தற்போது அமலில் உள்ள தேர்தல் நன்னடத்தை விதிகள் என்னெ்ன?

மக்களவை தேர்தல் கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்தும் வகையில் நன்னடத்தை விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான உடனே அமலுக்கு வருகிறது.

அதன்படி, கட்சிகளோ, வேட்பாளரோ வெறுப்பையும், பதற்ற நிலையையும் உருவாக்குகிற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

அரசியல் சார்ந்த விமர்சனங்களை முன்வைக்கலாமே தவிர, தனிப்பட்ட தாக்குதல்களில் எக்காரணம் கொண்டும் ஈடுபடக் கூடாது.

வழிபாட்டு தலங்களை பிரச்சார இடமாக பயன்படுத்தக் கூடாது.

வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கவோ, மிரட்டவோ, ஆள்மாறாட்டம் செய்யவோ, வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் ஆதரவு கோரவோ கூடாது.

வாக்காளர்களுக்கான போக்குவரத்து வசதி செய்து கொடுத்தல் போன்ற வாக்காளர்களை கவரும் வகையிலான அனைத்து செயல்களையும் தவிர்க்க வேண்டும்.தனிநபருக்கு சொந்தமான இடங்களில் உரிமையாளரின் அனுமதியின்றி விளம்பர நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது.

ஒரு கட்சியின் கூட்டம் நடைபெறுகிற வழியாக மற்றொரு கட்சி ஊர்வலம் நடத்தக்கூடாது. ஊர்வலமாக செல்பவர்கள் காவல்துறையினரின் கட்டளைகளையும், ஆலோசனைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

கொடும்பாவிகளை இழுத்துச் செல்வது, கொளுத்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பொதுஇடங்களை ஆளுங்கட்சி பயன்படுத்துவது போலவே, அனைத்துக்கட்சிகளும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்

மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மானியம் போன்றவை வழங்கக்கூடாது.

ஏதேனும் ஒரு வகையில் மானியங்களை அறிவிக்கவோ, அது தொடர்பாக வாக்குறுதிகள் கொடுக்கவோ கூடாது.

திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் முதலானவற்றை செய்யக்கூடாது. அரசுப்பணியில், அரசு நிறுவனங்கள் முதலியவற்றில் தனிப்பட்ட நியமனம் எதனையும் செய்யக்கூடாது.

வேட்பாளர், வேட்பாளரின் முகவர் அல்லது வாக்காளர் என்ற முறையில் மட்டுமே அமைச்சர்கள் வாக்குச்சாவடிக்குள் அல்லது வாக்குச்சீட்டு எண்ணும் இடத்திற்குள் நுழைய வேண்டும்.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி பரப்புரை மேற்கொள்ளக் கூடாது.

%d bloggers like this: