட்சிகளுமே, கூட்டணி வேலைகளைத் துரிதப்படுத்தியுள்ளன. தி.மு.க அமைத்துள்ள கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவின் கூட்டம், அறிவாலயத்தில் நடந்துள்ளது. காங்கிரஸுக்கு ஒற்றை இலக்கத்தில்தான் சீட் என்பதில் உறுதியாக இருக்கிறது தி.மு.க. விடுதலைச் சிறுத்தைகள் விவகாரத்தை, கொஞ்சம் பொறுமையாகக் கையாளச் சொல்லியிருக்கிறாராம் ஸ்டாலின்.’’
‘‘அ.தி.மு.க அணியில் என்ன நடக்கிறது?’’

‘‘அ.தி.மு.க-வுடன் கூட்டணி உறுதி என்று பி.ஜே.பி தமிழகத் தலைவர்கள் சொல்கிறார்கள். டெல்லி மேலிடத்துக்கு அவர்கள் அனுப்பியுள்ள ‘நோட்’டில், அ.தி.மு.க., பி.ஜே.பி., பா.ம.க., தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்தித்தால், இருபது தொகுதிகள் வரை கண்டிப்பாக வெல்லும்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்! கூட்டணிக்குப் பிடிகொடுக்காமலிருந்த பா.ம.க., இப்போதுதான் வழிக்கு வந்துள்ளது. அந்தக் கட்சிக்கு, ஏழு தொகுதிகள் என்று முடிவாகி இருக்கிறதாம். ஆனால், தேர்தல் செலவு விஷயத்திலும் கைகொடுக்கவேண்டும் என்பதில் பா.ம.க தரப்பு கறாராக இருப்பதுதான், அ.தி.மு.க முக்கியப் புள்ளிகளையே கடுப்பேற்றியிருக்கிறதாம்.”
‘‘அப்படியா?”
“பா.ம.க-விடம் கடந்த ஒரு மாதமாக தி.மு.க., அ.தி.மு.க என இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இப்போது பா.ம.க கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால், கரன்சி பற்றிய பேச்சே முக்கிய இடம் பிடித்திருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே தி.மு.க கைவிரித்துவிட்டதால், அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை ஆரம்பமானது. ஆனால், இவர்களின் எதிர்பார்ப்பைக் கண்டு ஆளுங்கட்சியே அதிர்ந்துவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளும்.!’’
‘‘பின்னே, தேர்தல் என்றால் சும்மாவா? செலவுகள் இருக்கும்தானே!’’
‘‘அ.தி.மு.க-வின் கஜானாவாகச் செயல்படும் சேலத்துப் பிரமுகர்தான் பா.ம.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். ஆனால், ‘கரன்சி விஷயத்தில் நான் மட்டும் முடிவெடுக்க முடியாது’ என்று பந்தை மேலே தள்ளிவிட்டுவிட்டாராம் அந்தப் பிரமுகர். எடப்பாடி தரப்பு, ‘கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம்’ என்று பா.ம.க விஷயத்தைக் கிடப்பில்போட்டுவிட்டதாம். ஆனால், டெல்லியிலிருந்து பி.ஜே.பி-யின் பிரஷர் அதிகமாகவே, வேறு ரூட்டை கையில் எடுத்திருக்கிறாராம் எடப்பாடி!’’
‘‘அது என்ன ரூட்?’’‘‘பா.ம.க-விடம் நீங்களே பேச்சுவார்த்தை நடத்தினால்தான் சரியாக வரும் என்று அ.தி.மு.க தரப்பு ஒதுங்கியுள்ளது. ஆனால், நடந்தது வேறாகிவிட்டது! மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நேரடியாக அனுப்பத் தீர்மானித்து, ராமதாஸின் உதவியாளர் நடராஜிடம் பேசி, சந்திப்புக்கு நேரம் கேட்கப்பட்டதாம் பி.ஜே.பி தரப்பிலிருந்து. ஆனால், ராமதாஸ் பிடி கொடுக்கவே இல்லையாம். தமிழக பி.ஜே.பி பொறுப்பாளர் பியூஸ் கோயலுக்குத்தான் தைலாபுரக் கதவுகள் திறந்துள்ளன!’’

‘‘ம்… பா.ம.க-வுக்கு அவ்வளவு டிமாண்டு?’’
‘‘உண்மைதானே… வடக்கில் தங்களுடைய பலத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளனரே. அதோடு, விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.க பக்கம் இருந்தால், அ.தி.மு.க பக்கம் பா.ம.க இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத அரசியல் விதியாகவே இருக்கிறது. அதை பி.ஜே.பி கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளது. ஒரு வழியாக, இப்போதைக்கு கூட்டணிக்கு ஓகே. ஆனால், மற்ற விஷயங்களைப் பொறுத்தே இறுதி முடிவு என்கிற அளவுக்கு ராமதாஸிடம் உத்தரவாதத்தை வாங்கிய பி.ஜே.பி., மற்ற விஷயங்களை அ.தி.மு.க-விடம் பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்லி, பழையபடி எடப்படி தரப்புக்கு செக் வைத்துவிட்டார்களாம்!’’
‘‘பரிதாபம்தான்?’’
‘‘கட்சியின் பெருந்தலைகள் எல்லாம், ‘இப்போது நம்மிடம் 38 எம்.பி-க்கள் இருக்கும்போதே, நம்மால் எதையும் செய்யமுடியவில்லை. பி.ஜே.பி-க்கு இரண்டு சதவிகித ஓட்டுகள்தான் இருக்கின்றன. அவர்களைக் கூட்டணிக்குள் சேர்த்தால் நம்மிடம் உள்ள பத்து சதவிகித வாக்குகள் வெளியே போக வாய்ப்புள்ளது. இந்த நிலையில், கூட்டணியும் வைத்துக்கொள்ள வேண்டும், கேட்கிற தொகுதிகளையும் கொடுக்கவேண்டும், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் கேட்கிற தொகுதிகளையும் கொடுக்கவேண்டும். அத்தனை கட்சிகளுக்கும் நாமே செலவும் செய்யவேண்டும். இது என்ன வகைக் கூட்டணி தர்மம்’ என்று புலம்பிக்கொண்டுள்ளனர்!’’
‘‘பாவம்தானே!’’
‘‘பா.ம.க, தே.மு.தி.க மற்றும் சிறு கட்சிகளுடன் கூட்டணி போட்டாலே, இருபது தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்கலாம். அதன்பிறகு மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் நாமே துருப்புச்சீட்டாக இருக்கலாம். 25 தொகுதிகளில் மட்டும் நின்று, அந்தத் தொகுதிகளில் மட்டும் ‘கச்சிதமாக’ வேலைகளைப் பார்த்தாலே போதும் என்றும் விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது அ.தி.மு.க-வில்.”
“ஓர் ஓட்டுக்கு 500 ரூபாய் என்று கணக்கிட்டால், தொகுதிக்கு 30 கோடி வரை செலவாகும் என்கிற பேச்சு ஓடிக்கொண்டிருப்பதாகக் கேள்விப் பட்டோமே!’’
‘‘ஊருக்கே தெரிந்துவிட்டதா! கன்டெய்னர்கள், கட்சி அலுவலகத்தின் சுரங்க அறைகள் என்று பல கட்சிகளும் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாகப் பேச்சிருக்கிறது. செலவு குறித்து எந்தக் கட்சிக்கும் கவலை இருக்காது என்றே தோன்றுகிறது.”
“தி.மு.க-வுக்கும் தானே?’’
‘‘வழக்கம்போல, எங்கள் தரப்பிலிருந்து எந்தச் செலவையும் ஏற்க முடியாது என்று காங்கிரஸிடமும் தெளிவாகச் சொல்லி விட்டார்கள். பசையுள்ளவர்களை வேட்பாளராக நிறுத்தி வெற்றிபெற்றுக்கொள்ள வேண்டிய நெருக்கடி காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளுக்கு தி.மு.க தரப்பிலிருந்து கொஞ்சம் கரிசனம் காட்டப்படக்கூடும் என்கிறார்கள்! 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக, தொழில் குழுமம் ஒன்றும் களத்தில் இறங்கியது. அதே குழுமம் இந்த முறையும் களத்தில் இறங்கும் வாய்ப்புள்ளது. மோடி அரசு மூலமாகத் தங்களுக்கு நிறைய நெருக்கடிகள் இருப்பதால், பழையபடி களத்தில் இறங்கத் திட்டமிட்டுள்ளதாம் அந்த நிறுவனம்!”

“ஓகோ, ரூட் அப்படிப் போகிறதா?”
“தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆழ்வார்பேட்டை வீட்டுக்கே வந்து ஸ்டாலினைச் சந்தித்தார். இதைத் தொடர்ந்து, ‘பத்திரிகை வைக்க மட்டுமா அம்பானி வந்திருப்பார். அதோடு சேர்த்து பல விஷயங்களையும் பேசாமலா இருந்திருப்பார்?’ என்று தி.மு.க-வுக்குள்ளேயே கிசுகிசுக்கிறார்கள்.”
“ஒரு தொகுதிக்கு முப்பது கோடி வரை செலவாகும் என்று கணக்குப் போடப்பட்டு, அந்த அளவுக்குச் செலவழிக்கக்கூடியவர்களுக்குத்தான் வாய்ப்பு என்றும் தி.மு.க தரப்பில் பேச்சு ஓடுவதாகக் கூறுகிறார்கள். அப்படி வருபவர்களுக்கு 15 கோடி ரூபாய் வரை வெளியிலிருந்து சப்போர்ட் செய்வார்களாம்!’’
‘‘டி.டி.வி.தினகரன் பணக்கஷ்டத்தில் இருப்பதாகச் சொல்லியிருந்தீரே?’’
‘‘தேர்தல் நேரத்தில் தொகை வந்துவிடும் என்கிற நம்பிக்கையை, சகாக்களிடம் விதைத்துக் கொண்டிருப்பதாகத் தகவல்!’’ என்ற கழுகார்,
‘‘தேர்தல் யுத்தத்தில் ஆளுங்கட்சியை வீழ்த்த, எதிர்க்கட்சிகளுக்கு இரண்டு பெண் விவகாரங்கள், ஏவுகணைகள் போலக் கிடைத்துள்ளன. ஒன்று, நிர்மலாதேவி. லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி-யான முருகன் மீது பெண் எஸ்.பி கூறியுள்ள பாலியல் புகார். இரு விஷயங்களின் தற்போதைய முன்னேற்றம்… தலைமைச் செயலகம், ராஜ்பவன் இரண்டிலும் லேசான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது!’’
‘‘விளக்கமாகச் சொல்லும்!’’
‘‘நிர்மலா தேவி, ‘சி.பி.சி.ஐ.டி போலீஸார் என்னை மிரட்டி வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து வாங்கினார்கள். எனக்கு மிரட்டல் வருகிறது. மீதி விவரங்களை என் வக்கீல் பசும்பொன்பாண்டியனிடம் கேளுங்கள்’ என்று கடந்த தடவை நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது திரியைக் கொளுத்தினார். நிர்மலாதேவி பேட்டி கொடுத்ததால், இதயநோய் என்று சொல்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சீருடை அணியாத காவலர் ஒருவரால், ‘உன் குடும்பம் மற்றும் இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் ஜாமீன் கேட்கக் கூடாது. தேர்தலுக்குப் பின் நாங்களே ஜாமீனில் விடுதலை செய்வோம். அதுவரை நீயும், உன் குடும்பத்தினரும் வழக்கறிஞரைச் சந்திக்கக் கூடாது’ என மிரட்டப்பட்டுள்ளர். ‘சிறையிலும் அவர் மிரட்டப்பட்டுள்ளார். கணவர் உள்பட குடும்பத்தினரும் மிரட்டப்படுகின்றனர்’ என்று நிர்மலாதேவியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.’’
‘‘அடப்பாவமே!’’
‘‘பிப்ரவரி 14- அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட்டுக்கு நிர்மலாதேவி வந்தபோது, பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேச நினைத்தார். ஆனால், போலீஸார் சூழ்ந்து நின்று பத்திரிகையாளர்களைச் சந்திக்கவிடாமல் தடுத்ததோடு, மாற்றுப்பாதையில் அவரை அழைத்துச்சென்றுவிட்டனர். பத்திரிகை கேமராமேன்களும் தாக்கப்பட்டனர், கேமராக்களும் உடைக்கப்பட்டுள்ளன. நிர்மலாதேவி ஏதாவது வாய் திறந்தால், கவர்னர் மீதான பழைய புகார்கள் மீண்டும் படபடக்க ஆரம்பித்துவிடும் என்கிற பயத்தில்தான் போலீஸார் இப்படி நடந்துகொண்டதாக, பத்திரிகையாளர் அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன!’’

‘‘ஓ!’’
‘‘இதே வழக்கில் கைதாகிச் சிறையில் இருக்கும் முருகன், கருப்பசாமி இருவருக்கும் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிவிட்டது. ஆனால், வியாழக்கிழமை வரை, அவர்கள் வெளியில் வரமுடியவில்லை. நிர்மலாதேவிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இவர் வாய் திறந்தால், அது பி.ஜே.பி-க்கு பின்னடைவாக இருக்கும் என்று பயந்தே, தேர்தல் வரை வாய்ப்பூட்டுப் போடும் வகையில், சிறைக்குள்ளேயே வைக்க நினைக்கிறார்கள். இது தி.மு.க-கூட்டணிக்கு அவல் கொடுத்த கதையாகவும் ஆகிவிடும் என்றும் பயப்படுகிறார்கள்!’’
‘‘மற்றொரு விவகாரம்?’’
‘‘லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி-யான முருகன் மீதான பாலியல் வழக்கு தொடர்பான சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. விசாகா கமிட்டி விசாரணையை நிறுத்தச் சொல்லி, தான் உத்தரவிட்டிருந்ததையும் நீதிமன்றம் திரும்பப்பெற்றுவிட்டது. இந்த இரண்டு விசாரணைகளும் வேகம் பெற்றால், இவர் நிச்சயம் சிக்குவார் என்றே போலீஸ் அதிகாரிகள் சொல்கிறார்கள். இந்த முருகன்தான், குட்கா விவகாரம், எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகார்கள், ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்புப் புகார்கள் எல்லாவற்றையும் விசாரித்தார். ஆனால், அந்த வழக்குகளின் விசாரணையை வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார் என்று தி.மு.க தரப்பு நீதிமன்றத்தை அணுகியது நினைவுகூரத்தக்கது. முருகன் மீது நடவடிக்கை எடுத்தால்… அவர் விசாரித்து வந்த ஊழல் வழக்குகள் வேகம் பெறும் அல்லது வேறு விவகாரங்கள் வெளியில் வரக்கூடும். அதையும் தி.மு.க கூட்டணி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த வாய்ப்பு உண்டு!’’ என்ற கழுகார், சட்டெனச் சிறகுகளை விரித்தார்.

%d bloggers like this: