நிதானமாக சுவாசித்தால் நிம்மதி!

வாழ்க்கை முறை மாற்றத்தினால், நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகள், மன அழுத்தம், முதுகு மற்றும் கழுத்து வலி. சமீப ஆண்டுகளில், 30 வயதிற்கு உட்பட்டவர்கள், இந்தப் பிரச்னைகளோடு வருகின்றனர்.
எந்தப் பக்கமும் வளையாமல், மூங்கில் போல நேராக அமைந்துள்ள உடல் அமைப்பை, உட்காரும் போது, சரியான நிலையில் வைக்காமல் இருப்பதே, பிரச்னைக்கு முக்கிய காரணம்.

உட்காரும் போதும், நிற்கும் போதும், முன் பக்கம், பின் பக்கம் அல்லது பக்க வாட்டில் சாய்ந்து இருப்பது தவறு. பெரும்பாலான நேரங்களில், அப்படித் தான் இருக்கிறோம். முதுகிற்கு தேவையான ஆதாரத்தோடு, நிமிர்ந்து உட்காரப் பழக வேண்டும்.
கம்ப்யூட்டர் திரை, பார்வைக்கு நேர்கோட்டில் இருக்க வேண்டும். உட்காரும் நாற்காலியின் உயரம், கம்ப்யூட்டர் திரைக்கு, குறைவாக அல்லது அதிகமாக இருந்தால், குனிந்தே வேலை செய்ய வேண்டும் அல்லது கழுத்தை முன் பக்கம் நீட்டி, அண்ணாந்து பார்க்க வேண்டும்.
லேப் – டாப்பை மடியில் வைத்து, குனிந்தே பார்த்தாலும், மொபைல் போனை கழுத்தைச் சாய்த்து வைத்து பேசினாலும், கழுத்து வலி, முதுகு வலி வரவே செய்யும்.
இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதால், முதுகு வலி, கழுத்து வலி, முதுகுத் தண்டில் பிரச்னை வருவதாக, பொதுவான அபிப்ராயம் உள்ளது. உலகம் முழுவதும், இரு சக்கர வாகனம் ஓட்டுகின்றனர்.
எல்லாருக்குமா முதுகு வலி வருகிறது? நம்முடைய சாலைகள் சரியில்லை. அதனால் ஏற்படும் அதிர்வுகளால், பிரச்னை வருகிறதே தவிர, இரு சக்கர வாகனத்தால் அல்ல.
மன அழுத்தம்: வாழ்க்கை முறை மாற்றத்திற்கு ஏற்ப, நம்மை மாற்றிக் கொள்வது அவசியம். நம் அனைவருக்கும் பொருளாதார வசதி தேவை. அதில் சமரசம் செய்ய வேண்டியதில்லை.
ஆனால், எதற்காக ஓடி, ஓடி சம்பாதிக்கிறோம் என்பது புரிய வேண்டும். ஆரோக்கியம் இல்லை என்றால், சம்பாதிப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ முடியாது.
வேலை பளுவில் இருந்து தப்பிக்க, சிலர், சிகரெட் பிடிக்கின்றனர். இது காலப் போக்கில் பிரச்னையை அதிகப்படுத்துமே தவிர, மன அழுத்தத்தைக் குறைக்காது.
டென்ஷன், பதற்றம் இருக்கும் சமயத்தில், ஆழமாக மூச்சை இழுத்து விடும் பயிற்சியை, பத்து முறை செய்தால் போதும்; நிதானம் வரும்.
எதற்காக வேலை செய்கிறோம் என்பதே தெரியாமல் இருப்பதால் தான், இத்தனை, ‘கார்ப்பரேட் குருக்கள்’ நமக்குத் தேவைப்படுகின்றனர்.
‘நீங்கள் செய்யும் வேலையில் மகிழ்ச்சி இல்லாவிட்டால், அதைச் செய்யாதீர்கள்’ என்று சொல்வது எளிது. ஆனால், செய்யும் வேலையில் சில அம்சங்களையாவது நமக்கு பிடித்தமானதாக மாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம்.
டாக்டர் கே.ஸ்ரீதர், நரம்பியல் நிபுணர், சென்னை.

%d bloggers like this: