எலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’

முற்றிலுமாக மூடிமறைக்க நினைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வீடியோ விவகாரம் பற்றியெரியத் தொடங்கிவிட்டது. கட்டுக்கடங்காத காட்டுத்தீ போல கைபேசியிலும் கணினியிலும் பரவிய இந்த விவகாரம், தமிழகத்தையே கொதிப்படைய வைத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி, கமல்ஹாசன் வரை அனைத்து அரசியல் தலைவர்களும் பேட்டி, அறிக்கை, மனு என்று பொங்கிவிட்டனர். பொள்ளாச்சிக்கே சென்று போராட்டம் நடத்தி, பொதுமக்கள் மத்தியில் ஆவேசம் காட்டினார், கனிமொழி. உண்மைக் குற்றவாளிகளைத் தப்பவிடக் கூடாது என்று மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

பொள்ளாச்சி விவகாரம் பற்றி விளக்கம் அளிக்கும்படி, தமிழக அரசுக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ‘தேவைப்பட்டால், பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களை விசாரிப்போம்’ என்று கூறியுள்ளார், மாநில மகளிர் ஆணையத் தலைவர் கண்ணகி. ‘நிர்பயா விவகாரத்தைப் பெரிதுபடுத்திய தேசிய ஊடகங்கள், பொள்ளாச்சி விவகாரத்தை சிறிதும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது’ என்று உயர் நீதிமன்ற நீதிபதிகளே வேதனைப்படும் அளவுக்கு, இந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குற்றவாளிகளைக் கைதுசெய்து குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளியதும், ஓரிரு நாள்களில் எல்லாம் அடங்கிப்போகும் என்று காவல்துறை நினைத்தது, நிறைவேறவில்லை.
அரசியல் மற்றும் சமூகரீதியான எதிர்ப்புகள் காரணமாக, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றிய தமிழக அரசு, சி.பி.ஐ விசாரணைக்கும் பரிந்துரைத்துவிட்டது. வழக்கை சி.பி.ஐ ஏற்குமா இல்லையா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இதற்கிடையில், ஐ.ஜி ஸ்ரீதர் தலைமையில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் தங்களது விசாரணையை பொள்ளாச்சியில் தொடங்கிவிட்டனர். அதற்கு முந்தைய நாள் இரவிலேயே ‘மஃப்டி’ உடையில் இருந்த போலீஸார் சிலர், எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் சின்னப்பம்பாளையம் மற்றும் மாக்கினாம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசுவின் வீடுகளில் அதிரடி ஆய்வு நடத்தியுள்ளனர். அவர்கள் உள்ளூர் போலீஸா, சி.பி.சி.ஐ.டி போலீஸா, கதவை உடைத்துச் சென்ற இவர்கள் என்னென்ன ஆதாரங்களை அங்கிருந்து எடுத்துச்சென்றனர் என எந்த விவரமும் தெரியவில்லை.

 

சி.பி.ஐ இந்த வழக்கை எடுத்தாலும், அவர்களுக்கு எந்தவோர் ஆதாரமும் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே, போலீஸார் இத்தனை அவசரமும் ஆத்திரமும் காட்டுகின்றனரோ என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. இந்த விவகாரத்தில், மற்றவர்களைவிட கோவை எஸ்.பி பாண்டியராஜன், டி.எஸ்.பி ஜெயராம் ஆகியோர் மீதுதான் எக்கச்சக்கமான புகார்கள் வாசிக்கப்படுகின்றன. இந்த வழக்கில், முதல் குற்றவாளியே எஸ்.பி பாண்டியராஜன்தான் என்று, தி.மு.க–வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-வான அப்பாவு பகிரங்கமாகவே குற்றம்சாட்டியுள்ளார். இந்தப் பிரச்னை இவ்வளவு பெரிதாக விஸ்வரூபமெடுத்துள்ள நிலையிலும், தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் கொடுக்கவந்த ஒரு பெண்ணை நாள் முழுவதும் அலைக்கழித்துத் திருப்பி அனுப்பியுள்ளனர், பொள்ளாச்சி பெண் போலீஸார். மொத்தமாக விவகாரத்தை மூடி மறைக்க போலீஸார் முயற்சி செய்வதிலிருந்தே, இதில் ஆளும்கட்சியினருக்குத் தொடர்பு இருக்கும் என்கிற சந்தேகம் வலுத்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து விவரமறிந்த கோவை போலீஸ் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ‘‘சி.பி.ஐ இந்த வழக்கை எடுக்கும்பட்சத்தில், முதலில் விசாரிக்கப்பட வேண்டியவர், கோவை எஸ்.பி பாண்டியராஜன்தான். அவருடன் பொள்ளாச்சி டி.எஸ்.பி ஜெயராம், இன்ஸ்பெக்டர் நடேசன், எஸ்.ஐ ராஜேந்திரபிரசாத், எஸ்.எஸ்.ஐ ரகு ஆகியோரையும் விசாரிக்க வேண்டும். இவர்கள்தான், இந்த வழக்கில் உண்மைக் குற்றவாளிகளைத் தப்பவைக்கவும், வழக்கை சுத்தமாக மூடிமறைக்கவும் திட்டமிட்டுப் பல வேலைகளைச் செய்துவருகின்றனர்.

இந்த பாலியல் கொடூரக் கும்பலைச் சேர்ந்த சிலரைத் தப்பிக்கவைக்கவே, சாதாரண அடிதடி வழக்கைப் போட்டு, அவர்களுக்கு உடனே பிணை வழங்கியதுதான், இதில் முதல் நடவடிக்கை. அடுத்து பாலியல் துன்புறுத்தல் வழக்கில், கைதான நான்கு பேரையும் ‘போலீஸ் கஸ்டடி’ எடுத்து விசாரிக்காமலே, அவர்கள்மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தது. போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரித்திருந்தால், இதில் வேறு யார் யாருக்குத் தொடர்பு இருக்கும் என்பது தெரியவந்திருக்கும். திருநாவுக்கரசு கைதாவதற்கு முன்பு ஆடியோவில் பரப்பிய தகவலில், ‘பலருக்குத் தொடர்பு இருக்கிறது’ என்று சொன்னதுபற்றி எந்த விசாரணையுமே நடத்தப்படவில்லை.

கனிமொழி தலைமையிலான போராட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்காகப் பொள்ளாச்சிக்கு வந்த எஸ்.பி., இந்த வழக்குப் பதிவான நாளிலிருந்து 15 நாள்களாகியும் பொள்ளாச்சிப் பக்கம் எட்டிப்பார்க்கவே இல்லை. ‘நான்கே நான்கு வீடியோக்கள்தான்  உள்ளன’ என்று பத்திரிகையாளர்களிடம் எஸ்.பி சொன்னார். ஆனால், இப்போது மேலும் சில வீடியோக்கள் வெளியாகியுள்ளன. எனில், அவர் சொன்னது அப்பட்டமான பொய் என்பது உறுதியாகிவிட்டது. இதனால், இவர்கள் இன்னும் எத்தனை வீடியோக் களைப் பறிமுதல் செய்துள்ளனர், எத்தனை பெண்கள் பாதிக்கப் பட்டுள்ளனர், கைதானவர்களைத் தவிர வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று பல கேள்விகள் எழுகின்றன. எதையுமே விசாரிக்காமல், ஓராண்டுக்கு வெளியில் வராத வகையில் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ததற்கு, நீதிமன்றத்தில் போலீஸார் பதில் சொல்லியே தீரவேண்டும்.

பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிடக்கூடாது என ஊடகங்களுக்கே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், எஸ்.பி வெளியிட்ட செய்திக்குறிப்பில் மட்டுமன்றி, சி.பி.ஐ விசாரணைக்குப் பரிந்துரைப்பது தொடர்பான தமிழக அரசின் அரசாணையிலேயே அந்தப் பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தமிழக அரசே அப்பட்டமாக மீறியிருக்கிறது. இது, பாதிப்புக்குள்ளாகி, இதுவரை புகார் தராத மற்ற பெண்களை மறைமுகமாக மிரட்டும் செயல். இதை நீதிமன்றமே சுயமாக எடுத்து விசாரிக்கவும் வாய்ப்பு உண்டு. வழக்கை, சி.பி.ஐ விசாரணைக்கு எடுக்கத் தாமதிக்கும்பட்சத்தில், இந்த வழக்கின் எல்லாத் தடயங்களும் அழிக்கப்படவும் உண்மைக் குற்றவாளிகள் தப்பித்துவிடவுமே வாய்ப்புகள் அதிகம்’’ என்றார்கள்.

காவல்துறை நடவடிக்கைகள், கடும் கண்டனத்துக்குள்ளாகிவரும் நிலையில், பாலியல் வன்கொடுமை தொடர்பாக புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனைத் தாக்கிய ‘பார்’ நாகராஜுக்குச் சொந்தமான ‘பார்’ அடித்து நொறுக்கப்பட்டது. பொதுமக்களிடம் இந்தக் கும்பலைச் சேர்ந்த யார் சிக்கினாலும் அவர்கள் தப்புவது சிரமம் என்கிற அளவில், பொள்ளாச்சி மக்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர். இந்தக் கோபம், தேர்தலிலும் எதிரொலிக்கும் என்ற அச்சம், ஆளுங்கட்சிக்கு உருவாகியுள்ளது. தங்களுக்கு சாதகமான பகுதி என்று நினைத்த கொங்கு மண்டலத்தில், வாக்குவங்கியைக் காலிசெய்யும் அளவுக்கு, இந்தப் பிரச்னை பெரிதாக வெடித்திருப்பது, அ.தி.மு.க தலைமையை நிலைகுலைய வைத்துள்ளது. 

அதேநேரத்தில், இந்த விவகாரத்தை இவ்வளவு பெரிதாக வெடிக்க வைத்திருப்பதற்கு, ஆளும்கட்சிக்குள் இருக்கும் அதிகார மோதலும் முக்கியக் காரணம் என்கிற பேச்சும் கிளம்பியுள்ளது.

இதுபற்றி அ.தி.மு.க பிரமுகர்கள் சிலர், ‘‘இந்த விவகாரத்தில், நகராட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்த ‘உயர்ந்த மனிதன்’ என்று அழைக்கப்படும் நபர், சிறுபான்மைப் பிரிவில் பொறுப்பிலுள்ள ஒருவர், நாகராஜ் நடத்தும் ‘பார்’களை உள்குத்தகைக்கு விட்டவர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலருக்கும் இந்தக் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. இவர்களில் சிலரது முகநூல் பக்கங்கள் திடீரென மூடியிருப்பதே இதை உறுதிப்படுத்துகிறது. ஆனால், கைதான நான்கு பேருக்கும், பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களுக்கும் என்ன தொடர்பு என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

 

ஆனால், இப்போதைக்கு வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப் பரிந்துரைத்திருப்பதன் மூலமாக, பிரச்னை பந்தை மத்தியில் ஆளும் பி.ஜே.பி–யின் பக்கம் தள்ளிவிட்டுள்ளனர். வழக்கு விசாரணையை மட்டுமன்றி, பொள்ளாச்சித் தொகுதியையே பி.ஜே.பி–க்குத் தள்ளிவிடவும் முயற்சி நடக்கிறது. ‘பொள்ளாச்சி ஜெயராமனின் ஆதரவாளர் மகேந்திரனுக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது. ஜெயராமனின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவுகட்ட வேண்டும்’ என்ற நோக்கத்துடன் ஆளும்கட்சியைச் சேர்ந்த இரண்டு ‘பவர்ஃபுல்’ வி.ஐ.பி–க்கள்தான் மறைமுகமாகக் காய்நகர்த்தி வருகின்றனர். இவர்கள் யார் என்பது ஜெயராமனுக்கும் தெரியும். ஏற்கெனவே அமைச்சர் பதவி, சொந்த மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் பதவி எனப் பலவற்றையும் விட்டுக்கொடுத்துப் பொறுமை காத்துவந்தார் ஜெயராமன். தற்போது, இந்த ஃபேஸ்புக் வீடியோ விவகாரத்தை வைத்து, தன் மகன்களையும் தன்னையும் காலிசெய்துவிட சிலர் நினைப்பதை அறிந்து கொந்தளிப்பில் இருக்கிறார்!’’ என்றனர்.

இதுபற்றி பி.ஜே.பி தரப்பில் சிலரிடம் நாம் பேசியபோது, ‘‘பொள்ளாச்சித் தொகுதியை வானதி சீனிவாசனுக்குத் தருவதற்காக ஒரு ‘மூவ்’ நடப்பது உண்மைதான். ஆனால், பொள்ளாச்சி ஜெயராமன் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. பாலியல் விவகாரத்தில் அவரின் மகன்களின் பெயர் தொடர்ந்து அடிபடுகிறது. இதை வைத்து, தன் மகன்கள் மீது வழக்குகளைப் பாய்ச்சினால், அந்த ஃபேஸ்புக் வீடியோ கும்பலுடன் தொடர்பிலிருக்கும் அ.தி.மு.க புள்ளிகள் பலருடைய ரகசியங்களையும் எடுத்துவிட்டு, கட்சியைக் காலிசெய்யும் அளவுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பு, ஆளுங்கட்சி மேலிடத்தையே மிரட்டிக்கொண்டிருக்கிறது. இதனால், இந்த விவகாரத்தை எப்படிக் கையாள்வது என்று எடப்பாடி பழனிசாமி கையைப்பிசைந்துகொண்டிருக்கிறார்!’’ என்றனர்.

இந்த விவகாரம், கொங்கு மண்டலத்தில் மட்டுமன்றி, தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் இளம் தலைமுறையினரின் வாக்குகளை, அ.தி.மு.க–வுக்கு எதிராகத் திருப்பிவிடும் என்ற அச்சம், அ.தி.மு.க தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. கட்சியின் வாக்குவங்கியை ‘என்கவுன்டர்’ செய்யும் இந்த விவகாரத்திலிருந்து தப்பிப்பதற்கு, எலெக்‌ஷனுக்கு முன்பாகவே ஒரு என்கவுன்டரை அ.தி.மு.க தலைமை திட்டமிட்டிருப்பதாகவும் போலீஸ் வட்டாரத்தில் தகவல் பரவியுள்ளது. அது, கட்சியிலிருந்து முக்கியத் தலைகளைக் காலி செய்வதா, குற்றவாளிகளின் வாயை நிரந்தரமாக மூடுவதா என்பதுதான் போலீஸாருக்கே புரியாத மர்மமாக இருக்கிறது.  

%d bloggers like this: