ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச் இது’ – தி.மு.க வலையில் விழுந்த தே.மு.தி.க!

தே.மு.தி.க நிர்வாகிகள் தி.மு.க நிர்வாகிகளைச் சந்திக்க விரும்புவது குறித்த தகவல் காலையிலேயே ஸ்டாலின் கவனத்துக்கு வந்துவிட்டது என்கிறார்கள் அறிவாலய நிர்வாகிகள். 

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை இறுதி செய்யும் விஷயத்தில் அரசியல் கட்சிகள் முனைப்புக் காட்டி வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க, என்.ஆர்.காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க, வி.சி.க, முஸ்லிம் லீக்

உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. தொகுதிகள் எண்ணிக்கை அடிப்படையில் பங்கிட்டுக் கொடுக்கும் வேலைகள் முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்தத் தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்த பேச்சுவார்த்தையை நோக்கி அரசியல் கட்சிகள் நகர்ந்திருக்கின்றன. 

இதில், விஜயகாந்தின் தே.மு.தி.க எந்தக் கூட்டணியில் இடம்பெறப் போகிறது என்ற கேள்விக்கு இன்னமும் உறுதியான விடை கிடைக்கவில்லை. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இடம்பெறுவது உறுதி என பா.ஜ.க தலைவர்களும் அ.தி.மு.க தலைவர்களும் நம்பிக்கையாகப் பேசிவந்தனர். அதற்கேற்றார்போல் பா.ஜ.கவின் தமிழகப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் விஜயகாந்தை நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். `தே.மு.தி.கவுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை. நிச்சயம் அந்தக் கட்சி எங்கள் கூட்டணியில் இடம்பெறும்’ என்று அ.தி.மு.க தரப்பில் ஓ.பி.எஸ் பேசியிருந்தார். 

இந்தநிலையில், தே.மு.தி.க நிர்வாகிகள் தி.மு.க பொருளாளர் துரைமுருகனை நேரில் சந்தித்துப் பேசியது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரம், சென்னை தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த பியூஷ் கோயலை, தே.மு.தி.கவின் துணைச் செயலாளர் சுதீஷ் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். தே.மு.தி.க நிர்வாகிகள் சந்திப்பு குறித்து பேசிய துரைமுருகன், `விஜயகாந்தின்  மைத்துனர் சுதீஷ் தொலைபேசியில் என்னிடம் பேசினார். என்ன என்று நான் அவரிடம் கேட்டேன். `நாங்கள் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி உங்களோடு வர விரும்புகிறோம்’ என்றார். நான், `எங்களிடம் சீட் இல்லை. எங்கள் தலைவர் ஊரில் இல்லை. நீங்கள் அ.தி.மு.க-வுடனும் பேசிவிட்டு எங்களிடமும் பேசினால் என்ன செய்ய முடியும்?. நான் தெளிவாகக் கூறிவிட்டேன். சீட் இல்லை என்றேன்’ என்று கூறியிருந்தார். 

 

பியூஷ் கோயலுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுதீஷ், துரைமுருகனுடன் தொலைபேசியில் பேசியதை ஒப்புக்கொண்டார். அதேநேரம், அ.தி.மு.கவுடனான பேச்சுவார்த்தை தொடரும் என்றும் அவர் கூறியிருந்தார்.  

இதுகுறித்து தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம். “தே.மு.தி.க நிர்வாகிகள் தி.மு.க நிர்வாகிகளை சந்திக்க விரும்புவது குறித்த தகவல் காலையிலேயே ஸ்டாலின் கவனத்துக்கு வந்துவிட்டது. இதைக் கேட்ட ஸ்டாலின், `அப்படியே வந்து பார்த்தாலும் துரைமுருகனைப் பார்க்கச் சொல்லுங்கள். அவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்களோ, அதைச் சொல்லிவிட்டுப் போகட்டும். அவர்கள் சொல்வதை மீடியாக்களுக்கும் தெரியப்படுத்திவிடுங்கள்’ எனக் கூறிவிட்டார். அதன் தொடர்ச்சியாகவே துரைமுருகனும் பேட்டி கொடுத்தார். தே.மு.தி.க மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச் இது. இந்த வலையில் தே.மு.தி.கவே வந்து விழுந்துவிட்டது’’ என்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள்.

%d bloggers like this: