Advertisements

சொந்த வீடு’ கனவு நிஜமாகுமா?

சொந்த வீட்டில் வசிக்கவேண்டும் என்ற விருப்பம் எல்லோருக்கும் ஏற்படுவது இயல்புதான். ‘எலி வளையானாலும் தனி வளை’ என்று சொல்வதுண்டு. தனக்கென்று சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்றுதான் எல்லோரும் ஆசைப்படுவார்கள். ஆனால், ஆசை இருந்தால் மட்டும் போதாது. அவருடைய ஜாதகத்தில் சொந்த வீட்டுக்கான யோகம் அமையப் பெற்றிருக்கவேண்டும்.

ஒருவருடைய ஜாதகத்தில் சொந்த வீட்டைக் குறிப்பிடும் இடம் சுகஸ்தானம் எனப்படும் நான்காவது இடமாகும். இந்த நான்காவது இடத்துக்கு உரிய கிரகம், செவ்வாய், சுக்கிரன் ஆகியோரின் அமைப்பைப் பொறுத்தே ஒருவருக்குச் சொந்த வீடு அமையுமா இல்லையா என்பதை நிர்ணயிக்க முடியும்.

மனைக்கு அதிபதி செவ்வாய். அந்த மனையில் கட்டப்படும் வீட்டுக்கு அதிபதி சுக்கிரன். நான்காம் இடம் என்பது வசிக்கும் வீட்டைக் குறிப்பதாகும்.

நான்காம் இடம், செவ்வாய், சுக்கிரன் ஆகியோர் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே  ஒருவருக்குச் சொந்த வீடு அமையும். செவ்வாய், சுக்கிரன், நான்காம் வீட்டுக்கு உரிய கிரகம் ஆகியோர் பகை நீசம் பெற்றிருந்தாலும், மறைவு ஸ்தானங்களில் இருந்தாலும்… ஜாதகர் என்னதான் செல்வந்தராக இருந்தாலும், சொந்த வீடு என்பது அவருக்குக் கனவாகவே இருக்கும். அதேபோல் ஒருவருக்குச் சொந்த வீடு இருந்தாலும், அதில் வசிக்க முடியாத நிலையும் ஏற்படும். மேற்சொன்ன நிலைப்படி, ஜாதகத்தில் கிரக அமைப்புகள் பலமற்று திகழ்ந்தால், எந்தக் கிரகம் பலமற்று திகழ்கிறதோ அதற்கேற்ப பரிகார வழிபாடுகளைச் செய்து நிவர்த்தி பெறலாம்.

கிரகங்களும் பரிகாரங்களும்

சூரியன் – சூரியனார்கோவிலுக்குச் சென்று சூரியபகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். தொடர்ந்து ஆறு ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

சந்திரன்: திருப்பதிக்கு 11 திங்கள் கிழமைகளில் சென்று வேங்கடேச பெருமாளை வழிபடுவதன் மூலம் சந்திரனால் சொந்த வீடு அமைவதிலுள்ள தடை நீங்கி, சொந்த வீடு அமையும்.

செவ்வாய்: முருகன் ஆலயங்களில் செவ்வாய்க்கிழமைகளில் அங்காரகனுக்கு நெய் தீபம் ஏற்றி, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்யவேண்டும். தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்யவேண்டும்.

புதன்: நவகிரகங்களில் புதன் பகவானுக்கு, 14 புதன்கிழமைகளில் முதல் வாரம் மட்டும் பச்சைப் பட்டு வஸ்திரம் சாத்தி, அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். தொடர்ந்து புதன்கிழமைகளில் பச்சைப் பயறு சுண்டல் செய்து நைவேத்தியம் செய்து  பக்தர்களுக்கு விநியோகிக்கவேண்டும்.

குரு: செவ்வாய்க்கிழமையும் சஷ்டி அல்லது கிருத்திகையும் சேர்ந்து வரும் நாளில் திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலுக்குச் சென்று, செந்திலாண்டவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்வது நல்ல பலனைத் தரும். இதற்கு முன்பதிவு செய்துகொள்வது அவசியம்.

 

சுக்கிரன்: ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை கஞ்சனூருக்குச் சென்று சுக்கிர பகவானுக்கு வெண்ணிறப் பட்டு வஸ்திரம் சாத்தி, நெய்தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்வதால், சொந்த வீடு அமைவதில் உள்ள தடைகள் நீங்கும்.

சனி: ஒன்பது சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால், சொந்த வீட்டுக்கான முயற்சிகள் சாதகமாக முடியும்.

பொதுவான பரிகாரம்: சென்னை பொன்னேரிக்கு அருகிலுள்ள சிறுவாபுரி அருள்மிகு முருகன் கோயில் மற்றும் திருச்சி சமயபுரத்துக்கு அருகிலுள்ள மண்ணச்சநல்லூர் அருள்மிகு பூமிநாதர் கோயில் ஆகிய கோயில்களுக்குச் சென்று வேண்டி வழிபட்டு வந்தால் சொந்த வீடு அமைவதில் உள்ள தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

கிரகங்களுக்கான வழிபாடுகளைச் செய்வது போல், பிறந்த ராசியின் அடிப்படையிலும் உரிய பரிகாரங்களைச் செய்தால் சொந்த வீடு அமையும் யோகம் கிடைக்கும். அவ்வகையில், ராசி ரீதியாக சொந்த வீடு அமைவதற்கான பரிகார வழிபாடுகளைக் குறித்து பார்க்கலாம்.

பன்னிரு ராசிகளும் பரிகாரங்களும்!

 மேஷம்: இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய், சுக்கிரன், சந்திரன் ஆகியோரால் சொந்த வீடு அமைவதில் தடை ஏற்படக்கூடும். அவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமான் கோயில்களுக்குச் சென்று, முருகனுக்கும் அங்காரகனுக்கும் நெய்தீபம் ஏற்றி, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்யவேண்டும்.

ரிஷபம்: ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்குச் சொந்த வீடு அமைய… ஞாயிற்றுக்கிழமையன்று சூரியனார்கோவிலுக்குச் சென்று, சூரியபகவானுக்குச் செம்பருத்தி மலர்களால் அர்ச்சனை செய்து, பசுவுக்குக் கோதுமை கொடுப்பதன் மூலம் சொந்த வீடு அமையும்.

மிதுனம்: மிதுன ராசியில் பிறந்தவர்கள் புதன்கிழமைகளில் நவகிரகங்களில் புதன்பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி, நெய்தீபம் ஏற்றி, பச்சைப் பயறு சுண்டல் நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்குப் பிரசாதமாகக் கொடுக்கவேண்டும். இதன் பலனாக, சொந்த வீட்டில் வசிக்கும் யோகம் உண்டாகும்.

கடகம்: கடக ராசியில் பிறந்தவர்கள் நவகிரகங்களில் சுக்கிரபகவானுக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடுவதுடன், பசு மாட்டுக்கு ஊறவைத்த மொச்சைப் பயறை உண்ணக் கொடுக்கவேண்டும். இவ்விதம் ஆறு வெள்ளிக்கிழமைகள் செய்ய, சொந்த வீடு அமையும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள், செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி அல்லது கிருத்திகை நட்சத்திரம் சேர்ந்து வரும் நாளில் திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டால், சொந்த வீடு யோகம் அமையும்.

கன்னி: கன்னி ராசியில் பிறந்தவர்கள், வியாழக் கிழமைகளில் நவகிரகங்களில்  குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், சொந்த வீடு அமைவதில் ஏற்பட்டுள்ள தடைகள் விலகும்.

துலாம்: ராசியில் பிறந்தவர்கள் தொடர்ந்து ஏழு சனிக்கிழமைகள் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி, துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் சொந்த வீடு அமையும்.

விருச்சிகம்: இந்த ராசியில் பிறந்தவர்கள், செவ்வாய்க்கிழமையன்று நவகிரகங்களில் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, அர்ச்சனை  செய்யவேண்டும். தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்தால், சொந்த வீடு அமைவதில் உள்ள தடைகள் நீங்கும்.

தனுசு: இந்த ராசியில் பிறந்தவர்கள் ஒரு வியாழக்கிழமையன்று ஆலங்குடிக்குச் சென்று குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், சொந்த வீட்டில் வசிக்கும் யோகம் ஏற்படும்.

 மகரம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமையன்று செவ்வாய் பகவானுக்கு அபிஷேக – அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். இதன் மூலம் சொந்த வீடு அமையும்.

கும்பம்: இவர்கள் வெள்ளிக் கிழமைகளில் முருகனுக்குப் பாலபிஷேகம் செய்து வழிபடுவதுடன், செவ்வாய் பகவானுக்கு நெய் தீபம் ஏற்றவேண்டும். மூன்று வெள்ளிக்கிழமைகள் இப்படிச் செய்தால், சொந்த வீட்டில் சகல வசதிகளுடன் வசிக்கும் யோகம் ஏற்படும்.

 மீனம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் புதன்கிழமையன்று பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளுக்குத் துளசியாலும் தாயாருக்கு மஞ்சளாலும் அர்ச்சனை செய்யவேண்டும். தொடர்ந்து ஐந்து புதன்கிழமைகள் செய்து வழிபட்டால், சொந்த வீட்டுக் கனவு நிறைவேறும்.


சிறுவாபுரி முருகன் திருவருள் புரிவார்!

ருணகிரிநாதர் திருப்புகழில் சிறுவாபுரி முருகனைப் போற்றி மிக அற்புதமாகப் பாடியுள்ளார். அந்தப் பாடல்களில் ஒன்று உங்களுக்காக…

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற     அருளாலே
அந்தரியொடு உடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனும் உமையாளு     மகிழ்வாக
மண்டலமு முநிவோரும் எண்டிசையி லுளபேரு
மஞ்சினனும் அயனாரும்     எதிர்காண
மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூற
மைந்து மயிலுடன் ஆடி     வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள    வுயர்தோளா
பொங்குகடலுடன் நாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு     வடிவேலா
தண்தரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய    முருகேசா
சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு    பெருமாளே

அனுதினமும் இந்தப் பாடலைப் பாராயணம் செய்வதன் மூலம் நம் மனங்களில் குடியேறும் முருகப்பெருமான், நாம் சொந்த வீட்டில் குடியேறவும் அருள்புரிவார்.

– ‘ஜோதிடமாமணி’ கிருஷ்ணதுளசி

Advertisements
%d bloggers like this: