இபிஎஸ் கூப்பிடுறாக… எம்.கே.எஸ். கூப்பிடுறாக… டிடிவி கூப்பிடுறாக…

 அரசியலில் அவர் காணாமல் போய்விட்டதாக ஆரூடம் கூறிய கட்சித் தலைவர்கள் பலரும் இன்று அவருக்காக வெயிட்டிங்! விஜயகாந்தின் அரசியல் செல்வாக்கு கூடியதா, குறைந்ததா? என்பது முக்கியமல்ல. இன்னமும் ‘கிங் மேக்கர்’ அந்தஸ்தை அவர் இழக்கவில்லை என்றே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

விஜயகாந்த் தேமுதிக.வை ஆரம்பித்தபோது அந்தச் செய்தியை, ‘விளையாட்டுச் செய்திகள்’ பகுதியில் குறிப்பிட்ட ஒரு சேனல் காட்டியதாக சொல்வார்கள். ஆனால் அடுத்தடுத்து 8 சதவிகிதம், 10 சதவிகிதம் என வாக்குகளை நிரூபித்து, தன்னை தமிழக அரசியலில் 3-வது சக்தியாக நிலை நிறுத்தினார் விஜயகாந்த்.

2014 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல் தோல்விகள், விஜயகாந்தின் தளபதிகளாக இருந்த பலரை திமுக தள்ளிக்கொண்டு போனது ஆகியவை கேப்டனின் பலத்தை முடக்கிப் போட்டுவிட்டதாக கூறப்பட்டது. கூறவே உடல்நலப் பிரச்னைகளும் சேர்ந்துகொள்ள, சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு விஜயகாந்த் பயணப்பட்டார்.

தேமுதிக கதையே முடிந்தது என பலரும் நினைத்திருக்க, தேர்தல் கூட்டணி பேசும் நிலையில் யாராலும் விஜயகாந்தை தவிர்க்க முடியவில்லை. காரணம், விஜயகாந்த் பின்னால் திரண்ட தொண்டர்கள் இன்னமும் அங்கேயே தங்கியிருப்பதாக இதர கட்சிகளே கருதுவதுதான். அவரது தொண்டர் கூட்டம் என்பது திமுக, அதிமுக.வை ஏற்காதவர்களின் கூட்டம்தான்!

எனவே தனியாக அவர் நின்றாலும் அவருக்கு வாக்களிக்கும் கூட்டம் அது. அதே சமயம். அவர் சேரும் கூட்டணிக்கும் வாக்களிக்கும் கூட்டம். விஜயகாந்தால் முன்னைப் போல சூறாவளிப் பிரசாரம் செய்ய முடியாவிட்டாலும், அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் பிரசாரத்தில் கை கொடுப்பார்கள் என்பதும் கூட்டணி சேர விரும்பும் கட்சிகளின் கணக்காக இருக்கிறது.

‘விஜயகாந்த் எங்கள் அணிக்கு வருவார், முரசு கொட்டப் போகிறது’ என்றெல்லாம் உற்சாகமாக பேசி வந்த அமைச்சர் ஜெயகுமார் இன்று (25-ம் தேதி) செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘அவர் வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டாலும் கவலையில்லை’ என்றார், சற்றே விரக்தியுடன்!

ஜெயகுமாரின் இந்த விரக்திக்கு காரணம், தங்களிடம் கூட்டணிக்காக வருபவர்களை பார்த்து எள்ளி நகையாடுவது போல விஜய பிரபாகரன் அடித்த ஒரு கமெண்ட்தான்! ஆனால் ஜெயகுமாரின் கருத்து குறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, ‘அது அவரது கருத்து. அதை நான் பார்க்கவில்லை. கூட்டணியை வலுப்படுத்துவதுதான் எங்கள் திட்டம்’ என்றார், இன்னமும் விஜயகாந்தை எதிர்நோக்குபவராக!

‘விஜயகாந்தை உடல் நலம் விசாரிக்க மட்டுமே வந்தேன்’ என சாலி கிராமம் இல்லத்தில் நின்று பேட்டி கொடுத்தார் மு.க.ஸ்டாலின். ஆனால் பிரேமலதா விஜயகாந்த் தனது பேட்டியில், ‘ஸ்டாலின் சந்திப்பிலும் அரசியல் பேசப்பட்டது’ என போட்டுடைத்தார். அதை திமுக இதுவரை மறுக்கவில்லை.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ‘பாமக, தேமுதிக.வுடன் நாங்கள் கூட்டணி பேசவில்லை’ என்றார். ஆனால் அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன், ‘விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி பேசுகிறோம்’ என்கிறார்.

கமல்ஹாசனிடம் கேட்டால், ‘சென்னை சென்றதும் விஜயகாந்துடன் இணைந்து செயல்படுவது குறித்து முடிவு எடுப்போம்’ என்கிறார். ஆக, விஜயகாந்த் ஆப்ஷனை யாரும் குளோஸ் செய்யவில்லை. இதுவே இன்னமும் தேமுதிக தவிர்க்க முடியாத கட்சி என்பதை உணர்த்துகிறது.

கருணாநிதி, ஜெயலலிதா என இருபெரும் தலைவர்கள் இல்லாத சூழலில், தனித்து நின்று ஜெயிக்கும் சக்தி இன்று தமிழ்நாட்டில் எந்தக் கட்சிக்கும் இல்லை. அதிமுக, திமுக ஆகிய இரு பெரிய கட்சிகளுமே வலுவான கூட்டணிக்கு தயாராகும் சூழலில், தேமுதிக கைவசம் 10 சதவிகிதம் வாக்குகள் இருக்க வேண்டும் என்பதில்லை. அதற்கும் கீழே எவ்வளவு குறைவான சதவிகித வாக்குகள் இருந்தாலும்கூட அது தவிர்க்க முடியாத வாக்கு வங்கி என்பதையே அரசியல் சூழல்கள் உணர்த்துகின்றன.

%d bloggers like this: