குடும்பத்தினர்… வாரிசுதாரர்… நியமனதாரர்… நம் பணத்துக்குப் பயனாளி யார்?

மது பணத்துக்கு யாரெல்லாம் பயனாளிகள், நமக்குப்பின் நம்முடைய பணத்தை யாரெல்லாம் சொந்தம் கொண்டாட முடியும் என்கிற சிந்தனை நாம் வாழும் காலத்தில் நம்மில் பலருக்கும் எழுவதே இல்லை. ஆனால், இன்றைக்கு நடக்கும் பல குடும்பத் தகராறுகளுக்குக் காரணம், குடும்பத் தலைவரின் மறைவுக்குப்பிறகு யார் அந்தப் பணத்தைச் சொந்தம் கொண்டாடுவது என்பதுதான் பெரும் பிரச்னையாக இருக்கிறது. சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம், இந்தப் பிரச்னை இனி யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும் என்பதை நமக்கு எச்சரிக்கிற மாதிரிதான் இருக்கிறது.

அதாவது, பிரசவக் காலத்தில் இருந்தார் மனைவி. மனைவியின் ஏ.டி.எம் கார்டில் பணம் எடுக்கப் போனார் அவரது கணவர். கார்டை உள்வாங்கிக்கொண்ட பணம் தரும் எந்திரம், பணத்தைத் தரவில்லை. ஆனால், பணம் தரப்பட்டwதாக சேமிப்புக் கணக்கில் தொகையைக் கழித்துவிட்டது அந்த எந்திரம். பணத்தைத் தராமலே கணக்கில் மட்டும் கழித்துக் கொண்டதால்,   வங்கியிடம் அவர் புகார் செய்தார். வங்கியானது அவரது புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை. வேறு வழியின்றி நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார் அவர்.

அங்கு அவருக்குப் பணம் கிடைக்கவில்லை. ‘மனைவியின் ஏ.டி.எம் கார்டை, கணவர் பயன்படுத்தியது தவறு’ என்கிற வழிகாட்டுதல்தான் அவருக்குக் கிடைத்தது. நம் பணம், நமக்குப் பின்னால் யாருக்குச் சொந்தம் என்கிற கேள்வியை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளதால், இதற்கான பதிலை இனி நாம் பார்ப்போம்.

ஒரு குடும்பத் தலைவர் விட்டுச் செல்லும் சொத்துகளை இரு வகையாகப் பிரிக்கலாம். வீடு, விளைநிலம், தோட்டம் போன்றவை அசையா சொத்துகள். சம்பளம், பென்ஷன், வங்கி டெபாசிட்டுகள், நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட், கிராஜுட்டி, நகை மற்றும் காப்பீடு முதல் ‘சிம்’ கார்டு வரை அனைத்துமே அசையும் சொத்துகள். அரசு வேலையில் இருப்பவர்கள், பார்க்கும் வேலைகூட  ஒரு வகையில் சொத்துதான்.

 

பயனாளிகள் யார்?

ஒருவரது வாழ்நாளிலும் சரி; அவர் வாழ்ந்து மறைந்த பிறகும் சரி, அவரது பணத்திலிருந்து யாரெல்லாம் பயன் பெறுகிறார் களோ, அவர்கள் அனைவரும் பயனாளிகள் எனப்படு கிறார்கள். அந்தப் பயனாளிகள் நான்கு பிரிவுகளாக உள்ளனர்.

* குடும்ப உறுப்பினர்கள் (Family members)

* வாரிசுதாரர் (Legal heirs)

* நியமனதாரர் (Nominee)
 
* சார்ந்து வாழ்வோர் (Dependants)

இந்த நான்கு பிரிவினரும்  பணத்தின் மீதான உரிமையைக் கொண்டாடுவதில் சமமான உரிமை கொண்டவரல்ல.   எப்படியெனில், குடும்பத்தினர் அனைவரும் சார்ந்து வாழ்பவர் களாக இருக்கலாம். ஆனால், சார்ந்து வாழ்பவர் குடும்பத்தின ராக இருக்க வேண்டும் என்பது கிடையாது. உதாரணமாக, ஒருவர் தனது மனைவி மக்களுடன் கூடவே 50  வயதான தனது ஆதரவற்ற தம்பியையும் பராமரித்து வரக்கூடும். அவரது தம்பி, சார்ந்து வாழ்பவர்தானே தவிர, குடும்பத்தினர் என்ற வரையறைக்கு உட்பட மாட்டார்.

இதேபோல், குடும்பத்தினர் அனைவரும் வாரிசுதாரர்களாக இருக்கலாம். ஆனால், வாரிசு தாரர் எல்லாம் குடும்பத்தினர் ஆகமாட்டார்கள். மேலும், குடும்பத்தினர் நியமனதாரராக இருக்கலாம். அதேசமயம், நியமனதாரர் குடும்பத்தினர் என்ற வரையறைக்கு உட்படாமல் போகலாம். இந்தத் தகவல் சற்றே வியப்பாகக்கூட இருக்கலாம். பின்வரும் நிகழ்வுகள், வியப்பை விலக்கி தெளிவைத் தரக்கூடும்.

வாழ்நாள் பயனானிகள்

ஒருவர், தான் சம்பாதிக்கும் பணத்தில் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் செலவழித் ததுடன், தனது உறவினர்கள், நண்பர்கள், வழிபாட்டுத் தலங்கள், தொண்டு நிறுவனங் கள் போன்றவற்றுக்கும் செலவு செய்யலாம். இவையெல்லாம், தனது வாழ்நாளில் சம்பாதித்ததை வாழ்நாளிலேயே செய்யும் செலவினங்கள்.

இவ்வாறு செலவுகள் செய்ததுபோக சேமிக்கப் பட்டவை, அசையும் சொத்து களாகவும், அசையாச் சொத்து களாகவும் இருக்கலாம். அவற்றை யாருக்கு, எவ்வளவு தரலாம் என்பதை நிர்ணயம் செய்து, அதற்கான ‘உயில்’ ஒன்றை எழுதி வைத்துவிடுவது அவசியம். அப்படி எழுதாமல் போனால், அது சட்டச் சிக்கலைத்தான் உருவாக்கும் என்பதே இன்றைய நிகழ்கால யதார்த்தம்.

குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நலிவடைந்தவராக இருக்கலாம். உறவினர்களில் ஒருவர் உரிய சமயத்தில் உதவி செய்து தனது முன்னேற்றத்துக்கு முன்னோடியாக இருக்கலாம். தனக்காக தியாகம் செய்த நண்பர் இருக்கலாம். பிடித்தமான கோயில், மசூதி, தேவாலயம் இருக்கலாம்.

சிக்கலைத் தவிர்க்கும் உயில்

மேற்கண்ட இனங்களில், தனது பணம், தனது மறைவுக்குப்பின் யார் யாருக்கு, எந்தெந்த விகிதத்தில் அல்லது சதவிகிதத்தில் சேர வேண்டுமோ அதன்படியே ஓர் உயிலை எழுதி வைத்து விட்டால், அவரது மறைவுக்குப் பின், அவர் விரும்பியபடியே பயனாளி களுக்குப் பணம் போய்ச்சேரும்.

மேலும், அந்த உயிலில் இருவர் சாட்சியமும் அவசியம். அதனை ஒரு முத்திரைத்தாளில் (Non Judicial Stamp Paper) எழுதி, பதிவு (Rgistration) அலுவலகத்தில் பதிவு  செய்துவிட்டால், அதன்படியே பணம் பகிர்ந்தளிக்கப்படும்.  உயில் எழுதுபவர்  உயிரோடிருக்கும் வரை, உயிலில் மாற்றங்களைச்  செய்துகொள்ளலாம்.

 

மறைவுக்குப்பின்…

ஆனாலும், இன்றைக்கும் உயில் எழுதிவைத்துவிட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகத்தான் இருக்கிறது. சொத்துகளைப் பிரித்துத் தருவதில் குடும்ப உறுப்பினர்களின் வெறுப்பினைச் சம்பாதித்துக்கொள்ள வேண்டுமே என்கிற எண்ணம்தான் பலரையும் உயில் எழுதுவதைத் தவிர்க்கச் செய்துவிடுகிறது.

உயில் எழுதாமல் இறந்துபோனவரின் சொத்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சம அளவாகப் பங்கிடப்படும். இங்கே ‘குடும்பம்’ என்பது இரு வகைகளாக இருக்கும். அதாவது, இறந்து போனவருக்குத் தனிச்சட்டம் இருக்குமானால், குடும்ப உறுப்பினர் யார் என்பது தனிச் சட்டத்தின்படி நிர்ணயமாகும். தனிச்சட்டம் இல்லாதவருக்கு, பொதுச் சட்டத்தின்படி குடும்ப உறுப்பினர்கள் யார் என்பது தீர்மானிக்கப்பட்டு, சொத்துகள் சரிசமமாகப் பிரித்துத் தரப்படும்.

இவை எல்லாம் அனைவருக்கும் பொதுவான நடைமுறைகள்.

அரசுப் பணியினர்

நாம் ஏற்கெனவே பார்த்த அசையும் சொத்து மற்றும் அசையாச் சொத்துடன்கூட, அரசுப் பணியினருக்கு கீழ்க்கண்ட பணப்பலன்களும் உண்டு. அதாவது, அரசுப் பணியில் இருக்கும் போதோ, பணியிலிருந்து ஓய்வுபெற்று பணப் பலனைப் பெறாமல் இறந்துவிட்டாலோ அவரது குடும்பம் கீழ்க்காணும் சலுகைகளைப் பெறக்கூடும்.

குடும்பப் பாதுகாப்பு நிதி, விடுப்பு சம்பளம், வாழ்நாள் கால சம்பளம் / பென்ஷன், பென்ஷன் கம்யூடேசன், குடும்ப பென்ஷன் கருணை அடிப்படையில் வேலை, ஜி.பி.எஃப் முதலானவை. அரசுப்பணியினரின் குடும்ப உறுப்பினர்கள் இரண்டு அடுக்காக உள்ளனர்.

குடும்பத்தினர்

1. மனைவி, சட்டப்படி பிரித்து வைக்கப்பட்ட மனைவி உள்பட (இது இறந்த ஊழியர் ஆண் என்றால்)

2. கணவர், சட்டப்படி பிரித்து வைக்கப்பட்ட கணவர் உள்பட (இறந்துபோன ஊழியர் பெண் எனில்)

3. மகன்கள் (மாற்றுத்தாய் மற்றும் மாற்றுத் தந்தை மூலம் பிறந்த மகன், தத்தெடுத்த மகன் உள்பட)

4.மணமாகாத மகள் (மாற்றுத்தாய்/ மாற்றுத் தந்தை வழி பிறந்த மகள், தத்தெடுத்த மகள் உள்பட)

5. விதவை மகள் (மாற்றுத்தாய் / மாற்றுத் தந்தை வழிப்பட்ட விதவை மகள், தத்தெடுக்கப்பட்ட விதவை மகள் உள்பட)

6. தந்தை (தத்தெடுக்கப்பட்ட தந்தை உள்பட)

7. தாய் (மாற்றந்தாய் மற்றும் தத்தெடுத்த தாய் உள்பட)

8. பதினெட்டு வயதுக்கு உள்பட்ட சகோதரர்கள்

9. மணமாகாத சகோதரி மற்றும் விதவைச் சகோதரி

10. மணமான மகள்

11. பேரக் குழந்தை

அரசுப் பணியாளர், முந்தைய பத்திகளில் குறிப்பிடப்பட்ட தனக்கான பணப் பலன்களில், ஒவ்வொன்றிலும், யார் யாருக்கு எத்தனை சதவிகிதம் தரப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு இனத்துக்கும் தனித்தனியே நியமனப் படிவம் எழுதலாம். இரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் அலுவலகத் தலைவர் மேலொப்பம் பெறவேண்டும்.

பணியாளர் இறந்துவிடும் நிலையில், ஜி.பி.எஃப், குடும்பப் பாதுகாப்பு நிதி, பென்ஷன் கம்யூடேஷன் ஆகிய ஒவ்வொன்றுக்கும் எந்த விகிதத்தில் யாருக்குத் தரவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாரோ, அதே நபருக்கு அதே விகிதப்படி பணம் போய்ச் சேர்ந்துவிடும்.

மேற்கண்டவாறு நியமனப்படிவம் எழுதி வைக்காமல் இறந்துவிட்டாலோ, பணப்பலனின் மொத்தத் தொகைக்கும் பயனாளியைக் குறிப்பிடாமல் பகுதித் தொகைக்கு மட்டும் நியமனம் எழுதியிருந்தாலோ, நியமனத்தின்படி பயனாளி அமையமாட்டார்.

மாறாக, வரிசை எண் 1 முதல் 5 முடிய இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் கண்டறியப் பட்டு, அவர்களுக்குள் பணப்பலன் சம அளவில் பங்கிட்டுத் தரப்பட்டுவிடும். ஏனென்றால், வரிசை எண் 1 முதல் 5 வரை உள்ளவர்களே உடனடிக் குடும்பத்தவர். எனவே, நியமனப் படிவம் எழுதி வைக்காவிட்டாலும், எழுதிவைத்த நியமனம் குறைபாடு உடையதாக இருந்தாலும், பணப் பலன் உடனடிக் குடும்பத்தாருக்கே கிடைக்கும்.
முதன்மைக் குடும்பத்தவரில் (உடனடிக் குடும்பத்தவர்) எவருமே இல்லையென்றால்தான், பணப்பலன், வரிசை எண் 6 முதல் 11 வரையில் இடம்பெற்றுள்ளவர்களுக்குக் கிடைக்கும்.

குடும்ப பென்ஷன்

இறந்துபோனவர் கணவர் என்றால், மனைவிக்கும், மரணித்தவர் மனைவி என்றால் கணவருக்கும் மட்டுமே தரக்கூடியது குடும்ப பென்ஷன். ஊழியருக்கு முன்பே அவரது வாழ்க்கைத்துணை இறந்துபோயிருந்தால் 25 வயதுக்கு உள்பட்ட மகன் அல்லது மணமாகாத மகளுக்கு வயது மூப்பின்படி கிடைக்கும்.

கருணை அடிப்படையில் வேலை

இறந்துபோன அரசுப்பணியாளரின் குடும்பத்துக்கு, கருணை அடிப்படையில் வேலை தரப்படுகிறது. ஊழியர் ஓய்வுபெற்ற அன்று இரவு 11.59 மணி வரை இறந்துபோனாலும் கருணை அடிப்படையில் வேலை உண்டு. இது கணவர் / மனைவிக்கானது.

மகனுக்கோ, மகளுக்கோ கருணை வேலை தரப்படவேண்டுமானால், இறந்துபோனவரின் மனைவி / கணவர் இசைவு எழுதித்தர வேண்டும். இதர மகன் / மகள் ஆட்சேபமின்மையும் எழுத்துப்பூர்வமாகப் பெற வேண்டும்.

கணவன் / மனைவி இருவருமே பணியிலிருந்து, இறந்துபோனவர் யாரேனும் ஒருவர் எனில், கருணை வேலை கிடைக்காது.


இன்னும் சில தகவல்கள்!

* தேவைப்பட்டால் ஒருவர் தனது உயிலை மாற்றி அமைப்பதுபோல், நியமனப்படிவத்தையும் அரசுப் பணியினர் திருத்தி அமைக்கலாம்.

* ஒருவருக்கு குடும்பம் இல்லாத நிலையில் யாரை நியமனம் செய்திருந்தாலும், குடும்பம் அமைந்தபிறகு குடும்பத்தினருக்கே பணப்பலன் கிடைக்கும்.

* வேலையில் சேர்ந்து, முதல் சம்பளம் வாங்கும் முன்பே குடும்பப் பாதுகாப்பு நிதிக்கான நியமனம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

* பூர்வீகச் சொத்தைக் குடும்ப உறுப்பினர் அல்லாதவர்களுக்குச் சேரும்படி உயில் எழுத முடியாது.

%d bloggers like this: