பா.ம.க வரவைக் கெடுத்தது அந்த வாரிசுதான்!’ – துரைமுருகன் பேச்சால் அதிர்ந்த அறிவாலயம்

யாரிடமும் கலந்து பேசாமல் தனிப்பட்ட முறையில் சென்றதுதான் தோல்விக்குக் காரணம்’ என வறுத்தெடுத்துவிட்டார் துரைமுருகன்.

அ.தி.மு.க கூட்டணிக்குள் பா.ம.க வந்துவிட்டாலும் தி.மு.க-வுக்குள் இன்னும் புயல் வீசிக்கொண்டிருப்பதாகச் சொல்கின்றனர் அண்ணா அறிவாலய நிர்வாகிகள். `பா.ம.க-விடம் பேசுவதற்கு நானும் ஜெகத்ரட்சகனும் சென்றிருந்தால் உடன்பாடு ஏற்பட்டிருக்கும்’ என ஆதங்கத்தோடு பேசியிருக்கிறார் துரைமுருகன்.

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளுடன் ஒரே நேரத்தில் கூட்டணிப் பேச்சு நடத்திக்கொண்டிருந்தது பா.ம.க. இறுதியில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்குள் மாம்பழம் வந்து விழுந்துவிட்டது. 7 ப்ளஸ் 1 என்ற கணக்கில் கூட்டணி ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது. `இது மெகா கூட்டணி, வெற்றிக் கூட்டணி’ என அறிவித்தார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். அ.தி.மு.க அணிக்குள் பா.ம.க வந்து சேர்ந்தது தொடர்பாக, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனமும் கிளம்பியது. குறிப்பாக, முந்தைய காலங்களில் அ.தி.மு.க-வை எதிர்த்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கைகளையெல்லாம் தொகுத்து விமர்சனம் செய்யும் வேலைகளும் நடந்தன. இவற்றுக்கெல்லாம் பதில் கொடுக்கும்விதமாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் அன்புமணி ராமதாஸ். அப்போது பேசியவர், “தி.மு.க உட்பட அனைத்துக் கட்சிகளும் எங்களுடன் கூட்டணி பேசின. இதுதொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரத்தை மருத்துவர் ராமதாஸிடம் கொடுத்திருந்தோம். கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதன் அடிப்படையில் அ.தி.மு.க-வுடன் கூட்டணிக்குச் சம்மதம் தெரிவித்தோம்’’ என்றார். இதன் பின்னர், செய்தியாளர்களின் தொடர் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் கூட்டத்தில் இருந்து வெளியேறினார் அன்புமணி. 

அதேநேரம், அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இணைந்ததை தி.மு.க-வில் உள்ள சில சீனியர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறுதி வரையில், `தி.மு.க அணிக்குள் ராமதாஸ் வந்துவிடுவார்’ என எதிர்பார்த்தார் துரைமுருகன். அவரது நம்பிக்கை பொய்த்துப்போன கோபத்தை ஆதரவாளர்களிடம் காட்டி வருகிறார் என விவரித்த தி.மு.க நிர்வாகிகள் சிலர், “மக்களவைத் தேர்தலில் பா.ம.க நம்மோடு இருக்க வேண்டும் எனத் தொடக்கத்தில் இருந்தே துரைமுருகனும் ஜெகத்ரட்சகனும் வலியுறுத்தி வந்தனர். ஆனால், `பா.ம.க, தே.மு.தி.க-வை அழைப்பது எங்கள் சுயமரியாதைக்கே இழுக்கு’ எனக் கூறி, அறிவாலயக் கதவைச் சாத்திவிட்டார் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா. இருப்பினும், `தோழமைக் கட்சிகளுடன் கூட்டணி ஒப்பந்தம் ஏற்படவில்லை. தாலி கட்டினால்தான் திருமண பந்தம்’  என்றெல்லாம் புதுப்புது விளக்கம் கொடுத்தார் துரைமுருகன்.

அவரது கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் எதிர்ப்பையும் பதிவு செய்தது. இது குறித்து அறிவாலய நிர்வாகி ஒருவர் பேசுகையில், “பா.ம.க-வை சேர்ப்பது தொடர்பாக ஸ்டாலினிடம் பேசிய துரைமுருகன், ‘ராமதாஸுக்கு 5.5 சதவிகிதம் வாக்கு வங்கி இருக்கிறது. அவர் நம்மோடு இருந்தால் வடமாவட்டங்களில் நல்ல வெற்றியைப் பெற்றுவிடலாம்” எனக் கூறினார். அவரது இந்தக் கருத்துக்கு ஸ்டாலின் எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை. அதேநேரம், ஸ்டாலின் குடும்பத்தில் உள்ளவர்களும் அன்புமணி பக்கம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தனர். அன்புமணியோடு நள்ளிரவு சந்திப்புகளையும் நடத்திக்கொண்டிருந்தனர். ஆனாலும், சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. ஒரு கட்டத்தில், தி.மு.க தரப்பிடமிருந்து தெளிவான பதில் வராததால், எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றுவிட்டார் ராமதாஸ். இதனால் கடும் கோபத்தில் இருக்கிறார் துரைமுருகன்.

இதுதொடர்பாக, ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய வாரிசு ஒருவரைக் கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார். ‘இந்தக் கூட்டணி அமையாமல் போனதற்குக் காரணம் அந்த நபர்தான். நானும் ஜெகத்தும் தைலாபுரம் சென்றிருந்தால் கூட்டணிப் பேச்சுவார்த்தையை நல்லபடியாக முடித்திருப்போம். இவர் சென்று அனைத்தையும் கெடுத்துவிட்டார். யாரிடமும் கலந்து பேசாமல் தனிப்பட்ட முறையில் சென்றதுதான் தோல்விக்குக் காரணம்’ என வறுத்தெடுத்துவிட்டார். துரைமுருகனின் வார்த்தைகளைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியில் இருக்கிறார் ஸ்டாலின் குடும்ப வாரிசு. தேர்தல் நெருக்கத்தில் இந்தப் புகைச்சல் வெடிக்கலாம்’’ என்றார் இயல்பாக!

%d bloggers like this: