தமிழ்நாட்டின் பணக்காரக் கட்சியான தி.மு.க!’ – அ.தி.மு.க-வுக்கு என்ன இடம்?

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் இந்தியா முழுவதும் கூட்டணிகளை முடிவு செய்துவிட்டு, தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தையையும் முடித்து, தேர்தல் பிரசாரத்துக்குச் செல்லத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் கட்சிகளை நடத்துவதற்கு பெரும் பொருளாதார பலம் தேவை. பொருளாதாரத்தைக் கையாள, கட்சிகள் தங்களுக்கு வரும் நன்கொடைகளைப் பயன்படுத்திக்கொள்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் தங்கள் கட்சிகளின் வரவு – செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி.

இதில் தேசியக் கட்சிகள் என அங்கீகாரம் பெற்றக் கட்சிகளும் மாநிலக் கட்சிகள் என அங்கீகாரம் பெற்றக் கட்சிகளும் ஒவ்வோர் ஆண்டும் தேர்தல் ஆணையத்தில் வரவு – செலவுக் கணக்குகளைத் தாக்கல் செய்து வருகின்றன.

இந்தியத் தேர்தல்களைக் கண்காணிக்கும் தன்னார்வ நிறுவனமான ஜனநாயகச் சீர்திருத்தத்துக்கான சங்கம் (Association for Democratic Reforms) தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களை ஆய்வு செய்து, அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உத்தரப்பிரதேசத்தில் இயங்கும் சமாஜ்வாடி கட்சி அதிக வருமானம் ஈட்டியுள்ளது. தேசிய அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருப்பது, தமிழ்நாட்டில் முக்கியக் கட்சிகளில் ஒன்றான திராவிட முன்னேற்றக் கழகம். இதன் மூலம், தி.மு.க. தமிழ்நாட்டில் அதிக வருமானம் ஈட்டியக் கட்சியாக உருவெடுத்துள்ளது. 

மாநிலக் கட்சிகளின் வரவு செலவு கணக்கு - தி மு க இரண்டாமிடம்

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சிகள் என்று எடுத்துக்கொண்டால், தி.மு.க, அ.இ.அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகளைக் குறிப்பிடலாம், ஆளுங்கட்சியான அ.இ.அ.தி.மு.க 2016-17-ம் ஆண்டில் 48.8 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருந்தது. தற்போது அது வெகுவாகக் குறைந்து, 12.7 கோடி ரூபாயாகச் சுருங்கியுள்ளது. தி.மு.க-வின் 2016-17-ம் ஆண்டு வருமானம் 3.7 கோடி ரூபாய். தற்போது அது பல மடங்கு உயர்ந்து 35.7 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

பா.ம.க-வைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு ஈட்டிய வருமானத்திற்கும் அதிகமாகச் செலவு செய்துள்ளது. 1.1 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது. செலவுத் தொகையாக 1.2 கோடி ரூபாயைப் பதிவு செய்துள்ளது. மற்ற மாநிலக் கட்சிகளைவிட, தே.மு.தி.க மிகக்குறைவான வருமானத்தையே பெற்றுள்ளது. 

இந்தியா முழுவதும் 48 கட்சிகள் மாநிலக் கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 11 கட்சிகள் தங்களின் வரவு-செலவுக் கணக்குகளைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவில்லை. 20 கட்சிகள் மட்டுமே, அறிவிக்கப்பட்டிருந்த இறுதி நாளுக்கு முன், தங்கள் கணக்குகளைச் சமர்ப்பித்தன. தமிழ்நாட்டின் தே.மு.தி.க அறிவிக்கப்பட்ட  நாளுக்குப் பின் ஒருநாள் தாமதமாக கணக்கைச் சமர்ப்பித்துள்ளது.

மாநிலக் கட்சிகளின் வரவு செலவு கணக்கு

தற்போதுவரை, 37 மாநிலக் கட்சிகள் தங்கள் கணக்குகளைத் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளன. இவற்றுள் பெரும்பாலான கட்சிகள், தங்களின் வருமானமாக நன்கொடை, சந்தா, வங்கியில் இருந்து பெறப்படும் வட்டி ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளன; செலவுக்கான காரணங்கள் என நிர்வாகச் செலவுகளும், தேர்தல் தொடர்பான செலவுகளும் பெரும்பாலான கட்சிகளால் வெளியிடப்பட்டுள்ளன.

தேசியக் கட்சிகளைப் போன்று, மாநிலக் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கத் தேர்தல் அறக்கட்டளைகள் பயன்படுத்தப்படவில்லை. எனினும், `கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்களின் விவரங்கள், வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்; கட்சிகளின் நிதி பற்றிய ஆவணங்கள், தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும்’ என ஜனநாயகச் சீர்திருத்தத்துக்கான சங்கம் பரிந்துரை செய்துள்ளது.

%d bloggers like this: