Advertisements

பாமக கூட்டணியை பார்த்து ஏன் இப்படி பதறுகிறது திமுக? இதுதாங்க காரணம்

இது ஒரு மூழ்கும் கப்பல்.. வெட்கம், மானம், சொரணை எதுவுமே கிடையாதா.. இப்படியாக நேற்று மதியம் முதல், திமுக, காங்கிரஸ் தலைவர்கள் வாயிலிருந்து வரிசையாக அர்ச்சனைகள் வந்து விழுந்து கொண்டுள்ளன.

மற்றொரு பக்கம் சோசியல் மீடியாவில் இந்த கட்சிகளின் ஆதரவாளர்கள் ஆபிசுக்கு லீவு போட்டுவிட்டு, பாமகவை திட்டித் தீர்த்துக் கொண்டு உள்ளனர்.

இத்தனைக்கும் காரணம், அதிமுக மற்றும் பாமக நடுவே நேற்று மதியம் தேர்தல், கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது தான்.

ஜென்டில்மேன் பேசும் பேச்சா

அதிலும், திமுக தலைவர் ஸ்டாலின் ஜென்டில்மேன் பாலிடிக்ஸ் செய்பவர் என்று அறியப்படுபவர். ஆனால் அவரே, சூடு, சொரணை, வெட்கம் இல்லையா என்றெல்லாம் பாமக நிறுவனர் ராமதாஸ் பற்றி சுடு சொற்களை பயன்படுத்தி விமர்சனம் செய்தார். அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் மட்டும் குறைச்சலா என்ன? அவரும் மண்டியிட்ட மாங்கா என்ற ஹேஷ்டேக்கில், ட்விட்டரில் வெளுக்க ஆரம்பித்துவிட்டார். அன்புமணி ராமதாஸ் முன்பு அதிமுகவுக்கு எதிராக பேசிய பேச்சு தொடர்பான வீடியோவை பதிவிட்டு கிண்டல் செய்தார்.
ஏன் கோபம்

வேறு இரு கட்சிகள் செய்துகொள்ளும் கூட்டணி ஒப்பந்தத்திற்கு, திமுக தரப்பில் ஏன் இவ்வளவு பதற்றம்? காங்கிரசும் ஏன் கோபமாகிறது என்று விசாரித்துப் பார்த்தால், பழம் நழுவி பாலில் விழும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ஏமாந்த அதிர்ச்சிதான் இதற்கெல்லாம் காரணம் என்பது தெரிய வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் நடுவே நேரடி போட்டி இருந்திருந்தால் ஒருவேளை மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்து இருக்காது.

மக்கள் நலக் கூட்டணி

விஜயகாந்த், வைகோ, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் இணைந்து மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைத்து திமுகவுக்கு வரக்கூடிய வாக்கை கணிசமாக இழுத்துவிட்டனர். இதுதான் திமுக தோல்விக்கு காரணம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். எனவே எந்த ஒரு வாக்குகளும் சிதறி விடக்கூடாது என்பதில் திமுக கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் கேம் பிளானாக இருந்தது. எனவேதான் பாமகவை எப்படியாவது தங்கள் பக்கம் இழுத்துவிட வேண்டும் என்று திமுக நினைத்தது.

பாமக வாக்கு வங்கி

ஆனால், தமிழகத்தின் வடக்கு மாவட்டத்தில் கணிசமான வாக்கு வங்கி வைத்துள்ள பாமக, அதிமுக பக்கம் போய் விட்டதால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது. மற்றொரு பக்கம் கொங்கு மண்டலத்தில் அதிமுக, பாஜக இரண்டுமே பலமாக உள்ளன. வடக்கு மற்றும் மேற்கு மண்டலம் போய்விட்டால் எஞ்சியிருப்பது தெற்கு மட்டும்தான்.

பதற்றம்தான்

எனவே 40 தொகுதிகளையும், வெல்லவேண்டும் என்ற தங்களது இலக்கு என்ன ஆகும் என்ற அச்சம், திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பில் இருப்பதால்தான் இந்த அளவுக்கு தடித்த வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்தி மோசமாக விமர்சனம் செய்வதாக கூறப்படுகிறது. அல்லது திமுகவை மிக மிக மோசமாக விமர்சனம் செய்த வைகோவை தங்கள் பக்கம் வைத்துக்கொண்டு, பாமகவை இவ்வாறு திமுக தலைவர்களால் திட்ட மனசாட்சி இடம் கொடுக்குமா?

Advertisements
%d bloggers like this: