திடீர் திருப்பம்.. அதிமுக – பாஜக கூட்டணி நாளை அறிவிப்பு.. வருகிறார் அமித் ஷா

சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் தேர்தல் குழு உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதனால் அதிமுக- பாஜக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நாளை வெளியாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. சில கட்சிகளில் தொகுதி பங்கீடுகள் இன்னும் முடிவுக்கு வராததால் இழுபறி நீடித்து வருகிறது. இன்னும் சில கட்சிகளோ கூட்டணி குறித்தே இப்போதுதான் பேசி வருகின்றன.

நம்பத்தகுந்த வட்டாரங்கள்

திமுக -காங்கிரஸ் கூட்டணி என்பது தெரிந்த ஒன்றுதான். ஆனால் அதிமுக தனது கூட்டணி பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்தி வந்தது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என அவர்களது செயல்பாடுகளை வைத்தும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்களை வைத்தும் கூறப்பட்டு வந்தது.

அமைச்சர்கள் பங்கேற்பு

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

பேச்சுவார்த்தை

அதே வேளை, பாஜக தலைவர் அமித்ஷா நாளை காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள் மும்பையிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். பாஜக தமிழக பொறுப்பாளர் பியூஷ் கோயலும் சென்னை வருகிறார். ஏற்கெனவே இரு தரப்பிலும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதியாவிட்டதாக தகவல்கள் கூறப்படுகிறது
தொகுதி பங்கீடு

எனவே அமித்ஷா வருகை மற்றும் முதல்வர் வீட்டில் அவசர ஆலோசனையை வைத்து பார்க்கும் போது நாளை கூட்டணி குறித்து அறிவிக்கப்படலாம் என்றும் தெரிகிறது. மேலும் இரு கட்சி தலைவர்களும் செய்தியாளர்கள் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது பாஜக, அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள், தொகுதி பங்கீடு குறித்தும் நாளை தெரியவரும்.

%d bloggers like this: