ஜெயிக்கவே முடியாத தொகுதிகளை அதிமுக கொடுத்ததா.. அதுதான் தேமுதிகவுக்கு கோபமா.. என்ன நடக்கிறது?

அதிமுக-பாஜகவுடன் நள்ளிரவு வரை தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இதில் ஒரு முடிவும் எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு காலம் விஜயகாந்த் கட்டி காப்பாற்றிய எல்லா மானத்தையும் நேற்று ஒரே நாளில் வாங்கிவிட்டார் சுதீஷ். இதனால் இன்று தமிழக அரசியலில் கேவலப்பட்டு நிற்கிறது தேமுதிக.

அதிமுக வெறும் 4 சீட் தந்ததால்தான் இந்த அதிருப்தி என்பது முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது. நீலகிரி, தூத்துக்குடி, நாகை மற்றும் டெல்டா பகுதியில் ஒரு தொகுதி என தகவல் வெளியானது. இதில் நீலகிரி ஆ.ராசா வெற்றிவாய்ப்பின் பிடியில் உள்ளதால் அது சாத்தியமில்லை.

தூத்துக்குடியில் ஏற்கனவே வலுவான கனிமொழி, மற்றும் தமிழிசை களமிறங்க உள்ளனர். அதனால் தேமுதிக அங்கு எடுபடாது. நாகை மற்றும் டெல்டா பகுதிகளில் ஒன்று என்றால், மக்கள் ஏற்கனவே கஜா புயல் பாதிப்பின் அதிருப்தியில் உள்ளனர். அதனால் வெற்றி வாய்ப்பு கடினம்தான்,. இப்படி 4 தொகுதிகளுமே சிக்கல் என்பதால்தான் நள்ளிரவு வரை நேற்று பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.

4 சீட்டுகள்

ஒருவேளை திமுக பக்கம் சென்றிருந்தாலும், இனி சென்றாலும் சரி இதே 4 சீட்தான் அல்லது இதற்கும் குறைவுதான். ஏனெனில் அங்கேயே சீட் பஞ்சம்.வேண்டுமானால் கூட்டணிகளை ஒதுக்கிய சீட்டுகளை திரும்ப வாங்கி தரலாம். ஆனால் அதற்கு அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டுமே? நேற்று நள்ளிரவு வரை அதிமுக-பாஜகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நீடித்துள்ளது. விடிய விடிய பேசினாலும் அது தேமுதிகவுக்கு இனி இழுக்குதான்… அசிங்கம்தான்!

தினகரன் தரப்பு

ஏற்கனவே தேமுதிக ஆதரவாளர்கள் டிடிவி தினகரனுடன் இணையலாம் என்று சொல்லி வருகிறார்கள். அங்கு சென்றால் எப்படியும் செலவுகளை பார்த்து கொள்ளும் அளவுக்கு தினகரன் வளமாகவே இருக்கிறார். கண்டிப்பாக கூட்டணிகளை கவனித்து கொள்வார். அநேகமாக தேமுதிகவின் எதிர்பார்ப்புகளில் பாதியாவது தினகரன் பூர்த்தி செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தனித்து போட்டி

சமத்துவ மக்கள் கட்சிக்கு கட்சிக்கு பெரிதாக வாக்கு வங்கி இல்லை என்றாலும், தைரியமாக 40 தொகுதிகளில் போட்டியிடுவதாக சரத்குமார் சொல்கிறார். ஆனால், சரத்குமாரை காட்டிலும் தேமுதிகவிற்கு அதிகமாகவே வாக்கு வங்கிகள் இருந்தும், ஏன் இன்னும் அதிமுக, திமுக பின்னாலேயே செல்ல வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகளே கேள்வி எழுப்புகிறார்கள்.

சரத்குமார்

சரத்குமார் விஜயகாந்த்துடன் நல்ல நட்பு, உறவில் இருக்கிறார். வீடு வரை சென்றும் பேசிவிட்டு வந்திருக்கிறார். இதனால் விஜயகாந்த், சரத்குமார், டிடிவியுடன் இணைந்தால் அது கொஞ்சம் பலம் வாய்ந்த கூட்டணியாகத்தான் தெரியும் என்று ஒரு சாரார் நினைக்கிறார்கள்.

விஜயகாந்த்

கமலுடன் விஜயகாந்த் சேருவாரா என்பது சந்தேகம்தான். ஆனால் மற்றவர்களுடன் இழுபறியாய் இழுத்து கொண்டிருப்பவர்கள் கமலை நிச்சயம் நினைத்து பார்க்கத்தான் செய்கிறார்கள். ஸ்டாலின் விஜயகாந்த் வீட்டுக்கு சென்றுவந்த அன்றே கமலும் செல்வார் என்று பேசப்பட்டது. ஆனால் கமல் போகவில்லை என்றாலும், தேமுதிக வேண்டவே வேண்டாம் என்று இதுவரை சொல்லாமல்தான் இருக்கிறார்.

மரியாதை, பணம்

கமலும் டிடிவி தினகரனும் வலுவான அணியாக உருமாற அதிமுக, திமுகவே காரணமாகி விடும்போல இருக்கிறது. மரியாதை வேண்டும் என்று நினைப்பவர்கள் கமல் கட்சியுடன் இணையலாம் என்றும், பணம் வேண்டும் என்று நினைப்பவர்கள் தினகரன் பக்கம் இணையலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் அப்பட்டமாகவே கருத்து சொல்கிறார்கள்.

டிடிவி தினகரன், விஜயகாந்த், சரத்குமார் என கூட்டணி சாத்தியப்படுமா? அல்லது கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், சீமான் கூட்டணி என்பது சாத்தியப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

%d bloggers like this: