ஒரே கல்லில் ரெண்டு மாங்கா… லோக்சபா தேர்தல் நெருங்குவதால் பிரதமர் மோடி போட்ட புதிய சபதம் இதுதான்…

கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு இந்தியாவிற்கு பெரும் குடைச்சலை கொடுத்து கொண்டிருக்கிறது. இதற்காக ஆகும் செலவுதான் இந்தியாவின் தலைவலிக்கு முக்கிய காரணம். பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்யும் 3வது நாடு இந்தியா.

முதல் இரண்டு இடங்களில் முறையே அமெரிக்கா மற்றும் சீனா உள்ளன. இந்தியாவிடம் கச்சா எண்ணெய் வளம் அறவே இல்லாமல் இருப்பதுதான், பிரச்னைக்கு மூல காரணம். இதன் காரணமாக 85 சதவீத கச்சா எண்ணெய் தேவையை, இறக்குமதியின் மூலமே பூர்த்தி செய்து கொள்கிறது இந்தியா.

இதற்காக ஒரு ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை இந்தியா செலவிட்டு வருகிறது. இது இந்திய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை உண்டாக்கி விடுகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியில் மூன்றாவது இடத்தில் உள்ள போதே இப்படி இந்தியா தத்தளித்து கொண்டிருக்கிறது.

இதே இரண்டாவது இடத்திற்கு சென்று விட்டால் நிலைமை என்னவாகும் என கற்பனை செய்து பாருங்கள். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பது வயிற்றில் புளியை கரைத்து வருகிறது. ஆம், இந்தியா நடப்பாண்டில் சீனாவை பின்னுக்கு தள்ளி 2வது இடத்திற்கு வந்து விடும் என கணிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு அறிக்கையில் இந்த கணிப்பு வெளியிடப்பட்டிருந்தது. எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதில், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிப்புதான் முக்கியமானது. இந்தியா மட்டுமல்ல. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்காக உலகின் அனைத்து நாடுகளும் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் எலெக்ட்ரிக் வாகனங்கள்தான்.

எனவே உலகம் முழுக்க எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் அசூர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, சீனா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள், எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரிப்பதில், நாலு கால் பாய்ச்சலில் முன்னேறி கொண்டுள்ளன.

எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரித்தால், சுற்றுச்சூழலையும் பாதுகாத்து கொள்ள முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க முடியும் என்பதால்தான் எலெக்ட்ரிக் வாகன மோகம் அதிகரித்து வருகிறது.

ஆனால் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரிப்பதில், இந்தியா இன்னும் பின்தங்கியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. அதுவும் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் பல மடங்கு பின்தங்கியிருக்கிறோம்.

மத்திய அரசு முழுமையாக மனது வைத்தால் மட்டுமே, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரிக்க முடியும். மனது வைத்தால் மட்டும் போதாது. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் தேவை. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு பொறுப்பேற்றது.

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, அப்போது முதலே மத்திய அரசு மிக தீவிரமான முயற்சிகளை தொடர்ச்சியாக எடுத்து கொண்டுதான் இருக்கிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகம் என்பதால், அவற்றை வாங்குவோருக்கு ஃபேம் இந்தியா என்னும் திட்டத்தின் கீழ் மானியம், எலெக்ட்ரிக் வாகனங்களின் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி அதிரடியாக குறைப்பு என மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளை அடுக்கி கொண்டே போகலாம்.

இதுதவிர மக்கள் மத்தியில் உள்ள தயக்கத்தை போக்க வேண்டும் என்பதற்காக, பெட்ரோல் பங்க்குகளுக்கு இணையாக, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைக்கும் பணிகளையும் மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.

இதன்படி இந்தியாவில் ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் தொலைவிற்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷனை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் இந்தியாவில் இன்னும் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை பெரிய அளவில் எல்லாம் அதிகரிக்கவில்லை.

எதோ சாலைகளில் மருந்துக்கு ஒன்றிரண்டு எலெக்ட்ரிக் வாகனங்கள் உலா வந்து கொண்டுள்ளன. ஆனால் வரும் 2020ம் ஆண்டு முதல், அதாவது அடுத்த ஆண்டு முதல் இந்திய எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பாண்டின் இரண்டாவது பாதிக்கு பின்பாக இந்திய எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட்டில், ஏராளமான புதிய தயாரிப்புகள் களமிறங்கவுள்ளன. இதில், ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி, மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி உள்ளிட்ட கார்கள் குறிப்பிடத்தகுந்தவை.

இதுதவிர மாருதி சுஸுகி வேகன்ஆர் எலெக்ட்ரிக் காரும் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இதற்கு காரணம் அதன் விலைதான். மாருதி சுஸுகி வேகன்ஆர் எலெக்ட்ரிக் காரின் விலை 7 முதல் 7.50 லட்ச ரூபாய்க்குள்தான் இருக்கும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசின் ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் கிடைக்கும் மானியத்தின் மூலமாக இந்த விலை சாத்தியமே. எனவே மாருதி சுஸுகி வேகன்ஆர் இந்திய எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட்டில் ஓர் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7 முதல் 7.50 லட்ச ரூபாய்க்குள் எலெக்ட்ரிக் கார் எப்படி சாத்தியம்? என்பது தொடர்பாக டிரைவ்ஸ்பார்க் தளம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். இவை தவிர வரும் ஆண்டுகளில் இன்னும் ஏராளமான எலெக்ட்ரிக் தயாரிப்புகள் களமிறங்கவுள்ளன.

எனவே கூடிய விரைவில் இந்திய சாலைகள் அனைத்தையும் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆக்கிரமிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த சூழலில், நாட்டின் தலைநகர் டெல்லியில் உலகளாவிய வர்த்தக உச்சி மாநாடு நடைபெற்றது.

ET Auto வெளியிட்டுள்ள செய்தியின்படி, இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”எலெக்ட்ரிக் வாகன துறையில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு வர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என குறிப்பிட்டார்.

ஆனால் அமெரிக்கா, சீனா என ஜாம்பவான்கள் கோலோச்சி கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் வாகன துறையில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு வருவது என்பது அவ்வளவு லேசுப்பட்ட காரியம் அல்ல என்பதை பிரதமர் நரேந்திர மோடியும் அறிவார்.

அதற்கு இன்னும் மிக மிக கடுமையான உழைப்பை வழங்க வேண்டும். ஆக்கப்பூர்வமான திட்டங்களை அதி விரைவாக செயல்படுத்த வேண்டும். அப்போது மட்டுமே எலெக்ட்ரிக் வாகன துறையில், இந்தியாவை நம்பர்-1 இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கனவு நிறைவேறும்.

ஆனால் எலெக்ட்ரிக் வாகன துறையில் இந்தியா எப்போது முதலிடத்திற்கு கொண்டு வரப்படும், அதற்கான காலக்கெடு என்ன? என்பது போன்ற தகவல்கள் எதையும் பிரதமர் நரேந்திர மோடி தனது பேச்சில் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால், பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து இன்னும் இதுபோன்ற சபதங்கள் பலவற்றை எதிர்பார்க்கலாம் என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றனர்.

%d bloggers like this: