அ.தி.மு.க கூட்டணி – ஆபரேஷன் சக்சஸ்… ஆரம்பித்தது சர்க்கஸ்!

வெயிலில் களைத்துவந்த கழுகாரிடம் சில்லென்று மாம்பழ கூல்டிரிங்க்ஸ் கொடுத்ததும், ‘‘எல்லோரும் மாம்பழத்தைப் பிழிந்தெடுக்கி றார்கள் என்றால்… இங்கேயுமா?’’ என்று கலாய்த்தவர், பழரசத்தைச் சுவைத்துக்கொண்டே, செய்தி களுக்குள் புகுந்தார்.
‘‘அ.தி.மு.க – பா.ம.க கூட்டணி உருவானது குறித்து உமது நிருபர் கொடுத்துள்ள விரிவான கட்டுரையைப் பார்த்தேன். கச்சிதம். இன்னும் சில விஷயங்களைச் சொல்கிறேன்… இந்தக் கூட்டணியில் அன்புமணிக்கு முதலில் வருத்தம்தான். ஆனால், அவரும் ‘கூலாகி’விட்டார். அதற்கான இரு காரணங்களும், அவரது பெயரிலேயே இருக்கின்றன!’’‘‘புரிகிறது… புரிகிறது… சொல்லும்!’’

‘‘ராமதாஸிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காட்டிய அன்பு, அன்புமணியைக் கரைத்துவிட்டதாம். கூட்டணி முடிவான நாளில், எடப்பாடி பழனிசாமி வீட்டில் தேநீர் விருந்து தந்தபோது, ரொம்பவே அனுசரணையாகப் பேசியிருக்கிறார் எடப்பாடி. ‘பொதுவாக நான் என் சமூகத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பதாகப் பேசுகிறார்கள். குறிப்பாக, வடமாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் சமுதாயத்தைக் கண்டுகொள்வதில்லை என்றும் கூறுகிறார்கள். அது உண்மை இல்லை. ராமசாமி படையாச்சியார் படத்திறப்பு, வன்னியர் நல வாரியம் என்று என்னால் முடிந்ததையெல்லாம் உங்கள் சமுதாயத் துக்குச் செய்துவருகிறேன். இந்தக் கூட்டணியைப் பயன்படுத்தி, நீங்கள் உங்கள் சமுதாய மக்களுக்கு வேண்டியதைச் செய்துகொள்ளுங்கள். ‘போஸ்ட்டிங்’ உட்பட பலவற்றை நாங்கள் முடித்துத் தருகிறோம்’ என்று பேசியிருக்கிறார். இதில்தான் அன்புமணி ‘கூல்’ ஆகிவிட்டாராம்!’’
‘‘எல்லாம் சரி… கூட்டணி என்னவோ சக்சஸ் ஆகிவிட்டது. ஆனால், உள்ளுக்குள் சர்க்கஸ் ஆரம்பித்துவிட்டது என்கிறார்களே!’’

‘‘உண்மைதான்… பி.ஜே.பி., பா.ம.க-வுடன் கூட்டணியைப் பேசிமுடித்ததில் மணியான இரண்டு அமைச்சர்கள்தான் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார்கள். அவர்கள் மட்டுமின்றி, கட்சிக்குத் தொடர்பே இல்லாத கோவை தொழில் அதிபர், கேரள வி.வி.ஐ.பி., கோவை சாமியார், டெல்லி சாமியார் ஆகிய நான்கு பேரும் இந்தக் கூட்டணியைப் பேசி முடித்திருக்கிறார்கள். கடைசியில்தான், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் பெயருக்கு பன்னீர்செல்வத்தைக் கூப்பிட்டு வாசிக்கவிட்டார்களாம்.’’
‘‘ஆனால், அவர் சிரித்த முகத்துடன்தானே இருந்தார்?’’
‘‘வேறு வழி… அவர் உட்பட 25 அமைச்சர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். அ.தி.மு.க-வில் அம்மா இருந்த காலத்தில் கூட்டணியை முடிவு செய்வது, கட்சித் தலைமையாக மட்டுமே இருக்கும். ஆனால், இப்போது சீனியர் அமைச்சர்களையே ஓரங்கட்டிவிட்டு, கட்சிக்குத் தொடர்பு இல்லாதவர்கள் எல்லாம் கூட்டணியை முடிவுசெய்கிறார்கள் என்கிற வருத்தம் பலருக்கும் இருக்கிறது. இப்படி கட்சியின் எல்லா முடிவுகளையும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இறுதி செய்தால், எங்களுக்கு என்ன மரியாதை என்று அமைச்சர்கள் பலரும் பன்னீர்செல்வத்திடம் குமுறித் தீர்த்துள்ளனர்.”
“பாவம்… அவர் மட்டும் என்னதான் செய்வார்?”
“இன்னொரு பக்கம் பல அமைச்சர்கள், ‘நாங்கள் துறைரீதியாக பெரிய வருமானம் இல்லாமல் இருக்கிறோம். எங்கள் மாவட்டங்களில் தேர்தலுக்குச் செலவு செய்ய முடியாது; ‘மணி மணி’யாக சம்பாதிப்பது எல்லாம் ஒருதரப்பு; செலவுக்கு மட்டும் நாங்களா?’ என்று போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்ட பன்னீர்செல்வம், அவர்களையும் சமாதானப்படுத்தி, ‘இப்போது கட்சியின் வெற்றிதான் முக்கியம். அதற்கு ஒற்றுமையாக இருப்போம்’ என்று சொல்லியிருக்கிறார். அவர் அப்படி சொன்னாலும் தேர்தலுக்கு முன்பாகவே கோஷ்டி மோதல் உச்சம் அடையும் என்கிறது ஒருதரப்பு. ‘எங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தல் பற்றியெல்லாம் கவலை இல்லை. இப்போது 37 எம்.பி-க்களை வைத்திருந்து மட்டும் நமக்கு என்ன பிரயோஜனம்? நான்கைந்து பேரின் சொத்துகளைக் காப்பாற்றவும், ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்கவுமே பி.ஜே.பி கூட்டணியை வைத்திருக்கிறார்கள். நாங்கள் அணுவையும் அசைக்க மாட்டோம்’ என்று ஒத்துழையாமை இயக்கமே தொடங்கியிருக்கிறார்களாம். அநேகமாக, தேர்தலுக்கு முன்பாக இரண்டாவது தர்மயுத்தம் ஆரம்பிக்கலாம் என்கிறார்கள்.”
‘‘அதெல்லாம் இருக்கட்டும், அ.தி.மு.க கூட்டணிக்குள் தே.மு.தி.க வருமா, வராதா?’’
‘‘பா.ம.க-வுக்கு இணையாக அல்லது அதிகமாக சீட்டுகள் கேட்டதால், தே.மு.தி.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பை பி.ஜே.பி தரப்பிடமே விட்டுவிட்டது அ.தி.மு.க தலைமை. பி.ஜே.பி சார்பில் பேசியவர்களிடம், ‘கடந்த தேர்தலைவிட, இந்தத் தேர்தலில் என்ன குறைந்து விட்டோம்?’ என்று சூடாக ஆரம்பித்து, ‘வடக்கு மாவட்டங்களில் மட்டுமே வாக்குவங்கியை வைத்துள்ள பா.ம.க-வுக்கு ஏழு சீட் தரும்போது, மாநிலம் முழுவதும் வாக்குவங்கி வைத்துள்ள எங்களுக்கு அதைவிடக் குறைவான சீட்டா?’ என்று தே.மு.தி.க தரப்பில் பொங்கிவிட்டார்களாம்!’’

‘‘விஜயகாந்த் ஓடியாடி ‘ஆக்டிவ்’ ஆக இருந்திருந்தால், கண்டிப்பாக அதிக சீட் கிடைத்திருக்கும்!’’
‘‘அது தே.மு.தி.க-வினருக்கும் புரிந்திருக்கிறது.அதனால்தான், ‘சீட் பிரச்னையைத் தாண்டி எங்களுக்கு நிதி நெருக்கடியும் இருக்கிறது. அதற்கும் அ.தி.மு.க தரப்பில் சரியான பதில் இல்லை’ என்று புலம்பினாராம் சுதீஷ். அதற்கு, ‘சீட் விஷயத்தில் கறார் காட்ட வேண்டாம்’ என்று பி.ஜே.பி தரப்பில் சமாதானப்படுத்தியிருக்கி றார்கள். கடைசியாக, தே.மு.தி.க-வுக்கு ஆறு சீட்டுகள், கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் ஆகியோருக்கு தலா ஒரு சீட்டு என்று முடிவாகியிருக்கிறதாம். இவர்கள் மூன்று பேரும், தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அப்படிப் பார்த்தால் பா.ம.க-வைவிட பி.ஜே.பி-க்கு ஒரு சீட் அதிகம் கொடுத்ததுபோலவும் ஆகிவிடும் அல்லவா. என்.ஆர் காங்கிரஸுக்கும் கொடுத்ததுபோக 18 இடங்களில்தான், அ.தி.மு.க போட்டியிட முடியும். த.மா.கா வந்தால் எண்ணிக்கை இன்னும் குறையும். அதைப் பற்றி எல்லாம் எடப்பாடி பழனிசாமி கவலைப்படுவதாக இல்லை. அவரது இலக்கு எல்லாம் 21 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிகத் தொகுதிகளை ஜெயிப்பதுதானாம். அதற்காகத் தான், இப்போது எல்லோருக்கும் தொகுதிகளை வாரி வழங்கியிருக்கிறாராம்.”
“அதிசயமாக அ.தி.மு.க அமைச்சர் வீட்டில் ஐ.டி ரெய்டு நடந்திருக்கிறதே, அதுவும் தேர்தல் கூட்டணி முடிவாகியிருக்கிற இந்த நேரத்தில்?”
“இது இன்னொரு சர்க்கஸ். அ.தி.மு.க – பி.ஜே.பி கூட்டணி முடிவான மூன்று நாள்களுக்குள், தமிழக வணிகவரித் துறை அமைச்சர் வீரமணியின் உதவியாளர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகள், அமைச்சரின் குடும்பத்துக்குச் சொந்தமான திருமண மண்டபம் உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில், பிப்ரவரி 21-ம் தேதி ஐ.டி ரெய்டு நடந்தது. இதிலும் சில உள்குத்து விஷயங்களைச் சொல்கிறார்கள், உள்விவரம் அறிந்தவர்கள்…”
“சொல்லும்… சொல்லும்…”
“அ.தி.மு.க கூட்டணியில் பி.ஜே.பி-யைக் கொண்டுவருவதற்கு, ‘மணி அண்டு கோ’ எனப்படும் இரண்டு அமைச்சர்கள் தீவிரமாக வேலைபார்த்தார்கள். ஆனால், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்துவந்தனர். இந்தத் தகவல் அலேக்காக டெல்லி தரப்புக்கு பாஸ் செய்யப் பட்டது. சும்மா இருக்குமா டெல்லி..? முதல்கட்டமாக கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்குகள் குறித்து மத்திய உளவு அமைப்புகள் தோண்ட ஆரம்பித்துவிட்டன என்கிறார்கள். வேலூர் புது பஸ் ஸ்டாண்டு அருகே 300 கோடி ரூபாய் நிலத்தை அபகரிக்க நடந்த முயற்சியில் வீரமணியின் பெயரும் அடிபட்டது. இந்த விவகாரத்தில் அமைச்சர்மீது உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த தொழிலதிபர் ராமமூர்த்தி, ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர். அவரது ஏற்பாட்டின் பேரில்தான், இந்த ரெய்டு நடந்துள்ளது என்கிறார்கள். அதுவும் எடப்பாடி தரப்புக்கு சொல்லிவிட்டுத்தான் ரெய்டே ஆரம்பித்தார்களாம்”

“வேறு ஏதோ காரணமும் சொல்கிறார்களே?”
‘‘பி.ஜே.பி-க்கு ஆதரவாகச் செயல்படும்  கே.பி.முனுசாமியை அமைச்சராக்குவதற்கும், ஒரு குரூப் முயற்சி செய்கிறது. முதலில் அவரை அமைச்சராக்கிவிட்டு,  அதன்பின் இடைத்தேர்தலில் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் அவரை நிறுத்தி ஜெயிக்கவைக்க அ.தி.மு.க தலைமை திட்டமிட்டுள்ளது என்கிறார்கள். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த அவரை, அமைச்சரவையில் சேர்ப்பதற்கு முன்பாக, அதே சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் வீரமணியை வெளியேற்ற முடிவு செய்துள்ளனர். இதற்கான முதல்கட்ட ஏற்பாடுதான் இந்த ரெய்டாம். வீரமணி ஆதரவாளர்களோ, ‘தேர்தல் நேரத்தில் நடந்துள்ள இந்த ரெய்டு கட்சிக்குத்தான் பாதிப்பு. வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை ஆகிய மூன்று தொகுதிகளிலும் அமைச்சருக்குச் செல்வாக்கு இருக்கிறது. தவிர, 37 ஆண்டுகளுக்குப் பின்பு வேலூர் தொகுதியை ஜெயித்துக்கொடுத்தது வீரமணிதான். கூட்டணி முடிந்துள்ள இந்த நேரத்தில் அவருடைய வீட்டில் கைவைத்ததைக் கட்சித் தலைமை வேடிக்கை பார்த்திருப்பது எந்த வகையில் நியாயம்?” என்று பொங்குகிறார்கள்.
‘‘பா.ம.க-வை நழுவவிட்டது, தி.மு.க கூட்டணி யில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறதாமே?”
“ஆமாம். துரைமுருகனும், ஜெகத்ரட்சகனும் பா.ம.க-வை உள்ளே கொண்டுவர பெருமுயற்சி செய்தார்கள். ஸ்டாலின் பிடிகொடுக்கவே இல்லை. எ.வ.வேலு, ஆ.ராசா, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் பா.ம.க உள்ளே வரவிடாமல் முட்டுக்கட்டை போட்டதால், கனிமொழியிடம் விஷயத்தைக் கொண்டு சென்றது துரைமுருகன் தரப்பு. கனிமொழியும், காங்கிரஸ் மூலமாக பா.ம.க-வைக் கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி செய்தார். ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் கைநழுவிவிட்டது மாம்பழம். அதில் ராகுல் காந்தி ரொம்பவே ‘அப்செட்’ ஆகிவிட்டாராம். தவிர, பா.ம.க மிஸ் ஆனதில் இங்கிருக்கும் காங்கிரஸ்காரர்களுக்கே நிறையவே வருத்தம்தான்!’’

‘‘அது சரி… காங்கிரஸ் எப்படி பத்து சீட்டுகளுக்கு சம்மதம் சொன்னார்கள்?’’
‘‘இவர்கள் பத்து என்று சொல்ல, அவர்கள் ‘பத்தாது’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், தி.மு.க தலைமை, ‘இதுவே அதிகம்’ என்று சொல்லிவிட்டது.’’
‘‘மற்ற கட்சிகளுக்கு சீட்டு அவ்வளவுதானா?’’
‘‘ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்துக்கும் தலா ஒரு சீட்டு என்ற கணக்கில் தி.மு.க இருந்தது. ஆனால், காங்கிரஸுக்குப் பத்துத் தொகுதிகளை ஒதுக்கி இருப்பதால், வைகோவும், திருமாவும் ஆளுக்கு இரண்டு தொகுதிகளையாவது வாங்கிவிட வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார்கள். இரண்டு கிடைப்பது சந்தேகம்தான். கம்யூனிஸ்ட்டுகள்தான் என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள்!’’
‘‘சரி, என்ன செய்யப்போகிறார் டி.டி.வி. தினகரன்?”
‘‘இரண்டு பெரிய கட்சிகளும் கிட்டத்தட்ட கூட்டணியைப் பேசிமுடித்துவிட்டதால், அடுத்ததாக எல்லோர் பார்வையும் தினகரன்மீது பதிந்துள்ளது. தமிழக வாழ்வுரிமைக்கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் தினகரன் தரப்பு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. கூட்டணி அமையாத பட்சத்தில், நாற்பது தொகுதிகளிலும் தனித்தே களமிறங்கவும் தயாராகிவருகின்றனர். அவர்களின் நோக்கம், அ.தி.மு.க கூட்டணியைத் தோற்கடிப்பதுதான்!’’
‘‘கமல் சேர வாய்ப்பு இருக்கிறதா?’’
‘‘வாய்ப்பே இல்லை. அவரது டார்கெட் சட்டமன்றத் தேர்தல்தான். ஆனால், இப்போதும் தனித்துப் போட்டியிடத் தயாராக இருக்கிறார்.’’
‘‘ரஜினி நிஜமாகவே ஒதுங்கிவிட்டாரா?’’
‘‘நிச்சயமாக… ஆனால், பி.ஜே.பி-யுடன் தொடர்பில் இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியில் அவரைச் சேர்த்து, 15 சீட்டுகள் தரத் தயார் என்று பி.ஜே.பி தரப்பில் முதலில் பேசியிருக்கிறார்கள். அதற்கு ரஜினி தரப்பில், ‘ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் அமைச்சர்கள் ஒதுங்கினால்தான், அந்தக் கட்சியுடன் கூட்டணி’ என்று கூறப்பட்டிருக்கிறது!’’ என்ற கழுகார், சட்டென்று சிறகு விரித்துப் பறந்தார்.

%d bloggers like this: