தகுதிநீக்க எம்எல்ஏக்கள் போட்டியிடலாமா?.. 3 தொகுதிக்கு தேர்தல் ரத்து ஏன்?.. தமிழக தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் ஏன் என்பது குறித்து தமிழக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்துக்கு வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.

அன்றைய தினமே 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார்.

18 மட்டுமே தேர்தல்

அப்போது அவர் கூறுகையில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் இல்லை. வழக்கு நிலுவையில் உள்ளதால் அந்த 3 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்றார்.

என்ன வழக்கு

ஒட்டப்பிடாரத்தை பொருத்தமட்டில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கிருஷ்ணசாமி திமுக சார்பில் போட்டியிட்டார். ஆனால் 493 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

மீண்டும் வாக்கு எண்ணிக்கை

இதனால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளதால் மறு வாக்கு எண்ணிக்கை கோரி கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. திருப்பரங்குன்றத்தை பொருத்தமட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுகவின் சீனிவேல் வெற்றி பெற்றார். அவர் அங்கீகாரச் சான்றிதழை வாங்குவதற்கு முன்னர் இறந்துவிட்டார்.

கைரேகையில் சந்தேகம்

இதனால் அந்த தொகுதிக்கு மறுதேர்தல் நடத்தப்பட்டு அதிமுகவின் ஏ.கே போஸ் வெற்றி பெற்றார். இந்நிலையில் ஏ.கே போஸை வேட்பாளராக அங்கீகரித்த கடிதத்தில் இடம்பெற்றுள்ள ஜெயலலிதாவின் கைரேகையில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

பணப்பட்டுவாடா

அதுபோல் அரவக்குறிச்சியில் பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் வழக்கு தொடர்ந்துள்ளதால் அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

%d bloggers like this: