கனிமொழி சீட் உங்களுக்கு!” – கேப்டனுக்கு ஸ்டாலின் கேரண்டி

ங்குனி தொடங்கும் முன்னரே அனல்வீச ஆரம்பித்துவிட்டதே” என்றபடிச் சிறகுகளை விசிறிக்கொண்டே வந்தார் கழுகார். “தேர்தல் அனல் அதைவிட அதிகம் இல்லையா…” என்றபடிக் கரும்பு ஜூஸை பருகக் கொடுத்துவிட்டு, நேராக செய்திக்குள் புகுந்தோம்.
“கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டிவிட்டன போலவே?”
“பல மாதங்களாகப் பெரிய அளவில் பேசப்படாமல் இருந்த தே.மு.தி.க., இந்த தேர்தலில் மீண்டும்  துருப்புசீட்டாக மாறியிருக்கிறது. அந்தக் கட்சி எப்படியும் அ.தி.மு.க கூட்டணிக்குள் வந்துவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், இந்தப் புத்தகம் அச்சில் ஏறும்வரை விஜயகாந்த் தரப்பில் எந்த முடிவையும் எடுக்கவில்லை.”

 

“எல்லாம் சரி, தே.மு.தி.க-வின் நிலைப்பாடு என்னதானாம்?”
“ ‘மதில் மேல் பூனை’ நிலை என்கிறார்கள். விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் அவரால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லையாம். பிரேமலதா, விஜய் பிரபாகரன், சுதீஷ் இந்த மூவருக்குள் கருத்து ஒற்றுமை ஏற்படாதவரை, கூட்டணி குறித்த அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இல்லை. ஆனால், விஜயகாந்த் – ஸ்டாலின் சந்திப்புக்குப் பிறகு, ‘விஜயகாந்த் விரைவில் அறிவாலயம் பக்கம் தாவலாம்’ என்கிற பேச்சுகள் வேகம் எடுத்துள்ளன.”

“ஸ்டாலின் – விஜயகாந்த் சந்திப்புப் பின்னணி என்னவாம்?”
“உடல் நலம் விசாரிக்க என்று கூறப்பட்டாலும், நடந்த கதையே வேறு. ஸ்டாலின் – விஜயகாந்த் சந்திப்புக்கு முதல்நாள், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், ரஜினிகாந்த் ஆகியோர் தனித்தனியாக விஜயகாந்த்தைச் சந்தித்தார்கள். அந்தச் சந்திப்பில் திருநாவுக்கரசர், ‘தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிகளில் ஒன்றுடன் உங்கள் கூட்டணியை உறுதிசெய்யுங்கள். இரண்டு கட்சிகளும் வேண்டாம் என்றால், தினகரன் பக்கம் செல்லுங்கள். காலதாமதம் செய்துகொண்டே இருந்தால் 2011-ம் ஆண்டு பா.ம.க தனித்துவிடப்பட்டது போன்ற நிலைமை ஏற்பட்டுவிடும். அதேசமயம், நீங்கள் தி.மு.க அணிக்கு வந்தால், அடுத்த பத்து ஆண்டுகள் உங்கள் கட்சி உயிரோட்டமாக இருக்க வாய்ப்பு உண்டு’ என்று விஜயகாந்த் குடும்பத்தினரிடம் பக்குவமாக எடுத்துச்சொன்னாராம்.”
“ஓகோ!”
“அந்தச் சந்திப்பை முடித்துவிட்டு காரில் கிளம்பியவுடனே, ஸ்டாலினுக்கு போன்செய்துள்ளார் திருநாவுக்கரசர். ‘விஜயகாந்த் எந்த முடிவும் எடுக்காமல் திறந்த மனதுடன் உள்ளார். அவரை நீங்கள் சந்தித்தால் நமது அணிக்கு வந்துவிடுவார்’ என்று சொல்லியுள்ளார். அதற்குப் பிறகே இந்தச் சந்திப்பு நடந்தது.”
“இருவரும் என்ன பேசினார்களாம்?”
“ஸ்டாலின் தரப்பிலிருந்து நேரடியாக, ‘உங்கள் கோரிக்கை என்ன?’ என்று கேட்கப்பட்டுள்ளது. உடனே, ‘ஆறு ப்ளஸ் ஒரு ராஜ்யசபா’ என்று பதில் வந்துள்ளது. ஸ்டாலின் தரப்போ, ‘மூன்று சீட் தர முடியும். அதேநேரம் தேர்தல் செலவுகளை வேறு வழிகளில் ஏற்பாடு செய்துகொடுப்போம்’ என்று சொல்லப்பட்டதாம். பதிலுக்கு விஜயகாந்த் தரப்பில், ‘ராஜ்யசபா அவசியம் வேண்டும். எங்கள் குடும்பத்தில் ஒருவர் ராஜ்யசபாவுக்குத் தேர்வுசெய்யப்பட்டால்தான் எதிர்காலத்தில் லாபி செய்ய முடியும்’ என்று வெளிப்படையாகவே ஸ்டாலினிடம் கேட்கப்பட்டதாம். சில நொடிகள் யோசித்த ஸ்டாலின், ‘கனிமொழியின் ராஜ்யசபா சீட்டை உங்களுக்கு ஒதுக்குகிறோம்’ என்று கேரண்டி கொடுத்ததுடன், ‘கடந்த 97-ம் ஆண்டு மாநிலக் கட்சிகளின் தயவில்தான் பிரதமர் ஐ.கே.குஜ்ராலின் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சி நடந்தது. மீண்டும் இப்போது அப்படி ஒரு நிலை ஏற்படவிருக்கிறது. அப்போது தேசிய அளவில் தி.மு.க முக்கியத்துவம் பெறும். உங்களுக்குத் தேவையான அனைத்தும் செய்துத் தரப்படும்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.
“கனிமொழி தூத்துக்குடியில் நிற்பது உறுதிதானே?’’
“உறுதிதான் என்கிறார்கள். வரும் ஜூலை மாதத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த ஆறு ராஜ்யசபா எம்.பி-க்களின் பதவிக் காலம் முடிவடைகிறது. கனிமொழியின் எம்.பி சீட்டும் அதில் அடக்கம். அந்த சீட்டைத்தான் தே.மு.தி.க-வுக்கு கொடுக்க முடிவு செய்திருக்கிறதாம், தி.மு.க. இதன் பிறகே தி.மு.க பக்கம் செல்வது குறித்து விஜயகாந்த் தரப்புத் தீவிரமாக யோசித்துவருகிறது. பிரேமலதாவுக்கும் விஜய்பிரபாகருக்குமே தி.மு.க கூட்டணிக்குச் செல்வதில்தான் விருப்பமாம். அநேகமாக டீல் ‘மூன்று ப்ளஸ் ஒரு ராஜ்யசபா’ என்பதிலிருந்து ‘நான்கு ப்ளஸ் ஒரு ராஜ்யசபா’ என்றும் முடிய வாய்ப்பு இருக்கிறது. இந்தத் தகவல் அ.தி.மு.க தலைமைக்கு எட்டிய பிறகுதான், அமைச்சர் ஜெயக்குமார், ‘தே.மு.தி.க கூட்டணிக்கு வராவிட்டால் கவலை இல்லை” என்று வாய்திறந்திருக்கிறார்.”
“தி.மு.க கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் நிலை?”
“தி.மு.க தனது தொகுதிகளைத் தியாகம் செய்யும் நிலைதான் ஏற்படும். ‘கடந்த தேர்தலில் தே.மு.தி.க இல்லாமல் போனதால் ஆட்சியைப் பறிகொடுத்தது போன்று இனி நடக்கக் கூடாது’ என்று ஸ்டாலின் கணக்குப்போடுகிறார். கூட்டணியில் ஏற்கெனவே காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு முடிந்துவிட்டது. ம.தி.மு.க., வி.சி.க., இடதுசாரி கட்சிகள் தொடர் பேச்சுவார்த்தையில் இருக்கிறார்கள். வி.சி.க தரப்பில் காஞ்சிபுரம், விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளைக் குறிப்பிட்டு, அதில் இரண்டைக் கேட்டுள்ளார்கள். ம.தி.மு.க தரப்பில் ஐந்து தொகுதிகளைக் கொடுத்து மூன்றைக் கேட்டுள்ளார்கள். மார்க்சிஸ்ட், சி.பி.ஐ இரண்டும் தலா இரண்டு தொகுதிகளை எதிர்பார்க்கின்றன. தி.மு.க தரப்பில் வி.சி.க-வுக்கு ஒன்று, ம.தி.மு.க-வுக்கு இரண்டு, இடதுசாரிகளுக்கு தலா ஒன்று என்கிற கணக்கில் இருக்கிறார்கள்.”
“ம்ம்ம்…”
“மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லாவிடம் உதயசூரியன் சின்னத்தில் நிற்கும்படி தி.மு.க தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதற்கு அவர் இசைவு தெரிவிக்காததால், கூட்டணிப் பேச்சுவார்த்தை இழுபறி ஆகியிருக்கிறது.’’
“தினகரன் பக்கம் யாரெல்லாம் செல்லும் வாய்ப்புள்ளது?”
“புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமிக்கு அ.தி.மு.க தரப்புமீது சில வருத்தங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த இதழ் அச்சுக்குப் போகும் முன்பு திங்கள் கிழமை மாலை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி,  தனித்துப் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கவில்லை என்றும், கூட்டணி குறித்து எந்தக் கட்சியுடனும் பேசவில்லை என்றும் கூறியிருக்கிறார். எஸ்.டி.பி.ஐ கட்சி தினகரன் அணியில் இணைந்துள்ளது. அந்தக் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.ஜே.கே கட்சி கமலுடனோ, தினகரன் பக்கமோ செல்ல வாய்ப்புண்டு.”

“தி.மு.க தலைமை மீது தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வருத்தத்தில் இருக்கிறார்களாமே?”
“ஆமாம். கடந்த 20-ம் தேதி தி.மு.க – காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அறிவிப்பு நிகழ்ச்சி அறிவாலயத்தில் நடந்தது அல்லவா… அந்த நிகழ்ச்சிக்கு முன்பு தி.மு.க தரப்பிலிருந்து, ‘ஒப்பந்தத்தில் கையெழுத்திட முன்று பேருக்குமேல் வரவேண்டாம்’ என்று சொல்லப்பட்டதாம். அந்த நேரம் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்கள் சஞ்சய் தத், முகுல் வாஸ்னிக் ஆகியோருடன் பத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் அறிவாலயம் புறப்படத் தயாராக இருந்தார்களாம். இந்தத் தகவல் வந்ததும், திருநாவுக்கரசர் டென்ஷனாகி ‘எங்களை அறிவாலயத்துக்கு வெளியே நிற்கச் சொல்கிறீர்களா?” என்று கேட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டாராம். இளங்கோவனும் அறிவாலயம் வர மறுத்துவிட்டாராம்.”
“அப்படியா?”
“அதன்பிறகு முகுல்வாஸ்னிக், வேணுகோபால், கே.எஸ்.அழகிரி ஆகியோர் கிளம்பியுள்ளார்கள். கே.ஆர்.ராமசாமி, ‘நான் சட்டமன்றக் கட்சித் தலைவர்… எனக்கு அனுமதி இல்லையா?’ என்று சத்தம் போட்டபிறகு அழகிரி, தி.மு.க தரப்பில் பேசி ராமசாமி வருதற்கு அனுமதி வாங்கியுள்ளார். இந்த நால்வருடன் அறிவாலயம் சென்ற குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, தங்கபாலு ஆகிய மூவரும் ஸ்டாலின் அறைக்கு வெளியே அமர வைக்கப்பட்டுவிட்டார்கள். இதுதான் அவர்களின் கோபத்துக்குக் காரணமாம்.”
“அ.தி.மு.க அணியில் என்ன நடக்கிறது?”
“பி.ஜே.பி தரப்பு, ‘எப்படியும் தே.மு.தி.க-வைக் கொண்டுவந்துவிடுங்கள்’ என்று அ.தி.மு.க தலைமையிடம் சொல்லியிருக்கிறதாம். ஆனால், ‘தே.மு.தி.க நமக்குப் பிடிகொடுக்கவில்லை’ என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்கள். இப்போதைய நிலையில், பா.ம.க., பி.ஜே.பி-யைத் தவிர வேறு எந்தக் கட்சியும் அ.தி.மு.க அணிக்குள் வரவில்லை. ஆனாலும், அந்த அணி தெம்பாகவே இருக்கிறதாம்.”
“எப்படி?”
“கரன்சிகளைக் களத்தில் இறக்கி, ஒரு ரவுண்டு வந்துவிடலாம் என்று கணக்குப்போடுகிறது. வேட்பாளர் பட்டியல்வரை பணிகளை ஆரம்பித்துவிட்டார்களாம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு 60 சதவிகிதம்; துணை முதல்வர் பன்னீர்செல்வம் தரப்புக்கு 40 சதவிகிதம் என்று கோட்டா சிஸ்டத்தில் வேட்பாளர்களைக் களமிறக்க முடிவு செய்துள்ளார்களாம். எடப்பாடி தரப்பில் சேலம் இளங்கோவன், தளவாய் சுந்தரம் ஆகியோரும், பன்னீர்செல்வம் தரப்பில் அவரின் மகன் ரவீந்திரநாத் குமாரும் வேட்பாளர் பரிசீலனையில் ஈடுபட்டுவருகின்றனர்.” என்ற கழுகார் விருட்டென பறந்தார்!

%d bloggers like this: