வெயில் காலத்துக்கு உகந்த பருத்தி ஆடைகள்… இவ்வளவு பலன்களா?

இயற்கை நம் உடலுக்கு பரிசாகத் தந்தது பருத்தி. பருத்திச் செடியிலிருந்து எடுக்கப்படும் பஞ்சால் கையிலேயே நெய்யப்படும் இவ்வாடைகள் கோடையில் நமக்கு நண்பன். பருத்தி ஆடைகளில் பல உடைகள் வந்திருந்தாலும் பாரம்பரியம் என்றால் புடவைகள்தான். கோடைக்கு ஏற்ற உடையாக பெண்களால் அதிகமாக விரும்பப்படுவதும் பருத்திப் புடவைகள்தான்.

புடவைகள் நெசவாளர்களைக் கொண்டு நெய்யப்பட்டதால் அன்று நமக்கு பச்சை, சிவப்பு, மஞ்சள், நீலம் என நான்கு வண்ணங்கள் மட்டும்தான் இருந்தது. இன்று பவர்லூம் வந்த பிறகு ஒரு கலரிலேயே பல ஷேடுகளை நம்மால் பெற முடிகிறது.

கோடைக்காலத்தில், காட்டன் புடவைகளானது கட்டுவதற்கு மட்டுமில்லை, உடல் அளவிலும் நமக்கு பல நன்மைகளை அளிக்கிறது.

அதாவது பருத்திப் புடவை ஈரப்பதத்தை தற்காத்துக் கொள்ளும் தன்மைப் பெற்றது. கோடையினால் நம் உடலில் வெளியேரும் வியர்வையை பருத்தித் துணி உறிஞ்சக் கூடிய தன்மைப் பெற்றது.

பின் வெயிலின் தாக்கத்தால் உடனே அதை வெளியேற்றும். கிட்டத்தட்ட ஆட்டோமேட்டிக் டவலைப் போல் செயல்படுகிறது. இதனால் உடலின் களைப்பும் தெரிவதில்லை.

அடுத்ததாக சூரியனிடமிருந்து ஒரு மின் கடத்தியைப் போன்றும் செயல்பட்டு வெப்பத்தை நம் உடலின் மீது அண்ட விடாமலும் செய்கிறது. இதனால் வெப்பத்தை வெளியேற்ற காற்றை உள்ளே இழுக்கச் செய்கிறது. இதனால் வியர்வை அதிகமாக வெளியேறுவதும் குறைகிறது.

மேலும் , இது இலகுவான தன்மையைப் பெற்றதால் அனைத்து விதமான உடல் அமைப்பு பெற்றவற்களுக்கும் இவ்வாடைகள் பொருந்தி விடுகின்றன.

சிந்தடிக், பாலிஸ்டோர் போன்ற உடைகள் அணிவதால் சிலருக்கு தோல் அரிப்புகள் வரும். ஆனால் காட்டன் அப்படி அல்ல. பருத்தியால் தோல் அரிப்புகளோ, தோல் வியாதிகளோ வராது. அனைத்துவிதமான உடல் வாகுகளுக்கும் ஏற்ற உடை. அதனால்தான் பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் ஆடைகள் மற்றும் உடலைத் துடைக்கப் பயன்படுத்தப்படும் துணிகள் எல்லாம் பருத்தியிலேயே இருக்கிறது.

மேலும் உடலில் காயம் பட்டால் பயன்படுத்தப்படும் பஞ்சு, பேண்டேஜ் எல்லாமே பருத்தியால் செய்யபடுகிறது. எடைக் குறைவான இந்த பருத்தி ஆடைகள் அனைத்து விதமான தட்ப வெட்ப நிலையிலும் நம் உடலைப் பாதுகாக்கக் கூடிய தன்மை பெற்றது.

ஆனால் இன்று காட்டன் புடவைகள் என்கிற பெயரில் பாலிஸ்ட்டோர் மற்றும் சிந்தடிக், சில்க் துணிகளை சேர்த்து தயாரிக்கப்படுவதால் அதன் இயற்கைத் தன்மைக் கெட்டுவிடுகின்றது

இதைத்தவிற காட்டன் புடவைகளை நாம் பராமரிக்கும் விதத்தைப் பொருத்து அதன் ஆயுட்காலமும் அதிகரிக்கும். பருத்திப் புடவைகளை நாம் சுடுநீரில் மட்டுமே அலச வேண்டும்.

அதில் அதிகப்படியான சலவைத் தூள் மற்றும் சோப்புகளை பயன்படுத்துவதனாலும் அதன் நிறம் மங்கிவிடும். இதற்கும் அதன் லேசான தன்மையே காரணம். இப்படி பருத்தி ஆடைகளில் பல நன்மைகள் இருப்பதினால்தான் கோடையில் அனைவராலும் விரும்பப் படுகிறது.

இவ்வகை பருத்திப் புடவைகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் அதிகமாக விரும்பி அணிகின்றனர். இதனால் காட்டன் புடவையிலேயே எபிராய்டரிங், பிரிண்டட் காட்டன், உப்படாஸ், மால்குடி காட்டன், பைத்தானி போன்றவை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதிக நூல் இழைகளைக் கொண்டு வரையப்பட்டு வடிவமைக்கப்படுவது எம்பராய்டரி காட்டன், ஓவியங்களை (கலம் காரி டிசைன்கள்) துணியின் மீது அச்சிடுவது பிரிண்டட் காட்டன்,

உப்படாஸ், ஆந்திர மாநிலம் உப்படா கிராமத்தில் நெய்யப்படும் பருத்திப் புடவைகளுக்கு மிகவும் மவுசு என்பதால் தமிழகத்திலும் மிகவும் பிரபலமானது. இது சில்க் கலந்து நெய்யப்படுகிறது. இதில் டிசைன்கள் சிக் சாக் முறையில் வடிவமைக்கப்படுகிறது.

இந்த புடவைகளின் விலை மிகவும் அதிகம். இதை திருமணம், மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்லாம். மால்குடி காட்டன் என்பது சில்க் மற்றும் பருத்தி இரண்டும் சம அளவு கலந்து நெய்யப்படுகிறது. இதை சில்க் காட்டன் என்றும் அழைப்பர்.

பைத்தானி காட்டன் என்பது மகாராஷ்ட்டிர மாநிலத்திலிருந்து தயாரிக்கப்படுவது. இதில் அதிகப்படியான எம்பராய்டரி டிசைன்கள் கொண்டு வடிவமைக்கப்படுவதால் ஒரு புடவையை நெய்ய 6 மாதங்கள் வரை ஆகும் என்று கூறுகின்றனர்.

எந்தவித டிசைன்களும் இல்லாமல் பிளெயினாக சேலையை நெய்யவே ஒரு மாதம் ஆகும். பைத்தானி டிசைன் புத்த மதத்தின் ஓவியங்கள் மூலம் பெறப்பட்டது. அந்தப் புடவை மிகவும் விலை உயர்ந்த புடவையாக உள்ளது.

ஆதலால் பருத்தித் துணி அணிந்து கோடையை விரட்டி அடியுங்கள்.

%d bloggers like this: