திமுக கூட்டணியில் தேமுதிக! திடீர் திருப்பம்!

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் இணைவதற்கு, விஜயகாந்த் தரப்பில் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சென்னை வந்த விஜயகாந்தை, சென்னை விமான நிலையத்தில் 12 மணி நேரம் ஓய்வெடுப்பதற்கு, சிறப்பு அனுமதியை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெற்றுத் தந்தார். 

அப்போதிலிருந்தே அவரை தமது கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக தரப்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

சென்னைக்கு வந்த பாஜக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், விஜயகாந்தின் இல்லத்திற்கே வந்து, நலம் விசாரித்தார். அதிமுகவுடன் மறைமுக பேச்சு வார்த்தையும் சுதீஷ் நடத்தி வந்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட பலரும் விஜயகாந்த் தங்கள் கூட்டணியில் இணைவார் என்று வெளிப்படையாக அறிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் திருநாவுக்கரசர், மு.க.ஸ்டாலின் ஆகியோரும் விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்து, அரசியல் சூட்டை ஏற்படுத்தினர்.

இந் நிலையில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு இணையாக தொகுதிகள் கேட்டதாலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் தங்கள் கட்சிக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையாலும், பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந் நிலையில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்த தொடங்கிய திமுக தரப்பு, தங்கள் அணிக்கு தேமுதிக வர வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு தொகுதியை முடிவு செய்யலாம் என்று தோழமைக் கட்சியினரிடம் வெளிப்படையாக சொன்னார்கள். அவரும் தங்கள் அணிக்கு வந்தால், அணி வலுவடையும் என்று கூட்டணிக் கட்சித் தலைவர்களை சமாதானப் படுத்தினர்,

இந் நிலையில் அதிமுக தலைவர்கள், பாமக தலைவர்கள் என யாரும் விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரிக்காதது, விஜயகாந்த் குடும்பத்தினருக்கு மனம் வருத்தம் அளித்த நிலையில், திமுக தரப்பில் ஸ்டாலினே வீட்டுக்கு வந்து நலம் விசாரித்தது, சற்று ஆறுதலைக் கொடுத்ததாம். 

மேலும், திமுக கூட்டணியில் எதிர்பார்க்கும் தொகுதிகளும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும்  கொடுப்பதாக தகவல் கிடைத்துள்ளது என தேமுதிக தரப்பில் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் இன்று 3 மணி நேரம் ஆலோசனை செய்த சுதீஷ், திமுக கூட்டணியில் இணைய உள்ள தகவல்கள் குறித்து சற்று விளக்கமாக எடுத்துக் கூறினதாக தகவல்,. ஆக, அண்ணா அறிவாலயத்தில் விஜயகாந்தை வரவேற்க தயாராகி வருகின்றனர் என்பதே இப்போதைய நிலவரம்.

%d bloggers like this: