மாசி மகம்.. பாஜக, பாமகவுடன் தேர்தல் கூட்டணியை நிச்சயித்த அதிமுக – ஜெ.ஆசி கிடைக்குமா

மாசி மாதம் மகம் நட்சத்திரம் அதிமுகவிற்கு சிறப்பானது. காரணம் ஜெயலலிதாவின் ஜென்ம நட்சத்திரம். மகத்தில் பிறந்த மகராசி என்று அதிமுகவினர் ஜெயலலிதாவைக் கொண்டாடுவார்கள். சிறப்பான இந்த நாளில்தான் அதிமுக லோக்சபா தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிய வேகத்தில் பாஜக, பாமக உடன் கூட்டணியை உறுதி

செய்துள்ளது. இந்த கூட்டணியை கட்டாய கல்யாணம் என்று எதிர்கட்சியினர் விமர்சித்தாலும் மகத்தில் செய்யப்பட்ட நிச்சயம் ஜெயிப்பது நிஜம் என்று அதிமுகவினர் கொண்டாடுகின்றனர்.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தாலும் இன்னும் ஒருசில வாரங்களில் தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்துவிடும். தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே கூட்டணி, வேட்பாளர்களை முடிவு செய்து விட்டு பிரச்சாரத்தை தொடங்கிவிடுவார் ஜெயலலிதா.

கடந்த 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது அதிமுக தனித்து களம் கண்டது. பிப்ரவரி 24ஆம் தேதி தனது பிறந்தநாளில் லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடப்போகும் முடிவை அறிவித்தார் ஜெயலலிதா. 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து விட்டு மார்ச் 4, 2014ல் பிரச்சாரத்தை தொடங்கினார். மோடியா? லேடியா என்று பஞ்ச் வசனம் பேசி வாக்கு சேகரித்து 38 தொகுதிகளை அலேக்காக அள்ளினார் ஜெயலலிதா. தர்மபுரியில் போட்டியிட்ட பாமகவின் அன்புமணியும் கன்னியாகுமரியில் போட்டியிட்ட பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணனும் தப்பிப்பிழைத்தனர்.

தேர்தல் பரபரப்பு

2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை தமிழக அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.

தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டுகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறுவது உறுதியாகி விட்டது. விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரைமறைவில் பல நாட்கள் பேசியிருந்தாலும் கட்சிகளுக்குள் ஒருவித உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து பகிரங்கமாக இன்று அதிமுக தனது கூட்டணியை முதற்கட்டமாக உறுதி செய்துள்ளது. செவ்வாய்கிழமையில் கூட்டணி பேசியதற்குக்கு காரணம் இல்லாமல் இல்லை.

ஜெயலலிதா பிறந்த மாசி மகம்

இன்றைய தினம் மாசி மகம் சிறப்பான நாள். மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள் என்பார்கள். மாசி மகத்தில்தான் ஜெயலலிதா பிறந்துள்ளார். அவரது பிறந்தநாள் பிப்ரவரி 24ஆம் தேதி என்றாலும் மாசி மாதம் மகம் நட்சத்திர தினத்தில் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது உண்டு. சிறப்பு வாய்ந்த இந்த நாளில்தான் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கி பாமகவிற்கு 7 இடங்களை உறுதி செய்துள்ளது அதிமுக.

நல்ல முடிவு எடுக்கும் நாள்

ஜெயலலிதா இருந்த போது அரசியலில் பல முக்கிய முடிவுகளை மாசி மகம் தினத்தில் எடுத்திருக்கிறார். திராவிடக்கட்சிகளுடன் எந்த காலத்திலும் கூட்டணியே கிடையாது என்று சொன்ன டாக்டர் ராமதாஸ் இன்று ஈபிஎஸ், ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுக கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருக்கிறார். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்று பலரும் பதிவிட்டு வருகின்றன.மாம்பழத்தில் இலை இணைந்து விட்டது. தாமரையும் மலர்ந்து விட்டது.

அதிமுக பாஜக கூட்டணி

அதிமுக, பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தும் விதமாக தமிழக அமைச்சர்கள் சிலர் பாஜக மூத்த நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சில நாட்களுக்கு முன்பாக பேட்டியளித்த பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ், தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைத்து விட்டோம் என்று கூறியிருந்தார். மத்திய அமைச்சர் பியூஸ் கோயலும் சென்னை வந்து அதிமுக நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவில் 5 தொகுதிகள் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டன.

செவ்வாயில் பேச்சுவார்த்தை

இன்றைய தினம் செவ்வாய்கிழமை பவுர்ணமி திதி. மகம் நட்சத்திரம். தமிழகத்தில் செவ்வாய்கிழமையன்று முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கமாட்டார்கள். வட இந்தியாவில் செவ்வாய்கிழமை மங்களகரமான நாள். முக்கிய முடிவுகளை செவ்வாய்கிழமைகளில் அறிவிப்பார்கள். இன்றைக்கு சிறப்பான மாசி மகம் நாளாக அமைந்துள்ளது. அதனால்தான் அதிமுக தனது கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதி செய்து பாமகவிற்கு ஏழு இடங்களையும், பாஜகவிற்கு 5 இடங்களையும் உறுதி செய்துள்ளது.

மாசி மகத்தில் நிச்சயம்

இந்த கூட்டணியை சிலர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சில தினங்கள் முன்பு வரை திமுகவிற்கு பாமக தூது விடுகிறது என்றே தகவல் பரப்பப்பட்டது. அதிமுக, பாமக, பாஜக கூட்டணியை கட்டாய கல்யாணம் என்று எதிர்கட்சிகள் வர்ணித்தாலும் இந்த கல்யாணம் ஜெயலலிதா பிறந்தநாளான மாசி மகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் அதிமுக சந்திக்கும் முதல் லோக்சபா தேர்தல் இது. எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து இந்த கூட்டணியை அமைத்துள்ளனர்.

எந்த கூட்டணி ஜெயிக்கும்

திமுகவில் கருணாநிதி இல்லாத முதல் லோக்சபா தேர்தல் இதுதான். திமுக முகாமிலும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அரசியல் வானில் கூட்டணி நட்சத்திரங்கள் மின்னத் தொடங்கிவிட்டன. அடுத்தடுத்த அறிவிப்புகள், முக்கிய செய்திகள் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. எந்தெந்த அணியில் எந்தெந்த கட்சிகள் இணையும் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.

அதிமுக பாஜக கூட்டணி

ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிச்சாமியும் மளமளவென கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து தொகுதி பங்கீடுகளை இறுதி செய்து விடுவார் என்றே அதிமுகவினர் கூறுகின்றனர். 1998 லோக்சபா தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் முதல் முறையாக கூட்டணி அமைத்தன. அந்த கூட்டணியில் வைகோவும் இணைந்தார். இது அதிமுக உருவாக்கிய வித்தியாசமான கூட்டணி. 2014ஆம் ஆண்டு தனித்து களம் கண்டு அதிமுக வெற்றி வாகை சூடியது. 2019 தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக, பாஜக, பாமக, என புது பார்முலாவில் கூட்டணியை அமைத்துள்ளது. நாற்பதும் நமதே என்று முழக்கமிட்டாலும் அதிமுகவிற்கு இது சாதகமாக அமையுமா அல்லது பாதகமா அமையுமா என்பதை லோக்சபா தேர்தல் முடிவு செய்யும்.

%d bloggers like this: