கரம் கொடுக்கிறார்களா… கழற்றி விடுகிறார்களா?

வெயிலில் களைத்துவந்த கழுகார், ‘ஏசி’க்கு நேராக அமர்ந்து ஆசுவாசமானார். அவரிடம், ‘‘கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை, தி.மு.க–வும் கச்சிதமாக முடித்துவிட்டதே?’’ என்று கேட்டோம்.
‘‘தி.மு.க சார்பில் கூட்டணிக் கட்சிகளுடன் நடத்தியப் பேச்சுவார்த்தையில், ஒரே ரவுண்டில் செட்டில் ஆன ஒரே கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டும்தான். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், மூன்று தொகுதிகளின் பெயர்களை எழுதிக்கொடுத்து, அதில் இரண்டை வாங்கிக்கொண்டார்கள்.’’
‘‘வைகோ ஒன் பிளஸ் ஒன்-க்கு எப்படி ஒப்புக்கொண்டார்?’’

‘‘அவர் எதிர்பார்த்தது மூன்று. தி.மு.க தரப்பு இரண்டு தொகுதிகளுக்கே யோசித்தும் ஆலோசனை நடத்திவிட்டு வருவதாகக் கிளம்பிவிட்டார். அதன்பிறகு ஸ்டாலின் அழைத்து, ‘‘ஒரு லோக்சபாவும், ஒரு ராஜ்யசபாவும் வாங்கிக்கொள்ளுங்கள். நீங்கள்தான் இந்தக் கூட்டணியின் பிரசார பீரங்கி. நீங்கள் தேர்தலில் நின்று ‘ரிஸ்க்’ எடுக்க வேண்டாம். ராஜ்யசபா மூலம் மீண்டும் டெல்லிக்குச் செல்லுங்கள்” என்று சொல்ல, வைகோ நெகிழ்ந்துவிட்டார். அடுத்தநாள் அறிவாலயம் வந்தபோது, ஸ்டாலின் கையைப்பிடித்து நா தழுதழுக்க வைகோ பேசியுள்ளார்!’’
‘‘சி.பி.ஐ-க்கு இரண்டு என்பது ஆச்சர்யம்தானே!’’
‘‘அந்த முடிவுக்குக் காரணம், முத்தரசன்மீது ஸ்டாலினுக்கு இருந்த தனிப்பட்ட பிரியம்தான் என்கிறார்கள். முதலில் ஒரு சீட் என்று தி.மு.க தரப்பில் சொன்னதும், பழைய வாக்குவங்கிக் கணக்கை எல்லாம் அடுக்கிக் காண்பித்திருக் கிறார்கள். ஆனால், தி.மு.க தரப்பில் “இன்றைய நிலையைக் கணக்கில் வைத்துப் பேசுங்கள்’’ என்று சொன்னார்களாம். கடைசியில், ஸ்டாலினிடம் முத்தரசன் தனியாகப் பேசியதும், இரண்டு தொகுதிகள் ஓகே ஆகியுள்ளன. சி.பி.எம் மூன்று தொகுதிகள் என்பதில் பிடிவாதமாக இருந்துள்ளது. ஆனால், ‘கடந்த சட்டமன்றத் தேர்தலில், நீங்கள் வாங்கிய வாக்கு வங்கி இதுதான். இதற்குத் தகுந்த மாதிரிதான் உங்களுக்கு சீட் ஒதுக்க முடியும்’ என்று அவர்கள் பாணியிலேயே புள்ளிவிவரம் சொல்லியிருக்கிறார்கள். ஒருவழியாக, இரண்டுக்கு ஒப்புக்கொண்டார்கள்.’’
‘‘தே.மு.தி.க எடுத்த முடிவுதான் என்னவாம்?’’
‘‘விஜயகாந்த் ஆக்டிவ்வாக இருந்திருந்தால், இந்த நிலை வந்திருக்குமா என்று தொண்டர்களே குமுறுகிறார்கள். ஒரேநாளில் அ.தி.மு.க–வுடனும், தி.மு.க–வுடனும் பேசியதில் தே.மு.தி.க பெயர் ‘பஞ்சர்’ ஆகிவிட்டது. ஹோட்டலில் பியூஷ் கோயலுடன் சுதீஷ் பேசிக்கொண்டிருந்தபோதே, துரைமுருகனைச் சந்திக்க தே.மு.தி.க நிர்வாகிகள் போனதில் பி.ஜே.பி நிர்வாகிகள் கடுப்பாகிவிட்டார்களாம்!’’

 

‘‘தே.மு.தி.க-வை வைத்து துரைமுருகன் செய்த காமெடியைப் பார்த்தீரா?’’
‘‘அதற்குத்தான் மறுநாள் பிரஸ்மீட் வைத்து, சுதீஷ் கொந்தளித்துவிட்டாரே… ‘தி.மு.க தலைமையைப் பற்றி துரைமுருகன் என்னவெல்லாம் எங்களிடம் சொன்னார் தெரியுமா?’ என்று அவர் கேட்டது, ‘வேற லெவல் காமெடி’. பி.ஜே.பி முதலில் தே.மு.தி.க-வுடன் பேச வந்ததிலிருந்து, ஏழு தொகுதி பிளஸ் ஒரு ராஜ்யசபா தொகுதி என்பதில் உறுதியாக இருந்தது விஜயகாந்த் குடும்பம். பேச்சுவார்த்தை முடிவாகவில்லை. மோடி வருவதற்கு முன்பாக எப்படியும் தே.மு.தி.க-வைக் கூட்டணிக்குள் கொண்டுவந்து விட, அ.தி.மு.க-வும் ரெடியாக இருந்தது. தே.மு.தி.க நடத்திய அவசர ஆலோசனைக் கூட்டத்திலும், “மார்ச் 6-ம் தேதி காலையில் நல்ல அறிவிப்பு வந்துவிடும்” என்று விஜயகாந்த் தரப்பில் சொல்லப்பட்டது. மணியான அமைச்சர்கள் இருவர் பேசிக்கொண்டே இருந்தார்கள். எதுவும் ‘செட்’ ஆகவில்லை!’’
‘‘அப்புறம் எப்படி விஜயகாந்த் படத்தை மேடையில் வைத்தார்கள்?’’
‘‘ஒரு நம்பிக்கையில் வைத்தார்கள், தே.மு.தி.க கொடிகளையும் கட்டினார்கள். ஆனால், முடிவாகாத காரணத்தால், அந்தக் கொடிகளை அகற்றிவிட்டு, அ.தி.மு.க கொடிகளைக் கட்டிவிட்டார்கள். அதே போல், பிரசாரக் கூட்டம் தொடர்பான பத்திரிகை விளம்பரங்களிலும் விஜயகாந்த் பெயர் இடம்பெறவில்லை. அதேசமயம் மார்ச் 6-ம் தேதி அமாவாசை என்பதால் அன்று எப்படியும் கூட்டணி உறுதியாகிவிடும் என எல்லோரும் எதிர்பார்த்தனர். எதுவும் நடக்கவில்லை.’’
‘‘மோடி வருவதற்கு முதல்நாள் என்ன நடந்ததாம்?’’
‘‘அன்று காலை விஜயகாந்த் வீட்டில் ஆலோசனை நடந்துள்ளது. அப்போது அ.தி.மு.க தரப்பிலிருந்து தொடர்புகொண்டு ‘ஐந்து ப்ளஸ் ஒரு ராஜ்யசபா தருகிறோம். மதியம் பிரதமர் வருவதற்கு முன்பு, பியூஷ் கோயலுடன் சந்திப்பு நடத்தி, முடிவுசெய்துவிடலாம்’ என்று சொல்லியுள்ளனர். அப்போதும் சுதீஷ்,  ‘ஏழு’ என்றிருக்கிறார். அதற்கு, ‘உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் இடங்களை வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அப்புறம்தான், ‘இது சரியாக வராது’ என்று தெரிந்த விஜயகாந்த் உறவுகள், ஸ்டாலினைத் தொடர்புகொள்ள முயன்றிருக்கிறார்கள். அவர் விருதுநகர் போய்விட்டார்.’’

‘‘ஓஹோ!’’
‘‘அதன் பிறகு தங்கள் கட்சி அலுவலகம் சென்ற சுதீஷ், அங்கிருந்து நேராக பியூஷ் கோயலைச் சந்திக்கச் சென்றார். அதற்கு முன்பாகவே மணியான அமைச்சர்கள் இருவர், கோயலுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தனர். ஹோட்டலுக்கு வரும் முன்பே, தங்கள் கட்சி நிர்வாகிகள் அனகை முருகேசன், இளங்கோவன், மோகன்ராஜ் ஆகியோரை அலுவலகத்தில் இருக்கச் சொல்லி விட்டே கோயலுடன் பேச சுதீஷ் கிளம்பியிருக்கிறார்.’’

‘‘அப்புறம் ஏன் தே.மு.தி.க பிரமுகர்கள்,  துரைமுருகனைப் பார்க்கப்போனார்களாம்?’’
‘‘அங்கே ஐந்து தொகுதிகளுக்கு ஒப்புக் கொள்ளுமாறு கோயல் சொல்ல, பிடிவாதமாக மறுத்துவிட்டார் சுதீஷ். பேசிக்கொண்டிருந்த போதே, இடைவெளியில் ‘இங்கே பேச்சுவார்த்தை ஒத்துவரவில்லை’ என்ற தகவல், தே.மு.தி.க நிர்வாகிகளுக்குப் போயிருக்கிறது. உடனே, அவர்கள் துரைமுருகன் வீட்டுக்குக் கிளம்பியிருக் கிறார்கள். அவர்கள் வருவது தெரிந்து, துரைமுருகன் வீட்டிலிருந்து செய்தியாளர்களுக்குச் சத்தமில்லாமல் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதாவது, ‘ஒரே நேரத்தில் இரு இடங்களிலும்  பேசுகிறார்கள்’ என்று தி.மு.க தரப்பு ‘செக்’ வைக்க முடிவு செய்துள்ளது. இது தெரியாமல் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குப் போனார்கள். ஆனால், துரைமுருகன் அதைப் பேட்டியாகக் கொடுத்து தே.மு.தி.க-வை ஆடிப்போக வைத்துவிட்டார்.’’

‘‘அய்யோ…பாவம்!’’
‘‘இத்தனை கூத்துகளுக்குப் பின்னும், விமான நிலையம் அருகேயுள்ள ஒரு ஹோட்டலில், நள்ளிரவுவரை பி.ஜே.பி-யுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. கடுப்பான கோயல், ‘எங்களுடன் பேசிக்கொண்டே தி.மு.க-வுடன் எதற்கு நீங்கள் பேசினீர்கள்?’ என்று கேட்டதற்கு “நோ… நோ… ஜி… எனக்கு அவர்கள் போனதே தெரியாது’ என்று சமாளித்தாராம் சுதீஷ். இந்தப் பதிலில் அவர் திருப்தியாகவில்லையாம். கடைசியில், ‘அ.தி.மு.க சொல்வதைக் கேட்டு நடங்கள். இனி என்னால் எதுவும் செய்ய முடியாது’ என்று சொல்லிவிட்டு விருட்டென நகர்ந்துவிட்டாராம்!’’
‘‘என்னதான் முடிவாம்?’’
‘‘திசைதெரியாமல் தே.மு.தி.க நிற்கிறது.  அ.தி.மு.க கூட்டணிக்குள் தே.மு.தி.க வருவது பா.ம.க–வுக்குப் பிடிக்காததால், முக்கிய அமைச்சர்களை வைத்து, கூட்டணிக்குள் வரவிடாமல் தடுக்கிறார்கள் என்று தே.மு.தி.க–வினர் நினைக்கின்றனர். ஆனால், தங்களை மதிக்காமல், பி.ஜே.பி தலைவர்கள் உடன் மட்டுமே தே.மு.தி.க பேசிவருவதில் அ.தி.மு.க தலைமைதான் கடுப்பாகி கழற்றிவிடப்பார்க்கிறது என்கிறார்கள். ஒருவேளை சேர்த்துக்கொண்டால், பி.ஜே.பி-யின் அழுத்தத்துக்காகச் செய்ததாகவே இருக்கும். கூட்டணி முடிந்தாலும் பின்னர் இந்தக் கட்சியினர் எல்லோரும் சேர்ந்து தேர்தல் வேலை செய்வது, ரொம்பக் கஷ்டம்தான்.’’

‘‘வாசன் ஏன் அ.தி.மு.க கூட்டணிக்குள் வரவில்லை?’’
‘‘த.மா.கா–வில் விசாரித்தால் இருவிதமாகச் சொல்கிறார்கள். ஒன்று தே.மு.தி.க–வுடன்  பேச்சுவார்த்தை இழுபறியாகிவந்ததால், இவர்களுடன் பேசமுடியாமல் போய்விட்டது. ஏற்கெனவே, ஒரு தொகுதி என்பதில் உறுதியாக இருந்தது. ஆனால், இப்போது தே.மு.தி.க கூட்டணிக்குள் வரவில்லை என்றால், கூடுதலாக ஒரு தொகுதியைக் குறிவைக்கிறது த.மா.கா.”
‘‘சரி, அ.தி.மு.க கூட்டணி எப்போதுதான் இறுதி செய்யப்படுமாம்?’’
‘‘தே.மு.தி.க-வுடன் இறுதியாகப் பேசிப் பார்ப்பார்கள். வரவில்லை என்றால், த.மா.கா–வை இழுத்துக்கொண்டு கூட்டணியை முடித்து விடுவார்கள் என்கிறார்கள்.’’

 

‘‘பிரதமர் பொதுக்கூட்ட ஏற்பாட்டில் பி.ஜே.பி அப்செட் என்கிறார்களே… உண்மையா?’’
‘‘ஆமாம், பொதுக்கூட்ட விளம்பர அறிவிப்பில் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பெயர் இடம்பெறவில்லை. பொதுக்கூட்ட மேடையிலும் அவர் பெயர் இடம்பெறவில்லை. இந்தத் தகவல் தெரிந்து நொந்துபோய்விட்டார் தமிழிசை. உடனே தன் ஆதவாளர்கள் மூலம் இவரே ஒரு ‘கட்அவுட்’ வைக்கச் சொல்லியிருக்கிறார். அதேபோல், 25 ஆயிரம் பேர் உட்கார நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஆனால், கூட்டத்தின் பின்பகுதியில் ஒன்பதாயிரம் நாற்காலிகள் காலியாகக்கிடந்துள்ளன. இதைப்பார்த்துதான் பி.ஜே.பி தரப்பு அப்செட். ‘எங்களால் கூட்டத்தைக் கூட்டமுடியவில்லை என்றுதான் உங்களிடம் பொறுப்பை ஒப்படைத்தோம். நீங்களும் இப்படிச் சொதப்பிவிட்டீர்களே என்று நேரடியாகவே சொல்லிவிட்டார்களாம்!’’
‘‘காங்கிரஸ் தலைவர்களின் முகத்தில் அதிகம் கவலை ரேகைகள் படர்ந்துள்ளனவே?’’
‘‘டெல்லியிருந்து வந்த ஓர் அறிவிப்புதான் காரணமாம். அதில், ‘காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், செயல் தலைவர்கள், தலைவர்களின் வாரிசுகள் போன்றோருக்கு சீட் வழங்க வேண்டாம் என்று ராகுல் காந்தி முடிவு செய்திருக்கிறார். புதிய முகங்கள் குறிப்பாக, இளைஞர்களுக்கு சீட் வழங்கும் முடிவை காங்கிரஸ் ‘கோர்‘ கமிட்டி எடுத்துள்ளது. தமிழகத்திலும் அதுதான் நிலை” என்று வந்த தகவலால் ‘அப்செட்’ ஆகியிருக்கிறார்கள் தலைவர்கள். குறிப்பாக திருநாவுக்கரசர், இளங்கோவன் உள்ளிட்டவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பிவருகிறார்கள்!’’
‘‘வேறு ஏதாவது சிறப்புச்செய்தி?’’
‘‘கரைவேட்டிகள் கட்சி மாறுவதுபோல, காக்கிச்சட்டை ஒருவர் அப்படியே ‘அப்ரூவர்’ ஆகப்போகிறார். தி.மு.க ஆட்சியில், சர்வ வல்லமையுடன் வலம்வந்த ஜாஃபர்சேட், சி.பி.சி.ஐ.டி பிரிவின் டி.ஜி.பி-யாக நியமிக்கப் பட்டுள்ளார். அவருக்குத் தரப்பட்டுள்ள முதல் அசைன்மென்ட், தி.மு.க எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியத்தைக் கைது செய்வதுதானாம்!’’
‘‘ஐ.டி ரெய்டு தொடர்கிறதே?’’
‘‘கோவையில் நடந்ததைச் சொல்கிறீரா… ஒரு விஷயம், உமக்கு அதிர்ச்சியாகத் தெரியும். கடந்த ஒரு வருடமாக, தி.மு.க–வினருக்குத் தொடர்புடைய வட்டாரங்களில்தான், ஐ.டி. ரெய்டு அதிகமாக நடந்தது. தேர்தல் கூட்டணிக்காகவும், இதர செலவுகளுக்காகவும் பணம் போகாதபடி முடக்குவதற்கான முயற்சி என்று பல தரப்புகளிலும் பேச்சுக் கிளம்பியது. ஆனால்,  இப்போது ஆளுங்கட்சி பினாமிகள் சிலர்மீதும் ஐ.டி ரெய்டு பாயப்போகிறது. இதற்கான காரணத்தை விரைவில் சொல்கிறேன்!’’ என்ற கழுகார், கண்சிமிட்டிப் பறந்தார்.

%d bloggers like this: