தொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பு : அதிமுக கூட்டணியில் குடுமிப்பிடி சண்டை

அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதைத்தொடர்ந்து நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள், அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களாக யாரை நிறுத்தலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிது.

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜ, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதன்படி மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கிவிட்டு 20 இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கப்பட்டாலும், இந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி ஒதுக்குவது என்பதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோட்டை கேட்டு பாஜவும், கள்ளக்குறிச்சியை கேட்டு பாமகவும் அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இது சம்பந்தமாக நேற்று முன்தினம் பாமக தலைவர் ராமதாஸ் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது வீட்டிலே நேரடியாக சந்தித்து பேசினார். ஆனாலும், கள்ளக்குறிச்சி தொகுதியை தேமுதிக பாமகவுக்கு விட்டுக்கொடுக்க மறுத்து விட்டது. இந்த இழுபறி இன்றைக்குள் முடிவுக்கு வந்துவிடும் என்று அதிமுக தலைமை நம்புகிறது.

அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கும் பணி இன்று முடிவடையலாம் என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் பட்டியலை அதிமுக நாளைதான் வெளியிட வாய்ப்புள்ளது. இந்நிலையில், நாளை (ஞாயிறு) காலை 10.30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இந்த கூட்டத்தில், மக்களவை தேர்தலில் அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள் மற்றும் 18 தொகுதிக்கான இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக போட்டியிட வைக்கலாம் என்பது குறித்து ஆலோசனை செய்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்த கூட்டம் முடிந்ததும் நாளை (ஞாயிறு) அல்லது நாளை மறுதினம் (திங்கள்) அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிடவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

காரணம், வருகிற 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் தேதிக்கு இன்னும் ஓரிரு நாள்தான் உள்ளதால் வேட்பாளர் பட்டியலை வெளியிட அதிமுக வேகம் காட்டும் என்று கூறப்படுகிறது. ஆனாலும், திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு அதிமுக சார்பில் வெளியிடலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. அடுத்து, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் என யாரும் இதுவரை தேர்தல் பிரசாரத்தை தொடங்கவில்லை. அதுகுறித்தும் முடிவு செய்ய வேண்டிய வேலை அதிமுக கட்சி தலைமைக்கு உள்ளது. அடுத்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் எந்தெந்த தேதிகளில் பிரசாரம் செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்த வேண்டும். இப்படி பல வேலைகள் உள்ளதால் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியல், வேட்பாளர் பட்டியலை விரைவில் அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அதிமுக தலைமை தள்ளப்பட்டுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

%d bloggers like this: