போர்ச்சூழல்… தள்ளிப்போகுமா தேர்தல்?

வெயிலில் வியர்த்துவந்த கழுகாருக்கு, ‘சில்’லென்று இளநீரைக் கொடுத்துவிட்டு, ‘‘போர் மேகம் சூழ்ந்திருக்கிறது. தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா?’’ என்று சூடாகக் கேள்வியைக் கேட்டோம்.
‘‘மார்ச் 4 அல்லது 5 அன்று தேர்தல் அறிவிப்பு வெளியாக வேண்டும். இப்போதைய சூழ்நிலையில், அது சந்தேகம் தான். இந்திய எல்லையில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி ஜனாதிபதி மாளிகையில் உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள். பாகிஸ்தானை ஒட்டியிருக்கும் ஐந்து மாநிலங்களில் பதற்றம் நிலவுவதால், இந்தச் சூழ்நிலையில் தேர்தலை நடத்துவது நன்றாக இருக்காது என்று உளவுத்துறையினர், மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்திருக்கிறார்களாம்’’.

 

“ஓ….’’
‘‘தேர்தல் சற்றுத் தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறது. நம் விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை, விடுதலை செய்ய ஒப்புக்கொண்டதன் மூலமாக, ‘நாங்கள் சண்டையை விரும்பவில்லை’ என்று கோடிட்டுக் காட்டியிருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். எனவே, இந்தியத் தரப்பிலும் இறங்கிப்போகவே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.   இதற்கு மேல் போர் அல்லது, தாக்குதல் நடக்க வாய்ப்பில்லை!’’
‘‘நம்ம ஊருக்கு வாரும்…இரட்டை இலை இ.பி.எஸ் –ஓ.பி.எஸ் அணிக்கே கிடைத்துவிட்டதே?’’
‘‘ஆமாம். இதில் ஓ.பி.எஸ் தரப்பைவிட இ.பி.எஸ்ஸுக்குதான் அதிக மகிழ்ச்சி. தே.மு.தி.க இன்னும் இழுத்தடிப்பதில்தான் அவருக்குக் கொஞ்சம் வருத்தம்!’’
‘‘என்னதான் சிக்கலாம்?’’
‘‘பி.ஜே.பி அணியில்  சேருவது என்று தே.மு.தி.க முதலிலேயே முடிவெடுத்திருந்தது. விஜயகாந்த் வீ்ட்டுக்கு பியூஷ் கோயல் வந்து பேசியபோது, விஜயகாந்த் தரப்பில் வைத்த டிமாண்டை ஓகே சொல்ல முடியாமல் டெல்லிக்குச் சென்றுவிட்டார் கோயல். அதன்பிறகு அமைச்சர் தங்கமணி தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. திடீரென ஸ்டாலின் வந்து விஜயகாந்த்தைப் பார்த்ததும், தி.மு.க பக்கமாகச் சாயும் முடிவுக்கு தே.மு.தி.க வந்தது. ஒரு ராஜ்யசபா சீட் தர ஒப்புக்கொண்டதுதான் இதற்கு முக்கியக் காரணம். அதன் பிறகு, சுதீஷ் மற்றும் சபரீசன் தரப்பில், சென்னையில் நட்சத்திர விடுதியில் பேச்சுவார்த்தை நடத்திவந்தார்கள். நான்கு லோக்சபா சீட், ஒரு ராஜ்யசபா சீட் தர தி.மு.க தயாராக இருந்தது. ஆனால், தே.மு.தி.க தரப்பில் ஆறு ப்ளஸ் ஒன்று,  செலவுக்கு வேண்டிய தொகை என்று பட்டியலை நீட்டியதால் அங்கேயும் சிக்கலாகிவிட்டது.’’

‘‘இப்போதைய நிலைமை?’’
‘‘தே.மு.தி.க–வைக் கூட்டணிக்குள் கொண்டு வந்தால் வடமாவட்டங்களில் வலுவாகி விடலாம் என்று தி.மு.க கருதுகிறது. மறுபுறம் பி.ஜே.பி தரப்பில், ‘தே.மு.தி.க இல்லாமல் இருப்பது, தென் மாவட்டங்களில் நாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் எங்களுக்கு வீக். எப்படியும் அந்தக் கட்சியை கூட்டணிக்குள் கொண்டுவாருங்கள்’ என்று அ.தி.மு.க தலைமைக்கு அழுத்தம் கொடுத்துவருகிறார்கள். இருபுறமும் நெருக்குவ தால், தே.மு.தி.க–வுக்கு மவுசு அதிகரித்துள்ளது. எங்கே அதிகம் கிடைக்கிறதோ, அங்கேதான் தே.மு.தி.க போகும்!’’
‘‘சீட்டு, நோட்டு இதைத்தவிர ஆளுங்கட்சியிடம் வேறு ஏதாவது எதிர்பார்க்கிறார்களா?’’
‘‘ஆமாம்! ஏற்கெனவே மேம்பாலத்துக்காக விஜயகாந்த் மண்டபம் பாதி இடிக்கப்பட்டது. இப்போது மெட்ரோ திட்டத்துக்காக மீ்ண்டும் மண்டபத்தில் கைவைக்கப்போவதாகத் தகவல் வெளியானது. அதை நிறுத்த வேண்டும் என பிரேமலதா தரப்பில் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. அதேபோல, புதுச்சேரியில் விஜயகாந்துக்கு நெருங்கிய உறவினரின் மருத்துவக் கல்லூரி ஒன்று உள்ளது. அந்த கல்லூரியில் உள்ள சிக்கலை மத்திய அரசு தீர்த்துவைக்க வேண்டும் என்று பிரேமலதா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அது நிறைவேறும் பட்சத்தில் அந்தப்பக்கமே தே.மு.தி.க தாவும். இதையெல்லாம் தெரிந்தே, ‘வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும்’ என்று ஸ்டாலின் சொல்லி விட்டாராம்.’’
‘‘தி.மு.க கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் நிலை?’’
‘‘தே.மு.தி.க வந்துவிடும் என்ற கணக்கில்தான் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை நிறுத்தி வைத்தது தி.மு.க தலைமை. தே.மு.தி.க வரவில்லை என்று தெரிந்துவிட்டால், மார்ச் முதல் வாரத்தில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முடித்து, தொகுதியை அறிவித்துவிடுவார்கள்.
ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளுக்குக் கேட்டதுபோலவே இரட்டைத் தொகுதிகள் கிடைக்கலாம். ஆனால், எந்தத் தொகுதியை ஒதுக்குவது என்பதில் பெரும் முட்டல் மோதல் நடக்கும். இப்போதே நாகர்கோவில் தொகுதிக்கு தி.மு.க–காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே மல்லுக்கட்டு தொடங்கிவிட்டது. இதேபோல பல தொகுதிகளில் பிரச்னை இருக்கிறது!’’
‘‘ஓட வேண்டிய நேரத்தில் ஓய்வுக்குப் போயிருக்கிறாரே?’’
‘‘ஸ்டாலினைச் சொல்கிறீரா. 27-ம் தேதியன்று கோவையில் நடந்த கம்யூனிஸ்ட் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு, அங்கிருந்து நேராக ஊட்டிக்குச் சென்றுவிட்டார். கருணாநிதி மறைவினால், இந்த ஆண்டு மார்ச் 1 அன்று, தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை என்று அறிவித்துவிட்டார். அதனால்தான் ஊட்டியில் ஓய்வுக்குப் போய்விட்டார். மார்ச் 2 அன்று அவர் சென்னை திரும்பிய பிறகுதான், கூட்டணிக் கட்சிகளுடன் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையும், தொகுதிப்பட்டியலும் முடிவாகும் என்கிறார்கள்.’’

‘‘பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தவிர்க்க ஊட்டியில் ஓய்வா.. பலே பலே!’’
‘‘பிறந்தநாள் கொண்டாடாவிட்டாலும், அவரது பிறந்தநாளை ஒட்டி அண்ணா அறிவாலயத்தில் நடந்த ‘உடன்பிறப்புகளின் தலைவன்’ நிகழ்ச்சியின் ‘அப்டேட்’களை ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்து கொண்டாராம். 25-ம் தேதி மாலை அந்த நிகழ்ச்சி நடைபெற்ற நேரத்தில், தூத்துக்குடியில் இருந்தவர், அன்று இரவு 11 மணிக்கு மேல் சென்னை திரும்பியதும் நேராக நிகழ்ச்சி நடைபெற்ற அரங்குக்குப் போய், அவரது புகைப்படக் கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டிருக்கிறார். அவர் புகைப்படம் முன்பு அவரே நின்று செல்ஃபியும் எடுத்துக்கொண்டாராம்.’’
‘‘அது சரி… தேர்தல் பிரிவு டி.ஜி.பி–யாக  வரப்போவது யாராம்?’’
‘‘இப்போதைக்கு ரேஸில் முன்னணியில் திரிபாதி இருக்கிறார். அவர் இப்போது, சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் டி.ஜி.பி–யாக இருக்கிறார். கடந்த வாரம் 202 எஸ்.ஐ பதவிகளுக்குத் தேர்வு முடிவுகள் வெளியாகின. பல கட்டங்களாக நடந்த தேர்வின் க்ளைமாக்ஸில் நேரடித்தேர்வு நடந்தது. அது முடிந்த ஐந்தே மணி நேரத்தில் ரிசல்ட்டை வெளியிட்டுவிட்டார், திரிபாதி. முன்கூட்டியே ரிசல்ட் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர் களைத் தெரிந்துகொண்டு, அந்த போட்டியாளர்களைத் தேடிப்போய் பணம் வசூலிக்கும் புரோக்கர்கள், ஆளுங்கட்சியினர், உயர் அதிகாரிகள் எனப் பல தரப்பிலிருந்து பிரஷர் வர வாய்ப்புகள் உண்டு. இதையெல்லாம் தவிர்க்கவே ஐந்தே மணி நேரத்தில் ரிசல்ட்டை வெளியிட்டுவிட்டார்’’
‘‘இது எப்படி சாத்தியம்?’’
‘‘ஒவ்வொரு கட்டமாக நடந்த தேர்வுகளின் முடிவுகளை கம்ப்யூட்டரில் பதிவுசெய்துகொண்டே வந்தார்களாம். கடைசியாக நடந்த நேரடித்தேர்வு மார்க்குகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்ததும், முழு ரிசல்ட்டும் ரெடியாகிவிட்டதாம். ‘பிறகென்ன…உடனே ரிசட்டை வெளியிடுங்கள்’ என்று திரிபாதி சொல்லிவிட்டாராம்.’’
‘‘பாலியல் குற்றச்சாட்டில் இருந்து ஐ.ஜி முருகனைக் காப்பாற்ற முயற்சிகள் நடப்பதாகப் பெண் எஸ்.பி உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறாரே?’’
‘‘ஆமாம்… ‘லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி பதவியில் இருந்து முருகனை மாற்ற வேண்டும். அத்துடன், தமிழக அரசு கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத ஒரு காவல்துறை அதிகாரியைக் கொண்டு இந்த விவகாரத்தைப் புலனாய்வு செய்ய வேண்டும். இந்த விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்’  என அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் பெண் எஸ்.பி.’’

‘‘எதற்காக இப்படி ஒரு கோரிக்கை?’’
‘‘இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்கப் புதிதாக நியமிக்கப்பட்ட விசாகா கமிட்டியின் தலைவர் ஸ்ரீலட்சுமி பிரசாத், நடந்ததை ஒரு விபத்தாக நினைத்து மறந்துவிடும்படி அறிவுரை சொன்னாராம். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கொடுக்கப் பட்ட ஊழல் புகார், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, சில அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை ஐ.ஜி முருகன்தான் விசாரிக்கிறார். எனவே, இவர்கள் எல்லோரும் பாலியல் புகாரிலிருந்து முருகனைக் காப்பாற்றத்தான் விரும்புவார்கள். இதையெல்லாம் சொல்லி, முருகனை உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்து மாற்றவேண்டும் என்பதில் பிடிவாதமாய் இருக்கிறார் அந்தப் பெண் அதிகாரி. வழக்கை மார்ச் 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்கள். இந்த வழக்கை பெண் காவல் அதிகாரிகள் எல்லோரும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்!’’ என்ற கழுகார், சட்டென சிறகு விரித்துப் பறந்தார்.

%d bloggers like this: