தேமுதிகவில் என்ன நடக்கிறது? – ஏன் இந்த இழுபறி?

தேமுதிக தற்போது யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதே தமிழக அரசியலில் பலரும் எதிர்பார்க்கும் விஷயமாக மாறியுள்ளது.

2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி வைத்து விஜயகாந்த் தேர்தலை சந்தித்தார். ஆனால், அவரும் தோற்றதோடு, மக்கள்

நலக்கூட்டணியும் மண்ணைக் கவ்வியது. அப்போதே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அந்த தேர்தலுக்குபின் தீவிர அரசியலில் முகம் காட்டவில்லை. சமீபத்தில் கூட அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்று திரும்பியுள்ளார். அங்கு அவருக்கு சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 3 வருடங்களுக்கு பின் அனைவரின் பார்வையும் தேமுதிக பக்கம் திரும்பியுள்ளது. தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே முயன்று வருகிறது. ஆனால், பாமகவிற்கு கொடுக்கப்பட்டதற்கு நிகராக தேமுதிகவிற்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதில் விஜயகாந்த் கறாராக இருப்பதால் அதிமுக கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது.

அதேபோல், சமீபத்தில் விஜயகாந்தை ஸ்டாலின் வீட்டில் வந்து சந்தித்து சென்ற பின் திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான பேச்சுவார்த்தைளும் நடந்து கொண்டிருக்கிறது. இன்று காலை வந்த தகவல் படி திமுகவுடன் ஏறக்குறைய பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், 3 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட்டும் கொடுப்பதாக திமுக வாக்குறுதி அளித்துவிட்டதாக தெரிகிறது. ஆனால், 4 தொகுதிகள் வேண்டும் என தேமுதிக அடம்பிடித்து வருவதாக செய்திகள் வெளியாகின.

கூட்டணி பேச்சுவார்த்தையில் விஜயகாந்த் எப்போதும் இப்படித்தான். 2011 மற்றும் 2016ம் ஆண்டு தேர்தல்களிலும் விஜயகாந்த் இப்படித்தான் கட்சிகளை கதறவிட்டார். பல நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் விரைவில் ஒரு முடிவுக்கு வரமாட்டார். செய்திதாள்கள், ஊடகங்கள் என அனைத்தும் தேமுதிக என்ன முடிவெடுக்கும் என காக்க வைப்பதை அவர் வழக்கமாகவே கொண்டுள்ளார்.

விஜயகாந்த் உடல்நலக்குறைவால் தொய்வு அடைந்திருந்த தேமுதிக மாவட்ட செயலாளர்கள், ஸ்டாலின் வருகைக்கு பின் சென்னை வந்துவிட்டனர். அதிமுக – பாஜக கூட்டணி மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது. எனவே, திமுகவுடன் இணைவதே சரியான முடிவு. பாராளுமன்றத்தில் தேமுதிக நுழைய இது சரியான வாய்ப்பு. இதை விட்டு விடக்கூடாது என விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷிடம் அவர்கள் கதறி வருகிறார்கள். ஆனாலும், ஒரு தொகுதி அதிகமாக வேண்டும் என திமுவிடம் தேமுதிக வாதாடி வருகிறது.

அதேபோல், தேமுதிக வந்தால் மகிழ்ச்சி. இல்லையேல் கவலை இல்லை என்கிற நிலைக்கும் அதிமுக வந்துவிட்டது. இது ஜெயக்குமாரின் பேட்டியில் காணமுடிகிறது. ஆனாலும், திமுக கூட்டணிக்கு தேமுதிக சென்றுவிடக்கூடாது என கருதும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

மறுபுறம் ‘உங்களுக்கு ஓட்டு வங்கியே கிடையாது. உங்களுக்கு அங்கீகாரம் கொடுத்ததே அதிமுகதான். ஒரு சின்னப்பயனை (விஜய பிரபாகரன்) வைத்து எங்கள் மீது சேற்றை வீசாதீர்கள் என தேமுதிகவை கடுமையாக விமர்சிக்க தொடங்கி விட்டார் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

விஜயகாந்தை சந்திக்க வந்த போது, வாருங்கள் சேர்ந்து செயல்படுவோம் என ஸ்டாலின் கூறினாராம். எனவே, எப்படியும், கடந்த சட்டமன்ற தேர்தலில் செய்த தவறை மீண்டும் செய்து விடக்கூடாது என ஸ்டாலின் கருதுகிறார். எனவே, எப்போது வேண்டுமானாலும் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்த செய்தி வெளியாகலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

%d bloggers like this: