வட மாவட்டங்களில் யாருக்கு வெற்றி ?

.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ. க.வும் பா.ம.க.வும் அதிகாரப்பூர்வமாக இணைந்த பின், மெகா கூட்டணி என்ற தோற்றம் உருவாகியுள்ளது. மாநிலத்தை ஆளும் எடப்பாடி மீதும் மத்தியில் ஆளும் மோடி மீதும் அதிருப்தி அலை பலமாக அடித்துக் கொண்டிருந்தபோது, மெகா கூட்டணி எப்படி வெற்றி இலக்கை எட்டப்போகிறது என்ற கேள்வியும் கட்சி யினரிடம் உள்ளது. ஆனாலும் உள்ளுக்குள் ஒருவித நம்பிக்கையுடனேயே இருக் கிறார்கள்.
“”ஓட்டுக்கு நோட்டு என்பது தவிர்க்க முடியாத தாகிவிட்டது. அதுவும் இரண்டு ஆளுங்கட்சிகளுடன் கூட்டணி என்பதால் பணப் புழக்கத்துக்குப் பஞ்சமே இருக்காது” என்கிறார்கள் வட மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் பலரும்.

 

பணத்துக்கு அடுத்த படியாக அவர்கள் நம்புவது, தி.மு.க. கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தை கட்சிக்கு எதிரான மனநிலை கொண்ட வாக்காளர்களை. அக்கட்சியைச் சார்ந்த ஒருசிலர் மற்ற சமூகத்து ஆண்கள்-பெண்கள் குறித்து பேசியதன் பழைய ஆடியோக்களை சோஷியல் மீடியாக்களில் ஒரு ரவுண்டு விட திட்டமிட்டிருப்பதை நம்மிடம் திட்டவட்டமாகச் சொல்கிறார்கள் பா.ம.க. புள்ளி கள்.
இந்தத் திட்டத்திற்கு லேட்டஸ்ட் அதிரடியாக கிளம்பியிருக்கிறார்கள் பா.ம.க. வின் பில்லராக இருந்த காடு வெட்டி குருவின் ஆதரவாளர்கள். குரு மறைந்த பின், அவரது குடும்பத்திற்குள் ஏற்பட்ட புகைச்சலை ராமதாஸ் கண்டுகொள்ளாததால், ஏகக்கடுப்பில் இருக்கும் குருவின் ஆதரவாளர்கள், ராமதாசையும் அன்பு மணியையும் ரொம்பவே காட்டமாக அர்ச்சித்து வீடியோவாக வெளியிட்டு வருகிறார்கள். தேர்தல் நெருக்கத்தில் இந்த அர்ச்சனையின் வால்யூமைக் கூட்டும் முயற்சியில் தி.மு.க.வும் இறங்கும். “இதேபோன்ற ஏகப்பட்ட “குரு’க்கள் வன்னிய இளைஞர்கள் மத்தியில் இருக்கிறார்கள் என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்’’என்கிறார் வட மாவட்ட தி.மு.க. புள்ளி ஒருவர்.

இந்தத் திட்டத்துடன் இன்னும் பல மெகாதிட்டங்களும் கைவசம் இருப்பதால், பா.ம.க. போட்டியிடும் 7 தொகுதிகளிலும் டஃப் ஃபைட் கொடுப்பதற்காக, தனது கட்சியில் இருக்கும் வன்னியர்களை களம்இறக்கும் முனைப்பில் இருக்கிறது தி.மு.க. “”எல்லாத் திட்டங்களும் இருந் தாலும், அவற்றுக்கெல்லாம் மீறி முக்கியமாக இருப்பது கரன்சி தான். அதையும் தாராளமாக இறக்க முடிவு செய்திருக்கிறது எங்கள் தலைமை. அதையும்விட முக்கியம் பா.ம.க.வின் இமேஜ் டேமேஜாகி ரொம்ப வருஷமாச்சு. ஆளும்கட்சிக் கூட்டணி என்பதால், பா.ம.க.வுக்கு அதிகாரவர்க்க சப்போர்ட் இருப்பதால், போட்டி கடுமையாக இருக்குமே தவிர, வட மாவட்ட தொகுதிகளில் எங்களின் வெற்றியைப் பாதிக்காது” என்கிறார்கள் தி.மு.க. நிர்வாகிகள்.

2014 எம்.பி. தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றிருந்தபோது, அன்புமணி வெற்றி பெற்றார் என்றால் அதற்கு கடுமையான உழைப்பும் பணமும் தேவையாக இருந்தது. அந்த இரண்டும் இந்தமுறை இருந்தாலும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணியே இல்லைன்னு எங்க ஐயா சொல்லிக்கிட்டிருந்ததால தி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் கடுமையா எதிர்த்துக்கிட்டே வந்தோம். இப்ப அ.தி.மு.க.வுடன் சேர்ந்து வேலை பாருங்கன்னு சொன்னா எப்படி ஏத்துக்க முடியும்?
ரெண்டாவது இந்தக் கூட்டணியில் தே.மு.தி.க. உறுதியானா எங்கபாடு திண்டாட்டம் தான். அந்தக் கட்சிக்கு ஆதரவளித்து வந்த எங்க சமூக இளைஞர்களின் மனதை படிப் படியாக கரைத்து, எங்க பக்கம் கொண்டு வந்தோம். அந்த இளைஞர்களெல்லாம் இப்ப தே.மு.தி.க.வுக்கு தேர்தல் வேலை செய்வார்களா என்பது டவுட்டு தான் என கள நிலவரத்தையும் பா.ம.க.வினர் ஒத்துக்கொண்டு, அதனை சரிசெய்யும் வகையில் வியூகம் வகுக்கிறார்கள்.

தி.மு.க., பா.ம.க.வினரின் மன ஓட்டம் இப்படி இருக்க, அரசியல் பார்வையாளர்களின் கணக்கோ வேறுவிதமாக இருக்கிறது. “மக்கள் மனநிலைக்கு எதிரான எந்தக் கூட்டணியும் தோல்வியைத்தான் சந்திக்கும். 2004 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் வெற்றிபெற்று மத்திய அமைச்சரவையிலும் பா.ம.க. இருந்தது. ஆனால் 2009 தேர்தலில் அ.தி.மு.க.வுடன் இணைந்து தோல்வியைச் சந்தித்தது. அதேபோல் 2011-ல் அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கும் என எதிர்பார்த்த நிலையில்… தி.மு.க. கூட்டணிக்குத் தாவியபோதும் தோல்விதான். மக்களின் எதிர்ப்பு மனநிலை யாருக்கு எதிராக இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.

அதேநேரத்தில் 2014 பா.ஜ.க. கூட்டணியில் நின்று ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் கணிசமான வாக்குகளை தக்க வைத்துக் கொண்டது பா.ம.க. அதே நிலைமை தான் 2016 தேர்த லிலும். அந்த ஓட்டுகளுடன் தனது கட்சி ஓட்டுகளும் சேர்ந்தால் எளிதான வெற்றி என நினைக்கிறது அ.தி.மு.க. ஆனால் கணக்கு வேற மாதிரி இருக்கிறது. ஒரு சாதிக் கட்சி என்ற அடிப்படையில் தனித்துப் போட்டி போடும்போது, அந்த சாதியினரின் ஓட்டுகள் சிதறாமல் அப்படியே விழும். அதுவே இன்னொரு கட்சியுடன் அந்தக் கட்சி இணைந்து போட்டியிடும் போது, பொதுவானவர்களின் ஓட்டுகளை வாங்குவது கஷ்டம். இன்னும் சிம்பிளா சொன்னா, மக்களின் மன நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி வைக்கும் போது 1+1=3 என மாறும். அதற்கு எதிரான கூட்டணி என்றால் 1+1=1தான்.
இந்தத் தேர்தல் கணக்கில் யார் 3, யார் 1 என்பதுதான் வட மாவட்ட போட்டா போட்டி.

%d bloggers like this: