திருமணத்துக்குப் பின் அம்மாவையும் மனைவியையும் ‘பேலன்ஸ்’ செய்வது எப்படி? – ஓர் உளவியல் ஆலோசனை

ல்லரசு நாடுகளால்கூட தீர்க்கமுடியாத பிரச்னை என்றால் அது வீட்டில் நடக்கும் மாமியார் மருமகள் சண்டைதான். கூட்டுக்குடும்பங்கள் அருகி,  தனிக் குடித்தனம் பெருகிவிட்டாலும், மாமியார் மருமகள்களுக்கு இடையே பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை.’உன் மனைவி இப்படி பண்றா, அப்படி பண்றா; இது சரியில்ல…அது சரியில்ல’ என்று மாமியார்கள் ஒருபுறம், ‘உங்க அம்மா பண்றது எனக்குப் பிடிக்கல; அவங்க நடந்துக்கிறது வித்தியாசமா இருக்கு’ என்று மருமகள்கள்  மற்றொரு புறம், இரண்டுக்கும் நடுவே சிக்கித் தவிக்கும் ஆண்கள் தனி ரகம். முறையான புரிதல் இல்லாத மாமியார் மருமகள் பிரச்னைகளுக்குஉளவியல் ரீதியில்  எப்படித் தீர்வு காண்பது என்று மனநல மருத்துவர் டாக்டர் ஈஸ்வரனிடம் கேட்டோம்.

 

‘இந்தப்  பிரச்னைகளுக்கான தீர்வை ஆண்தான் அளிக்க முடியும்’ என்ற அவர், இதுபற்றி மேலும் விரிவாகப் பேசினார். 

“அறிமுகமில்லாத இரண்டு பேர் இணைவதுதான் குடும்ப அமைப்பு. இங்கு அறிமுகமில்லாதது என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும் கலாசார வித்தியாசங்கள்தான்.  வெவ்வேறுவிதமான பழக்கவழக்கங்களில் வளர்ந்த இரண்டு நபர் திருமணத்தில் இணையும்போது ஏற்படும் அனுசரணை இல்லாத நிலைதான் ஒட்டுமொத்த  குடும்பத்திலும் சச்சரவுகளை ஏற்படுத்துகிறது. முறையற்ற தொடர்புகள், பொருளாதாரச் சிக்கல் போன்றவையும் பிரச்னைகளுக்குக் காரணமாக அமைகின்றன.

மனைவி மாமியாரைப்பற்றி ஏதேனும் குறை கூறினால் கோபப்பட்டு, ‘மாமியார் கெத்தைக் காட்றியா?’ என்று அம்மாவை அதட்டாமல் இரண்டு பேரையும்  உட்கார்ந்து பேசச் சொல்ல வேண்டும். அப்போதே அந்தப் பிரச்னை தீர்ந்துவிடும்.

திருமணமான பின்பு கணவன் மனைவிக்குத் தேவையான உதவிகளைச் செய்யலாம். ஆனால் அதற்கும் ஓர் அளவுகோல் உண்டு. திருமணத்துக்கு முன்புவரை  சாப்பாடு ஊட்டிவிட்டு, தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு… என மகனை அரவணைத்த அம்மாவுக்கும் சகோதரிகளுக்கும், திருமணத்துக்குப் பிறகு அவன்  மனைவிக்குச் செய்யும் அதீத பணிவிடைகள் வலியை ஏற்படுத்தும். இதை ஆண்கள் உணர வேண்டும்.

20, 30 வருடம் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு முறையிலிருந்து மாறுவது எந்தப் பெண்ணுக்கும் சிரமமானதுதான். அதேபோன்றுதான் 50, 60 வருடப் பழக்கத்திலிருந்து பெற்றோர் மாறுவதும் சிரமம் என்பதை ஆண்கள் உணரவேண்டும்.

‘அப்பப்போ மகளை அழைச்சிட்டுவந்து கண்ணுல காட்டிட்டு போங்க’ என்று கூறும் மாமனாரிடம் ‘அது உங்க மகள் வாழும் வீடு; நீங்க எப்போ வேணும்னாலும் வந்து பார்க்கலாம்’ என்று தயங்காமல் கூறி வாருங்கள்.

மாமியார் என்பவர் குனியக் குனியக் கொட்டுபவர், மகனை தன் கையில் வைத்துக்கொள்வார்’ என்று மகள்களுக்குப் பல அம்மாக்கள் ‘அட்வைஸ்’ பண்ணிப் புகுந்த வீட்டுக்கு அனுப்புவதுண்டு. அதே மனப்பான்மையில் புகுந்தவீட்டுக்குள் வரும் பெண்ணுக்கு மாமியார் சாந்த சொரூபியாக இருந்தாலும் பத்ரகாளியாகவே தெரிவார்.  அதனால் திருமணமான புதிதில் மனைவியிடம் அம்மாவைப் பற்றிய மனத்தாங்கல்களை ஆண்கள் கூறக்கூடாது.

‘மாமியார் என்னும் கேரக்டரையே எனக்குப் பிடிக்காது’ என்றுகூறும் மனைவிகளுக்கு, ‘உன்னுடைய அம்மாவும் மாமியார் ஸ்தானத்தில் இருப்பவர்தான்’ என்பதைக்  கணவன் நாசூக்காக எடுத்துக்கூற வேண்டும். ‘உன்னை எப்படி உன் அம்மா அப்பா செல்லமாக வளர்த்தார்களோ… அதே போலத்தான் என்னையும் என் அம்மா, அப்பா வளர்த்தார்கள்’ என்று தங்கள் பெற்றோரைப் பற்றி மனைவியிடம் கூறவேண்டும்.

தான் நினைத்ததெல்லாம் நடக்காவிட்டால் தனிக்குடித்தனம் செல்ல அடம்பிடிக்கும் மனைவியிடம், ‘என் அம்மா, அப்பா இல்லாம நான் இல்ல. அவங்க என்னை அம்போன்னு விட்டிருந்தா நீ எனக்கு கிடைச்சிருக்க மாட்ட’ என்று சாதுவாக சொன்னால் போதும், மனைவி அப்படியே ‘இம்ப்ரஸ்’ ஆகிவிடுவார்.

‘உன் மனைவிக்கு நான் இருக்கிறது பிடிக்கவில்லையா’ என்று கேட்கும் அம்மாக்களிடம், ‘அப்படியில்லம்மா, அவக்கிட்ட பேசி புரிய வைக்கலாம், நான் பேசி சரி பண்றேன்’ என்று நிதானமாக எடுத்துக் கூறினால் எந்த அம்மாவும் ஏற்றுக் கொள்வார்.

இன்று பெரியவர்களுக்குத் தேவைப்படுவதே ‘சாப்பிட்டீங்களா’ என்று அக்கறையுடன் கூடிய ஒரு விசாரிப்புதான். ‘உங்க அம்மா போன் பண்ணவே இல்லை’னு  மனைவி சொன்னா, ‘பள்ளிக்கூடத்துல ஆசிரியருக்கு நாமதான் போய் ‘வணக்கம்’ சொல்லணும். ஆசிரியர் வந்து நமக்கு ‘குட் மார்னிங்’ சொல்லணும்னு  எதிர்பார்த்தா அது நம்முடைய முட்டாள்தனம்’ என்று விளக்குங்கள்.

திருமணத்துக்கு முன்பு ஒரு ஆண் எப்படி இருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு அம்மா அப்பாவிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டியது தலையாய  கடமை. அம்மாவிடமும் சரி, மனைவியிடமும் சரி, நடந்து முடிந்த எதிர்மறையான நிகழ்வுகளைக் கூறி எந்த இடத்திலும் ஒப்பிட்டுப் பேசக்கூடாது.

உலகத்திலேயே ஒருவருக்குத் துரோகம் நினைக்காதது அம்மா, அப்பா மட்டும்தான் என்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது. உங்களை நம்பி வரும் மனைவியையும்  ஒருபோதும் உதாசீனம் செய்யாதீர்கள்” என்ற ஆலோசனையுடன் நிறைவு செய்தார் டாக்டர் ஈஸ்வரன். 

%d bloggers like this: