அடுத்தடுத்து விஜயகாந்த் வீட்டுக்கு படையெடுக்கும் விஐபிகள்.. விஷயம் சிக்கல்தான்

இரு நாட்கள் தான் ஆகியிருக்கும்.. தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்து. அதற்குள் சாலிகிராமம் இல்லத்திற்கு, இன்று வருகை தந்தார் அடுத்த விஐபி.

அந்த விஐபி வேறு யாருமல்ல, சாட்சாத் தமிழகத்தின் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமிதான்.

ராமதாஸ் வந்து சென்ற ஆச்சரியமே நீங்காத நிலையில், எடப்பாடியும் வந்ததால், ஏகத்திற்கும் குழம்பிப் போயுள்ளனர் தேமுதிக தொண்டர்கள்.

தேமுதிக

அதுதான் கூட்டணி எல்லாம் முடிந்துவிட்டதே? அதிமுகவில் நான்கு தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இன்னும் எதற்காக வரிசையாக விஜயகாந்த் வீட்டுக்கு பெரும் புள்ளிகள் படை எடுக்கிறார்கள்? என்று தலையை பிய்த்துக் கொண்டுள்ளனர் அந்த கட்சியினர். புருவத்தை சுறுக்கி நாமும் இதுபற்றிதான் யோசித்தோம். இது தொடர்பாக தேமுதிக வட்டாரத்தில் விசாரித்தோம்.

பிடிவாதம்

தகவல் இதுதான்.. என்னதான் தொகுதி பங்கீடு முடிவடைந்துவிட்டாலும், அதிமுக கூட்டணியில், எந்தெந்த கட்சிகள், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை. இவ்வாறு பட்டியல் வெளியாகாமல் இருப்பதற்கு முக்கிய தடையாக இருப்பது தேமுதிக பிடிவாதம்தான். கூட்டணிக்கு வருவார்களா இல்லையா என்பதை கடைசி வரை காத்திருக்க வைத்து முடிவு எடுத்த தேமுதிக, இப்போது ஒரே ஒரு தொகுதிக்காக தொகுதிப் பட்டியல் வெளியிடுவதையும் தள்ளிப்போட ஒரு காரணமாக மாறி போயுள்ளதாம்.

கள்ளக்குறிச்சி

அந்தத் தொகுதியின் பெயர் கள்ளக்குறிச்சி. இந்த தொகுதி தொடர்பாக பாமக மற்றும் தேமுதிக இடையே பெரும் பஞ்சாயத்து நடந்து கொண்டுள்ளது. இரு கட்சிகளுமே அந்த தொகுதி தங்களுக்கு மிகவும் பலமான தொகுதி என்று, ஏனோ ரொம்பவே நம்புகின்றனர். எனவேதான் அத்தொகுதியை தங்களுக்கு ஒதுக்குமாறு பாமக மற்றும் தேமுதிக தலைமை, அதிமுக தலைமைக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது.

முதல்வர்

பிரேமலதாவின் பிடிவாதம் தெரிந்ததால்தான், ராமதாசை நேரடியாக விஜயகாந்த் இல்லத்துக்கு சென்று, கள்ளக்குறிச்சி தொகுதி பாமகவுக்கு வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. ஆனால், யார் வந்தால் எங்களுக்கு என்ன? என்ற மனநிலையில் உள்ள பிரேமலதா மற்றும் சுதீஷ் இருவரும், கள்ளக்குறிச்சியை கனவிலும் விட்டுத்தர முடியாது என்று அதிமுக தலைமையிடம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான் சமாதான தூதுவராக இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விஜயகாந்தை சந்தித்து சென்றதாக கூறப்படுகிறது.

வாங்க பழகலாம்

மேலும், ஏற்கனவே அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி, தங்களை சந்தித்து நலம் விசாரிக்கவில்லை என்று வருத்தம் பிரேமலதாவுக்கு இருந்துள்ளது. இவ்வாறு இறுக்கம் இருந்தால் தேர்தலின்போது இரு கட்சி தொண்டர்களும் இணக்கமாக செயல்பட மாட்டார்கள் என்பதால், இந்த இறுக்கத்தை தளர்த்துவதற்காகவும் எடப்பாடி பழனிசாமி இன்று விஜயகாந்த இல்லத்திற்குச் சென்று உள்ளார்.

தாமதமாகும் பட்டியல்

ஆனால் பிரேமலதா பிடிவாதம்தான் தமிழகத்துக்கே தெரியுமே. இதுவரை கள்ளக்குறிச்சி தொடர்பாக எந்த ஒரு கிரீன் சிக்னலையும், அதிமுக தலைமைக்கு தேமுதிக தரவில்லை. இதனால், திமுக கூட்டணி தங்களது தொகுதி பட்டியலை வெளியிட்ட பிறகும் கூட, அதிமுகவால் இன்னும் தொகுதிகளின் பெயர் பட்டியலை வெளியிட முடியவில்லை என்று அந்த கட்சி தகவல்கள் தெரிவிகின்றன.

%d bloggers like this: