திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை?

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான 10 இடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இன்று மாலை எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற விவரம் அறிவிக்கப்பட உள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்குவது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருச்சி ஆகிய தொகுதிகளை கேட்டு காங்கிரஸ் பிடிவாதம் பிடித்ததாக தகவல் வெளியான நிலையில், நேற்று ராகுல்காந்தி முன்னிலையில் இதற்கு சுமூக தீர்வு காணப்பட்டதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் இரு கட்சிகளின் தொகுதி பங்கீட்டு குழுவினரும் 3ஆம் கட்டமாக ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். எனவே, இன்று மாலை திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு கையெழுத்தாகிறது.

இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே, 20 தொகுதிகளில் போட்டியிடும் திமுக, வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அக்கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில், திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், திமுக தேர்தல் அறிக்கையை இறுதி செய்வது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், திமுக-வின் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியுடன் தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்ட உடன், 10 தொகுதிகளுக்கான விருப்பமனுக்கள் சென்னை சத்தியமூர்த்திபவனில் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது தொகுதியாக இருந்தால் தலா 25,000 ரூபாயும், தனித் தொகுதி மற்றும் பெண்களுக்கு தலா 10,000 ரூபாயும் விருப்பமனு கட்டணமாக வசூலிக்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைமை  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் தெரிவித்தார்.

%d bloggers like this: