காங் – திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்ன?… முதல்வர் பழனிசாமி கேள்வி

காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில் இருந்த போது தமிழகத்திற்கு எந்த திட்டங்களை கொண்டு வந்தார்கள்? என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்திற்கு பாஜக கொண்டு வந்த நல்ல நான்கு திட்டங்களை சொல்ல முடியுமா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் முதல்வர் பழனிசாமி அதற்கு பதில் அளித்துள்ளார்.

சென்னை வடபழனியில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமி உரையாற்றினார்.

முதல்வர் விளக்கம்

அப்போது அவர் பேசியதாவது: சென்னையில் ரூ 79 ஆயிரம் கோடியில், மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டம் செயல்படுத்தப்படும் என்றார். பிரம்மாண்ட கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது என்றும் தமிழகத்திற்கு பல திட்டங்களை கொண்டுவர அதிமுகவும் பாமகவும் கூட்டணி வைத்துள்ளதாகவும் கூறினார்.

அதிமுக வெற்றி பெற வேண்டும்

ஜெயலலிதா மறைந்த பின் அதிமுக சந்திக்கும் முதல் தேர்தல் இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும். இன்னும் 3, 4 ஆண்டுகளில் வீடில்லாதவர்களே இல்லை என்ற நிலை தமிழகத்தில் உருவாக்கப்படும் என்று கூறிய முதல்வர் பழனிசாமி, வறட்சியான காலங்களில் கூட தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

திமுகவில் குழப்பம்

மக்களை பற்றி கவலைப்படாமல் குடும்பத்தினர் அதிகாரத்தில் வர முயற்சி செய்தவர் கருணாநிதி என்றும் திமுகவில் குழப்பமான சூழல் நிலவுகிறது; குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டுமே கட்சிப்பதவிக்கு வர முடியும் எனவும் பேசினார்.

ஸ்டாலின் குறித்து விமர்சனம்

இங்கு ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று கூறிவிட்டு கொல்கத்தாவில் மாற்றி பேசினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்று விமர்சனம் செய்த முதல்வர் பழனிசாமி, இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழகம் முதல் மாநிலம் என்று பெருமிதம் தெரிவித்தார்.

சட்டம்-ஒழுங்கு

மக்கள் நலனுக்காக தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுத்த அரசு அதிமுக அரசு ஓரிரு ஆண்டுகளில் குற்றச் சம்பவங்கள் நிகழாமல் அதிமுக அரசு மக்களை பாதுகாக்கும் என்றும் சட்டம்-ஒழுங்கை பேணிக்காப்பதில் சென்னை முதலிடத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

%d bloggers like this: