டிரைவிங், கணினி வேலை உண்டாக்கும் உடல் வலியைத் தவிர்ப்பது எப்படி ?

கை, கால் தசைகளை வலுவாக வைத்துக்கொள்ள கடினமான பொருள்களைத் தூக்கித்தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. தண்ணீர் நிரப்பப்பட்ட வாட்டர்கேனைக்கூட கையால் தூக்கிப் பயிற்சி செய்யலாம்.
போதிய ஓய்வு இல்லாமல் தொடர்ச்சியாக வேலை செய்யும்போது நம் உடலில் வலி ஏற்படும். நின்றுகொண்டு வேலை செய்பவர்களுக்கு கால் வலி, உட்கார்ந்துகொண்டு வேலை செய்பவர்களுக்கு முதுகு வலி என நாம் செய்யும் வேலைகளைப் பொருத்து அது மாறுபடும். சிலருக்கு உடல் முழுவதும்கூட வலி எடுக்கும். ஓய்வு எடுத்துக்கொண்டால் அந்த வலி குறையும். ஓய்வு எடுத்துக்கொண்ட பின்னும் வலி குறையாமல் வாட்டி வதைக்கிறது என்றால், கை, கால், கழுத்தில் தசைப் பிடிப்பு ஏற்பட்டுத் தூக்கவும் திருப்பவும் சிரமமாக இருக்கிறது என்றால் கண்டிப்பாக நாம் இயங்கும் முறைகளில் ஏதோ தவறிருக்கிறது என்று அர்த்தம். சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்வதன்மூலம் வலியிலிருந்து நாம் மீளமுடியும்.

 

அதற்கான வழிகளை எளிமையாக விளக்குகிறார் பிசியோதெரபிஸ்ட் ஸ்ரீநாத் ராகவன்,

* நடக்கும்போது நெஞ்சை நிமிர்த்தி நேராக நடக்க வேண்டும். அமரும்போதும் அப்படித்தான் அமர வேண்டும். கூன் விழுந்தது போன்று முன்புறம் சாய்ந்தவாறு அமர்ந்தாலோ, நடந்தாலோ முதுகில் அழுத்தம் ஏற்பட்டு வலி உண்டாகும்.

* தொடர்ச்சியாக உட்கார்ந்துகொண்டு வேலை செய்பவர்கள் கண்டிப்பாக ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து சிறிது தூரம் நடக்க வேண்டும். நின்றுகொண்டு வேலை செய்பவர்கள் சிறிது நேரம் உட்காரலாம். கையை மேல், கீழ் அசைத்துச் சிறு பயிற்சிகள் செய்யலாம்.

* கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள், அமர்ந்திருக்கும் உயரத்துக்குத் தகுந்தவாறு திரையை வைத்துக்கொள்ள வேண்டும். நம் கண்ணும், திரையில் எழுத்து தொடங்கும் இடமும் ஒரே நேர் கோட்டில் இருக்க வேண்டும். டைப் செய்யும்போது கீழே மணிக்கட்டை அழுத்தி, விரல்களை மேல்நோக்கி வைத்துக்கொண்டு டைப் செய்யக் கூடாது. கையை மேலே தூக்கி பியானோ இசைப்பது போல்தான் டைப் செய்ய வேண்டும். 

* வாகன ஓட்டுநர்களும், அதிக தூரம் வாகனங்களில் பயணம் செய்பவர்களும் கூன் விழுந்தது போல் உட்காராமல் நிமிர்ந்தவாறே உட்கார வேண்டும். இரு சக்கர வாகனங்களில் `ஷாக்அப்சர்வர்கள்’ சரியாக இருக்கிறதா என்பதை மாதம் ஒருமுறை கவனித்துக்கொள்ள வேண்டும். தொலைதூரம் பயணிப்பவர்கள் அல்லது தினமும் வாகனம் ஓட்டுபவர்கள் முதுகுக்கான பெல்ட் போட்டுக்கொள்ளலாம். வாகங்களின் கண்ணாடி வழியாகத்தான் பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்க வேண்டும். திடீரென்று கழுத்தைத் திருப்பிப் பார்ப்பதோ, நேராகப் பார்க்காமல் பக்கவாட்டுத் திசைகளில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு செல்வதோ கூடாது. வாகனத்தில் இரண்டு புறமும் கண்ணாடிகள் கட்டாயம் இருக்க வேண்டும். சாலையில் பயணிக்கும் பள்ளங்களில் வாகனம் இறங்கி ஏறும்போது அப்படியே உட்கார்ந்திருக்காமல் சீட்டிலிருந்து லேசாக எழுந்துகொள்வது நல்லது. மொத்த அழுத்தமும் முதுகில் இறங்குவதை இது தடுக்கும்.

* மூளைக்குத் தொடர்ச்சியாக வேலை கொடுத்தாலும் உடல்வலி ஏற்படும். மூளைச் சோர்வடையும்போது உடலின் மற்ற உறுப்புகளையும் சோர்வடையச் செய்துவிடும். அதனால், ஒரே விஷயத்தைத் தொடர்ச்சியாகச் சிந்திக்காமல் சிறிது இடைவெளி விட வேண்டும். குறைந்த பட்சம் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை நாம் செய்யும் வேலை தொடர்பாக சிந்திப்பதை விட்டுவிட்டு வேறு ஏதாவதொரு விஷயத்தைச் சிந்திக்கலாம். 

 

* வெளியில் எங்காவது செல்ல வேண்டியிருந்தால், சரியான நேரத்திலோ அல்லது, முன்பாகவோ கிளம்பிவிட வேண்டும். அவசர கதியில் கிளம்பினால் வாகனங்களை வேகமாக இயக்க வேண்டியிருக்கும். அப்போது மேடு, பள்ளம் குறித்து அக்கறை கொள்ளாமல் இஷ்டத்துக்கு வண்டியை ஓட்ட, அதன் காரணமாகவும் தேவையற்ற உடல்வலி உண்டாகும்.

சில எளிய பயிற்சிகளின் மூலம் நம்மை நாம் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.

*இதயத் தசை ஆரோக்கியமாக இருக்கத் தினந்தோறும் அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

* கை, கால் தசைகளை வலுவாக வைத்துக்கொள்ள கடினமான பொருள்களைத் தூக்கித்தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. தண்ணீர் நிரப்பப்பட்ட வாட்டர்கேனைக்கூட கையால் தூக்கிப் பயிற்சி செய்யலாம். 

* உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டே கழுத்தை இடம் மற்றும் வலமாகத் திருப்பியும், மேலே, கீழே அசைத்தும் பயிற்சி செய்யலாம்.

* வாகனங்களில் செல்லும்போது டிராஃபிக் சிக்னலில், இடுப்பில் கைவைத்து முன்னால், பின்னால் சாய்ந்து ஸ்ட்ரெட்ச் செய்து கொள்ளலாம். 

* தூங்கும்போது, கருவில் குழந்தை எந்த வடிவில் இருக்குமோ, அப்படி ஒரு பக்கமாக சாய்ந்து, கால்கள் இரண்டையும் வயிற்றுப் பகுதியை ஒட்டி மேல்நோக்கி இருக்குமாறு வைத்துக்கொண்டு தூங்க வேண்டும். இப்படித் தூங்கினால் முதுகுவலியைத் தவிர்க்கலாம்.

*  வலி என்பது நம் உறுப்புகளைக் காக்க வந்த ஓர் அற்புதமான அறிகுறி. உடலில் ஓர் இடம் பாதிக்கப்பட்டால்தான் அங்கு வலி ஏற்படும். அதனால், ஏன் வலி ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, வலியை மரக்கச் செய்யும் பெயின் கில்லர் மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது. மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் வலியை நாம் உணராமல் இருப்போமே தவிர பாதிப்பு அப்படியேதான் இருக்கும். ஓர் இடத்தில் வலி ஏற்பட்டால், வலியோடு தொடர்ந்து எந்த வேலையும் செய்யக் கூடாது. இதுதவிர வேறு சில மருத்துவக் காரணங்களாலும் உடல்வலி ஏற்படும். அதனால், அலட்சியமாக இருக்காமல் மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்கிறார் பிசியோதெரபிஸ்ட் ஸ்ரீநாத் ராகவன்.

உடலை அலட்சியப்படுத்துவது என்பது நம் உடலிலுள்ள சதையை, எலும்பை, தோலை அலட்சியப்படுத்துவதன்று. நம் எதிர்கால லட்சியங்களை, கனவுகளை அலட்சியப்படுத்துவதற்குச் சமமாகும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.

%d bloggers like this: