இழுபறிக்குக் காரணமே அமைச்சர் தங்கமணிதான்!’ – விஜயகாந்த், ஜி.கே.வாசன் படங்கள் நீக்கப்பட்ட பின்னணி

கட்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள் பலர் இருக்கும்போது, அனகை முருகேசனும் இளங்கோவனும் சென்றதுதான், தேவையற்ற விமர்சனங்களை ஏற்படுத்திவிட்டது.

பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொதுக்கூட்ட மேடையிலிருந்து விஜயகாந்த் படத்தையும் ஜி.கே.வாசன் படத்தையும் நீக்கிவிட்டனர். `தலைமைக் கழகத்தில் எத்தனையோ நிர்வாகிகள் இருக்கும்போது, துரைமுருகனுடன் பேசுவதற்கு 2 மாவட்டச் செயலாளர்கள் கிடைத்தார்களா?’ என ஆதங்கப்படுகின்றனர் தே.மு.தி.க வட்டாரத்தில்

சென்னை, வண்டலூர் அருகில் உள்ள கிளாம்பாக்கத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் மேடையில் உரையாற்ற இருக்கிறார் பிரதமர் மோடி. இதற்காக இன்று பத்திரிகைகளில் வெளியான விளம்பரங்களில், `அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் மாபெரும் பொதுக் கூட்டம்’ என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தில் விஜயகாந்த் படமும் ஜி.கே.வாசன் படமும் இடம்பெறவில்லை. தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையின் படமும் அச்சிடப்படவில்லை. இந்த நிலையில், பொதுக்கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரிலிருந்து திடீரென விஜயகாந்த் படத்தையும் ஜி.கே.வாசன் படத்தையும் நீக்கிவிட்டனர். அதேநேரம், தே.மு.தி.க முக்கிய நிர்வாகிகள் சிலர், தி.மு.க பொருளாளர் துரைமுருகனைச் சந்தித்துப் பேசச் சென்றனர். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. தே.மு.தி.க நிர்வாகிகள் சந்திப்பு குறித்துப் பேசிய துரைமுருகன், `எங்கள் தலைவர் ஊரில் இல்லை, எங்களிடம் கொடுப்பதற்கு சீட்டுகளும் இல்லை’ என்றார். `2016 சட்டமன்றத் தேர்தலின்போது சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்டோர் தி.மு.க-வில் இணைந்ததுபோல, இந்த முறையும் தே.மு.தி.கவின் முக்கிய நிர்வாகிகள் செல்லலாம்’ என்ற தகவல் வெளியாகியது. 

துரைமுருகனுடனான சந்திப்பு குறித்து தே.மு.தி.க நிர்வாகிகளிடம் பேசினோம். “தி.மு.க-வில் இணைவதற்காக யாரும் அங்கு செல்லவில்லை. `அ.தி.மு.க அணியில் உரிய மரியாதை இல்லாததால், மீண்டும் தி.மு.க நிர்வாகிகளுடன் பேசலாம்’ என்ற மனநிலையில் தலைமைக் கழக நிர்வாகிகள் இருந்தனர். இதன் ஒரு பகுதியாகத்தான் துரைமுருகனிடம் பேசினார் சுதீஷ். தி.மு.க அணியில் உள்ள கட்சிகளுக்கு இடப்பங்கீட்டையும் அறிவித்துவிட்டனர். இருப்பினும், கடைசிக்கட்டமாக முயற்சி செய்து பார்க்கலாம் என்ற அடிப்படையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் அனகை முருகேசனும் சேலம் புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.இளங்கோவனும் துரைமுருகனைச் சந்திக்கச் சென்றனர். `சீட்டுகளைக் கொடுத்து முடித்துவிட்டோம்’ என துரைமுருகனும் தெளிவாகக் கூறிவிட்டார். கட்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள் பலர் இருக்கும்போது, அனகை முருகேசனும் இளங்கோவனும் சென்றதுதான், தேவையற்ற விமர்சனங்களை ஏற்படுத்திவிட்டது” என விவரித்தவர்கள், 

“அ.தி.மு.க அணியில் 7 இடங்களைப் பெற்றுக்கொண்டுவிட்டது பா.ம.க. கடந்த மக்களவைத் தேர்தலில் எங்கள் வாக்குகள் அனைத்தும் பா.ம.க-வுக்குச் செல்லும் வகையில் தீவிரப் பிரசாரம் செய்தார் விஜயகாந்த். தருமபுரியில் அன்புமணியின் வெற்றிக்காக உழைத்தார். ஆனால், எங்கள் வேட்பாளர்களுக்காக ஓரிடத்தில்கூட ராமதாஸ் பிரசாரம் செய்யவில்லை. இந்த முறையும் நாங்கள் செல்வாக்காக இருக்கும் தொகுதிகளை விட்டுக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இல்லை. குறிப்பாக, `எங்களை சேர்த்துக் கொள்ளக் கூடாது’ என்பதில் அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட சிலர் உறுதியாக இருக்கின்றனர். இதனால்தான் கூட்டணிப் பேச்சில் இழுபறி நீடித்தது. இதுதொடர்பாக டெல்லி மேலிடத்திலும் நாங்கள் பேசிவிட்டோம். அ.தி.மு.க-வுடன் எங்களுக்கு சமரச உடன்பாட்டை ஏற்படுத்தும் வேலையைத் தீவிரமாகச் செய்து வருகிறார் பியூஷ் கோயல். இன்னும் 2 தினங்களில் அனைத்தும் முடிவுக்கு வரும் என நம்புகிறோம்” என்கின்றனர் உறுதியாக. 

ஜி.கே.வாசனின் நிலைப்பாடு குறித்து த.மா.கா நிர்வாகிகளுடன் பேசினோம். “எங்களுடைய அனுமதியில்லாமலேயே மேடையில் படத்தை வைத்துவிட்டார்கள். கூட்டணி ஒப்பந்தம் தாமதம் ஆவதற்குக் காரணமே தே.மு.தி.க-தான். அவர்களிடம் பேசி முடித்துவிட்டு, எங்களுக்கான இடத்தை ஒதுக்குவதாக அ.தி.மு.க தரப்பில் தெரிவித்திருந்தனர். 2 பிளஸ் 1 அல்லது 1 பிளஸ் 1 என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இன்னமும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. கூட்டணி ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமல் மேடையில் அமர்வது சரியானதல்ல. எங்கள் படத்தை அவசரம் அவசரமாக மேடையில் வைக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது? இந்த அணியை பலம் பொருந்தியதாக மாற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். ஆனால், நடைமுறையில் சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்படுகின்றனர். தே.மு.தி.க-வோடு தொகுதி உடன்பாடு முடிவுக்கு வந்திருந்தால், எங்களுக்கான தொகுதிகளையும் இறுதி செய்திருப்பார்கள். இதனால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு அ.தி.மு.க தரப்பில்தான் பதில் சொல்ல வேண்டும்” என்கின்றனர் கொதிப்புடன். 

`இது மெகா கூட்டணி…வெற்றிக் கூட்டணி’ என அ.தி.மு.க-வுடன் ஒப்பந்தம் கையொப்பமான அன்று உற்சாகத்துடன் தெரிவித்தார் ராமதாஸ். `அதை நோக்கிய பயணத்தில் ஏற்படும் சறுக்கல்களை அ.தி.மு.க எப்படிச் சமாளிக்கப் போகிறது?’ என்பதே பா.ஜ.க-வினரின் கவலையாக இருக்கிறது. 

%d bloggers like this: