வெண்ணெய், பிரசவத்தை சுலபமாக்குமா?

கருத்தரங்கம் நடந்த அரங்கில், கர்ப்பிணி பெண்கள் அமர்வதற்காக, யோகா விரிப்பைப் போட்டிருந்தோம். அதைப் பார்த்த ஒரு பெண்ணின் கணவர், அதிர்ந்து, ‘தரையில் சம்மணம் போட்டு உட்காரலாமா?’ என்று கேட்டார்.
இன்னொரு பெண், ‘கர்ப்பம் தரித்த மூன்றாவது மாதத்தில் இருந்து, தினமும் வெண்ணெயை கரைத்துக் குடித்தால், சிரமம் இல்லாமல், குழந்தை பிறக்கும்’ என, என் பாட்டி சொன்னார், என்றார். கர்ப்பம் தொடர்பாக, பலவிதமான, தவறான, நம்பிக்கை நம்மிடம் உள்ளன.

கர்ப்பம் உறுதியானவுடன், பயம், ஆயிரம் குழப்பங்களுடன் வருகின்றனர். கர்ப்பிணி பெண்கள் முகத்தில், மகிழ்ச்சியை பார்க்க முடிவதில்லை. கர்ப்பக் காலத்தில், தேவைக்கு அதிகமாகவே, பரிசோதனைகளைச் செய்கின்றனர். இப்படி நிற்கக் கூடாது, அப்படி உட்காரக் கூடாது என, ஏகப்பட்ட அறிவுரைகள் சொல்கின்றனர். இயற்கையான, இயல்பான விஷயம் என்று நினைத்தது போய், கர்ப்பம் என்பதே, அசாதாரணமான விஷயமாகி விட்டது. இவ்வளவு பயம் தேவையில்லை. நேர்மறையான உணர்வுகளுடன், கர்ப்பத்தை எதிர்க்கொள்ள வேண்டும்.
உடல் கோளாறுகளால், சிலருக்கு, கர்ப்பம் சிக்கலாக இருக்கலாம். அவர்கள், டாக்டரின் ஆலோசனைப்படி, கவனமாக நடந்து கொள்ள வேண்டும். ஆரோக்கியமான பெண்ணின், கர்ப்பம் இயல்பான விஷயம். கர்ப்பம் குறித்த தவறான நம்பிக்கைகளையும், பயங்களையும் போக்கி, மகிழ்ச்சியாக எதிர் கொள்வது குறித்து, மாதம் ஒரு முறை, கலந்துரையாடல் கருத்தரங்கம் நடத்துகிறோம்.
சுகப் பிரசவத்திற்கு சில அடிப்படை விஷயங்களை பின்பற்ற வேண்டும். நடைப்பயிற்சி செய்யச் சொன்னால், ‘ஒரு மணி நேரம் நடக்கலாமா, எதுவும் ஆகாதா?’ என்று கேட்கின்றனர். சீராக உடற்பயிற்சி, யோகா செய்வது அவசியம். அப்போது தான், தசைகள் இலகுவாக விரிவடையும். தசைநார்கள், இயல்பாக சுருங்கி விரிந்து கொடுக்கும். சீரான உடற்பயிற்சி இல்லாவிட்டால், முதுகு வலி உட்பட, பல பிரச்னைகள் வரும்.
பிரசவ நேரத்தில், வலி வரும் போது, வலியை தாங்கி, இயல்பாக சுவாசிப்பதற்கான, மூச்சுப் பயிற்சியை, துவக்கத்திலேயே செய்வது நல்லது. உணவிலும் கவனமாக இருக்க வேண்டும். கார்போ ஹைட்ரேட் உணவைக் குறைத்து, புரதம், வைட்டமின்கள், குறைந்த கொழுப்பு என, சமச்சீராக சாப்பிட வேண்டும். காய்கறிகளை வேக வைத்து, சூப் குடிக்கலாம்.
முதல் மாதத்தில் இருந்தே, அவரவர் உடல் நிலையைப் பொறுத்து, முடிந்த அளவு, தினசரி வேலைகளை செய்யலாம். சிரமம் இருந்தால், டாக்டரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். ஐந்தாவது மாதத்தில் இருந்து, நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் இரண்டும், கர்ப்பிணி பெண்களுக்கு வரும் பொதுவான பிரச்னை. உயர் ரத்த அழுத்தப் பிரச்னையில், தாய் – சேய் இணைப்புத் திசுவின் நிலை, சிறுநீரில் புரதம் வெளியேறுவதாலும் வரலாம்.
சென்னையிலும், லண்டனிலும், நான் பார்த்த பிரசவங்களில், வலி வந்த, 15 நிமிடங்களில், ‘எனக்கு சிசேரியன் பண்ணிடுங்க’ என கேட்காதவர்கள் இல்லை.
நான் யாருக்கும், செய்ததும் இல்லை. வலியை தாங்க முடியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, சிசேரியன் செய்வது என்பதை, ஒத்துக் கொள்ள முடியாது.
டாக்டர் வித்யா மூர்த்தி, மகப்பேறு சிறப்பு மருத்துவர்,

%d bloggers like this: