1000 பெரியார் வந்தாலும் இந்த திராவிட + தேசிய கட்சிகளை திருத்த முடியாது போலயே!

இப்போது தமிழ்நாட்டில் ஒரு விஷயம் சைலன்ட்டாக நடப்பதாக சொல்லப்படுகிறது! (இப்போது என்றில்லை, எப்பவுமே இப்படித்தான்) என்ன தெரியுமா?

நடைபெற இருக்கிற நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியினர் வேட்பாளர் பட்டியலில் மும்முரம் காட்டி வருகிறார்கள். ஆனால் அதே சமயத்தில் தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மதத்தினரும், பெரும்பான்மையாக இல்லாத ஜாதியினரும் ஒருவித அதிருப்தியில் உள்ளனர் என்று பரவலாக பேசப்படுகிறது.

அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக கட்சி உள்பட எந்த கட்சியிலும் வேட்பாளர்களாக போட்டியிட்டாலும் அதன் வேட்பாளர்கள் தேர்வு எதன் அடிப்படையில் நடக்கிறது என்பதான் விஷயமே.

ஆதிக்கம்

அதாவது தமிழகத்தையே நான்காக பிரித்து விட்டனர். ஜாதியை அடிப்படையாக வைத்து இந்தப் பிரிவினையைச் செய்துள்ளனர். ஏரியாவுக்கு ஏற்றார் போல அந்த ஏரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜாதியினருக்குத்தான் தேர்தல் டிக்கெட்டாம். இதை எழுதப்படாத விதியாகவே அனைத்துக் கட்சிகளும் கடைப்பிடிக்கின்றனவாம். உதாரணத்திற்கு தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கள்ளர் சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாக சொல்லப்படுகிறது.

நாடார் சமூகம்

திண்டிவனம், விழுப்புரம், தருமபுரி, சேலம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் வன்னியர் சமூக வேட்பாளருக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், உள்ளிட்ட மத்திய மாவட்டங்களில் கவுண்டர் சமுதாயத்துக்கும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நாடார் சமூக வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதாம். அதேபோல, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தேவர் சமூக வேட்பாளர்களை நிற்க வைக்க முக்கியத்துவம் தரப்படுவதாக பேச்சு அடிபட ஆரம்பித்துள்ளது.

ஊறுகாய் போலதான்

இந்த ஜாதிகளுக்கு மத்தியில் தற்போது சிக்கித் தவிப்பது சிறுபான்மை மதத்தினரும், சிறிய அளவில் உள்ள பிற ஜாதியினரும்தான். இவர்களுக்கு முதல் தேர்வில் இடம் கிடைப்பதில்லை. கடைசியாகத்தான் இவர்களைப் பரிசீலிக்கிறார்களாம். இவர்களுக்கு ஊறுகாய் தொட்டுக் கொள்வது போல, அங்கொன்றும், இங்கொன்றுமாக போட்டியிட மட்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறதாம்.

அமைப்புகள்

இப்படி மற்றவர்களுக்குப் போக தங்களுக்கு சீட் கிடைக்கும் நிலை இருப்பதால், இந்த சமூக மக்கள் மத்தியில் ஒருவித அதிருப்தி தென்பட ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேசமயம், இந்த ஜாதியினரையும், அதன் அமைப்புகளையும் அனைத்துக் கட்சிகளும் கூட்டணியில் சேர்க்க விரும்புகின்றன. காரணம், கிடைக்கும் ஓட்டுக்களையும் விடக் கூடாது என்பதால்.

கசப்பான உண்மை

தமிழகத்தில் தற்போது தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மட்டுமே பிரதிநிதித்துவம் உள்ளது. அதைத் தாண்டி ஒரு தொகுதியில் கூட அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை. எந்தக் கட்சியும் கொடுக்கவில்லை என்பது அதிர்ச்சிகரமான, கசப்பான உண்மையாக உள்ளது. ஆக, தனித் தொகுதிகள் என்று மட்டும் ஒதுக்கப்பட்டிருக்காவிட்டால், இவர்களுக்கெல்லாம் எந்தக் கட்சியும் சீட்டே கொடுக்காது என்பதுதான் உண்மையாக உள்ளது.

ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்த முடியாது என்று ஒரு படத்தில் நடிகர் விவேக் பேசுவார்.. அது மற்றவர்களுக்கு எப்படியோ இந்த திராவிட மற்றும் தேசியக் கட்சிகளுக்கு சாலப் பொருந்தும்..!

%d bloggers like this: