காங்கிரசுக்கு 10 தொகுதிகள்.. பெரும் தவறு செய்துவிட்டதா திமுக?

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 9, மற்றும் புதுச்சேரியில் 1 என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தனை அதிகம் தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்க தேவையில்லை என்பதே, அரசியல் பார்வையாளர்கள் மட்டுமின்றி, திமுக தொண்டர்களின் பார்வையாகவும் உள்ளது.

காங்கிரஸ் காரணமாகத்தான் கடந்த காலங்களில் திமுகவின் வெற்றி வாய்ப்பு, லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் குறைந்ததாக கூறப்படும் நிலையில், இந்த கோஷம் இப்போது வலுப்பெற தொடங்கியுள்ளது.

திமுக-காங்கிரஸ் நடுவே, நேற்று இரவு செய்யப்பட்ட தொகுதி ஒப்பந்தத்தை, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தோடு வரவேற்றாலும், “தலைமை ஏன் இப்படி பண்ணுது..” என்று திமுக தொண்டர்கள் முனகுவதை கேட்க முடிகிறது.

காங்கிரஸ், அதிமுக உறவு

1980ல் நடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் முதல் முறையாக திமுக மற்றும் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டன. இதன்பிறகு, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2004 லோக்சபா தேர்தலில்தான் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இடைப்பட்ட காலத்தில், எம்ஜிஆர், ஜெயலலிதா என தொடர்ச்சியாக அதிமுக தலைவர்களிடம் நெருக்கமாக இருந்த காங்கிரஸ், லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சித் தேர்தல்களில், அதிமுகவோடுதான் கூட்டணி அமைத்தது.
2004ல் மீண்டும் இணைந்தனர்

2004ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் இரண்டு இடதுசாரி கட்சிகள் இருந்தன. திமுக 16 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாமக 5 தொகுதிகளிலும், மதிமுக 4 தொகுதிகளிலும், இரு இடதுசாரி கட்சிகளுக்கும் தலா இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. புதுச்சேரி பாமகவிற்கு வழங்கப்பட்டது. அனைத்து தொகுதிகளிலும் இந்த கூட்டணி வென்றது. அதிமுக-பாஜக கூட்டணி, முட்டை வாங்கியது.
லோக்சபா தேர்தல்

இலங்கை பிரச்சினை வெடித்த நிலையில், 2009 தேர்தலிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலே திமுக அங்கம் வகித்தது. காங்கிரஸுக்கு 15 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகள் திமுகவால் ஒதுக்கப்பட்டன. புதுச்சேரி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. திமுக 18 தொகுதிகளிலும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் , விடுதலை சிறுத்தைகள் 1 தொகுதியிலும் வென்றன. காங்கிரஸ் போட்டியிட்டதில் பாதிக்கு பாதி இடங்களில்தான் வெல்ல முடிந்தது என்று விமர்சனங்கள் எழுந்தன.
5 தொகுதிகள் மட்டுமே

2011 தமிழக சட்டசபை தேர்தலில், 2ஜி விவகாரம் சூடு பிடித்தது. அந்த சூட்டோடு சூடாக, திமுகவிடமிருந்து 63 தொகுதிகளை பெற்றுவிட்டது காங்கிரஸ். ஆனால் வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வென்றது. திமுகவும் தோல்வியுற்று அதிமுகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது. காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் தந்ததுதான், திமுக தோல்விக்கு காரணம் என அக்கட்சி இரண்டாம் கட்ட தலைவர்கள் பேசினர்.
காங்கிரசால் வெற்றி பறிபோனதா?

2014 லோக்சபா தேர்தலில் தனித்தனியாக திமுக, காங்கிரஸ் களம் கண்டன. 2016 சட்டசபை தேர்தலில், மீண்டும் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமைத்தன. காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் காங்கிரஸ் வென்றது, வெறும் 8 தொகுதிகளில்தான். மக்கள் நல கூட்டணி வாக்குகளை பிரித்ததால், மிக குறைந்த வித்தியாசத்தில் பல தொகுதிகளை இழந்தது திமுக. அக்கட்சி 89 தொகுதிகளை வென்றது. காங்கிரசுக்கு இத்தனை தொகுதிகளை ஒதுக்காமல் திமுகவே போட்டியிட்டிருந்தால் இப்போது அந்த கட்சிதான் ஆட்சியில் இருந்திருக்கும். கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் மறைந்திருக்கும் வாய்ப்பு இருந்திருக்கும், முன்னாள் முதல்வராக இல்லை என்று முனுமுனுத்தனர், அக்கட்சி 2ம் கட்ட தலைவர்களும், தொண்டர்களும்.
இப்போது 10

இந்த நிலையில்தான், காங்கிரஸ் கட்சிக்கு இந்த லோக்சபா தேர்தலில் 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது, திமுக. எனவேதான், திமுக ஆதரவாளர்களே கூட கடுமையாக அதிருப்தியடைந்துள்ளனர். 4 சீட்டுகளே காங்கிரசுக்கு அதிகம் என அவர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து கூறுவதை பார்க்க முடிகிறது.

%d bloggers like this: